திமுக – காங்., திடீர் உரசல்… பேச மறுக்கும் ஸ்டாலின்…? ராகுலுக்காக ‘வாய்ஸ்’ கொடுப்பாரா…? எதிர்பார்ப்பில் தமிழக நிர்வாகிகள்..!!

Author: Babu Lakshmanan
3 September 2022, 6:40 pm

நெருப்பின்றி புகையாது என்பார்கள். அதுபோல அண்மையில் தமிழக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி இருப்பது குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கும் ஒரு பெரும் பின்னணி இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுதந்திரம் இல்லை

இரு தினங்களுக்கு முன்பு கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் ஆளும் கட்சியோடு நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் அரசாங்கத்திலே எங்களுக்கு இடம் கிடையாது. ஆளும் கட்சியோடு நாங்கள் ஒத்துப்போக வேண்டும். ஏனென்றால் நாங்கள் அவர்களோடு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தில் இடம் பெறாமலும், எதிர்க்கட்சியாகவும் எங்களால் செயல்படுவது கடினமாக இருக்கிறது.

Karthi Chidambaram - Updatenews360

இதனால் மக்களின் பிரச்சினைகளை எங்களால் சரியான முறையில் எடுத்துக் கூற முடிவதில்லை. இது விசித்திரமான சூழல்தான். இதுபோன்ற நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது யார் தலைவராக இருந்தாலும் எங்களுக்கு இந்த தர்ம சங்கடமான நிலை இருக்கத்தான் செய்யும்” என்று தனது மனக்குமுறலை கொட்டியிருந்தார்.

பாதயாத்திரை

அவர் இப்படி கூறிய நிலையில்தான், வரும் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான ‘பாரதமே ஒன்றிணைவோம்’ என்னும் பாத யாத்திரையை ராகுல் தொடங்க இருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார் படுத்தவும், கட்சி தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் இந்த நடைபயணத்தை அவர் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யாத்திரையை, கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து தொடங்கும் ராகுல் 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக, 50 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, காஷ்மீரை அடைய வேண்டும் என்பதை திட்டமாக வகுத்துள்ளார்.

rahul_gandhi_updatenews360

இதற்காக 7-ம் தேதி காலை சென்னை வரும் அவர் முதலில் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பிறகு அங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் ராகுல் மாலையில் பாத யாத்திரையை தொடங்குகிறார்.

தர்மசங்கடம்

இந்நிலையில்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, சட்டப்பேரவை காங்., தலைவர் செல்வப் பெருந்தகை, தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது கன்னியாகுமரியில் ராகுலின் பாத யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற அழைப்பும் விடுத்தனர். அதற்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை உடனடியாக மகிழ்ச்சியுடன் ராகுலிடம் அழகிரி பகிர்ந்து கொண்டும் உள்ளார்.

ஆனால் அடுத்த ஓரிரு நாட்களில் கே எஸ் அழகிரிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், அப்போது ஸ்டாலின் தரப்பில் இருந்து அழகிரியை தொடர்பு கொண்ட ஆளும் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர், ‘முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொண்டையில் அலர்ஜி உள்ளது. அதனால் பொதுக் கூட்டங்களில் பேசுவதை தவிர்க்கும்படி டாக்டர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். எனவே, பாதயாத்திரையை மட்டும் ஸ்டாலின் தொடங்கி வைப்பார். பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க இயலாத நிலை உள்ளது’ என்று கூறியிருக்கிறார்.

இதுதான், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை ராகுலிடம் தெரிவிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர்.

காங்கிரஸ் அதிருப்தி

அதேநேரம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை வருகிற 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று ஸ்டாலின் சென்னைக்கு வரவழைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பது மேலிட காங்கிரஸ் தலைவர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

திமுக அரசு சார்பில் கெஜ்ரிவால் தமிழகத்தில் 26 சிறப்புப் பள்ளிகளையும்,
15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கி வைப்பதற்காக வருவதாக கூறப்பட்டாலும்
கூட காங்கிரஸ் இதை அரசியல் ரீதியாக பார்க்கிறது.

Kejriwal_UpdateNews360

இதனால் காங்கிரஸ் தலைவர்களில் சிலர் கொந்தளிப்புக்கும் உள்ளாகி இருக்கின்றனர்.

அவர்கள் ஆவேசத்துடன் கூறும்போது, “கெஜ்ரிவால் ஏற்கனவே டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரசை தோற்கடித்து கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி விட்டார். அடுத்து குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கும் வேளையில் அங்கும் ஆம் ஆத்மி ஊடுருவுகிறது.

