பிரதமர் மோடி மீது திமுக பரபரப்பு புகார்… அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையருக்கு அழுத்தம்..!!

Author: Babu Lakshmanan
19 March 2024, 4:38 pm

பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணி தொடர்பாகவும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது திமுக சார்பில் புகார் மனு தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில், கோவையில் நேற்று நடைபெற்ற பிரதமரின் வாகன பேரணியின் போது பள்ளி மாணவர்களை பயன்படுத்தியது தொடர்பாகவும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் மதத்தின் பெயரில் ஓட்டு சேகரித்தது தொடர்பாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தார்.

இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது ;- திமுக சார்பாக இரண்டு புகார்கள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மதத்தின் பெயரால் ஓட்டு சேகரித்துள்ளார்.

“கோவில்களை அழிக்கக்கூடிய, கோவில்களையே சுரண்டக்கூடிய மதத்தையே அழிப்பேன் எனக் கூறிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுகிறீர்கள்” என நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார்.

தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக் கூடாது என கூறுகிறது ஆனால் அதை மீறி வேண்டுமென்றே நிர்மலா சீதாராமன் அப்படி ஒரு பேச்சைப் பேசியிருக்கிறார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக் கூடாது என்றும் மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் நிர்மலா சீதாராமன் மீறி இருக்கிறார். இந்த சட்டம் மீறல்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம், பரிசளித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி கூறி இருக்கிறார்.

அதேபோல, பிரதமர் நேற்று கலந்து கொண்ட வாகன பேரணியில் பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்டு அங்கே அவர்களுக்கு காவி துண்டுகள் போடப்பட்டு பாஜகவை புகழ்ந்து பாடல்கள் எல்லாம் பாடி இருக்கிறார்கள். குழந்தைகளை எந்தவித தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், பாஜக தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று காட்டுவதற்காக தேர்தல் நடத்தை விதியை மீறி இருக்கிறது.

மேலும் குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டத்தின் படி குற்றமாகும். இதை ஏற்பாடு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கிறோம். தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை இருக்கிறது, என கூறினார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 241

    0

    0