2024 தேர்தலில் சில மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரசுக்கு இருக்கும் வாய்ப்பை கெஜ்ரிவால் திட்டமிட்டு பறிக்க முயற்சிப்பதுடன் பாஜகவுக்கு மறைமுகமாக உதவுகிறார் என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுகிறது.

அவர் மீது காட்டும் பாசத்தை திமுகவுடன் நீண்டநாள் கூட்டணியில் உள்ள எங்கள் மீது திமுக காட்டத் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. எங்களுக்கு உரிய மரியாதை தராவிட்டாலும் கூட பரவாயில்லை, ராகுல் காந்திக்காவது அதை திமுக தரலாம். மாறாக உடல்நலத்தை காரணம் காட்டி, ராகுலின் பாத யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் மறுத்திருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனை தருகிறது. கருணாநிதி சிலை திறப்பு விழா, ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவிற்கெல்லாம் அழைத்தவுடன் ஓடோடி ராகுல். வந்தார். ஆனால், ராகுலின் அரசியல் வாழ்வில் மட்டுமல்ல. இக்கட்டான காலகட்டத்தில் உள்ள காங்கிரசுக்கும் மிக முக்கிய நிகழ்வான பாத யாத்திரையை தொடங்கி வைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பது, எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர்கள் கோபம் கொப்பளிக்க கூறுகின்றனர்.

வேறு வழியில்லை

“தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த திமுக வேறு, தற்போதுள்ள திமுக வேறு என்பதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“பாரதமே ஒன்றிணைவோம் பாத யாத்திரையை, ராகுல் நடத்துவதே முழுக்க முழுக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக வேண்டும் என்கிற நோக்கத்தில்தான். அதை திமுக தலைமை நன்றாகவே உணர்ந்துள்ளது.

அதேநேரம் தேசிய அளவில் தனது தலைமையில் ஒரு கூட்டணியை முன்னெடுக்கலாமா? என்ற சிந்தனையும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் தீவிரமாக உள்ளது. அதற்காகத்தான் திராவிட மாடல் ஆட்சி இந்த நாட்டிற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று அவ்வப்போது ஸ்டாலின் பேசியும் வருகிறார்.

இதனால்தான் மம்தா, கெஜ்ரிவால், பினராயி விஜயன், சந்திரசேகர ராவ் போன்ற முதலமைச்சர்களிடம் அவர் நெருங்கிய தொடர்பிலும் இருக்கிறார்.

stalin-ks-alagiri-updatenews360

ஒருவேளை தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுவிட்டால் தங்கள் கட்சியும் பிரதமர் பதவியை கோர முடியும் என்ற எண்ணத்தில் திமுக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் ராகுலின் பாதயாத்திரையை ஸ்டாலின் தொடங்கி வைக்க ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம்.

பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று பேசினால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க வேண்டிய நெருக்கடியும் காங்கிரஸ் தலைவர்களால் அவருக்கு ஏற்படலாம். அதைத் தவிர்ப்பதற்காக கூட காங்கிரசின் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க மறுத்திருக்க வாய்ப்பும் உள்ளது. அதேநேரம், பொதுக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க நேர்ந்தால், ராகுலின் நடை பயணத்திற்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் சாமர்த்தியமாக கூறி ntஸ்டாலின் நழுவி விடுவார்.

ராகுலின் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்ள மறுப்பதற்கான காரணத்தை வெளிப்படையாக விமர்சிக்க முடியாத நிலையில்தான், கார்த்தி சிதம்பரம் எம்பி தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவருக்கு தர்மசங்கட சூழல் இருக்கிறது என கருத்து தெரிவித்து இருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது. ஆனால் இதில் தமிழக காங்கிரஸ் தலைவர்களான கே எஸ் அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் போன்றவர்களால் அதிருப்தியை வெளிக்காட்ட முடியாது.

ஏனென்றால் 2024 தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது. அப்போது திமுக 5 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கும் என்று கூறப்படும் நிலையில் அதற்கும் ஆபத்து வந்து விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைத்து மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிகிறது. அதைத்தான் ஊடகங்களிடம் கார்த்தி சிதம்பரம் பூடகமாக போட்டு உடைத்துவிட்டார். மனதில் பட்டதை அவர் பேசுபவர் என்பதால் இந்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதனால் திமுக காங்கிரஸ் இடையே உரசல் ஏற்பட்டிருப்பதும் உண்மையே!” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வருகிற 7-ம் தேதி ராகுல் பாதயாத்திரை தொடங்கும்போது
நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசுவாரா? மாட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 426

    0

    0