புதுவையில் திமுக ஆட்சி…? காங்கிரசை கவலையில் மூழ்க வைத்த CM ஸ்டாலின்… கூட்டணி முறிகிறதா…?

Author: Babu Lakshmanan
12 December 2022, 8:21 pm

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும், புதுவையிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமையுமா? அல்லது காங்கிரஸ் கழற்றி விடப்படுமா?…என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.

திமுக தான் தேர்வு

இதற்கு முக்கிய காரணம் பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக கட்சிகளை திமுக தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் விதமாக காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுவதுதான்.

Nellai KS Alagiri Byte - updatenews360
mupra;

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு மற்றும் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை போன்றோர் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதுதான் காங்கிரசுக்கு நல்லது என்பதில் மிக உறுதியாக இருக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினையும், திமுக அரசையும் எப்போதும் புகழ்ந்து பேசி வருகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.

என்றபோதிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகத்தான் உள்ளது.

புதுச்சேரியிலும்…

இந்த நிலையில்தான் புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமாரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இரு மாநில காங்கிரஸ் தலைவர்களும் மிகுந்த அதிர்ச்சி அடையும் விதமாக ஒரு குண்டைத் தூக்கி போட்டு இருக்கிறார்.

அவர் பேசும்போது, “புதுச்சேரி மாநிலத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. திராவிட இலக்கியத்தின் தலைநகரம் என புதுச்சேரியை கூறலாம்.

ஆளுநர் ஆட்டிபடைக்கும் வகையில் புதுச்சேரியில் ஆட்சி நடப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? அடங்கி ஒடுங்கி போகும் ஆட்சி இங்கு நடக்கிறது. இது புதுச்சேரிக்கு இழுக்கு. ஏதாவது நன்மை நடந்துள்ளதா? இச்சூழலில் புதுச்சேரியில் திமுக ஆட்சி வர மக்கள் விரும்புகிறார்கள்.

இந்த ஆட்சியால் தற்போது மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இங்கே மதவாத ஆட்சி ஏற்பட வழி வகுத்து விடக்கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று கூறுவது இதனால்தான். எனவே லோக்சபா தேர்தலுக்காக இப்போது முதலே கடுமையாக உழைப்போம்.

புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி தேவை. இங்கே மீண்டும் திமுக ஆட்சி உதயமாகும். திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது அவசியம்தான். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த ஆசை உள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், அதைத்தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சி அமைக்கும் இலக்கோடு பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி, அது எந்த வகையில் அமையப்போகிறது என்பது அப்போது முடிவு செய்யப்படும்” என்று பரபரப்பாக பேசி இருக்கிறார்.

காங்கிரசின் நினைப்பு

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன்புதான் புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, “புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணிதான் அமையும்” என்று உறுதி பட தெரிவித்திருந்தார்.

“2024-ம் ஆண்டு ராகுல் காந்தியை பிரதமராக ஆக்குவதுதான் நமது இலக்கு. புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசு புதிய திட்டங்களை எதையும் உருவாக்கவில்லை. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை வைத்துதான் ஆட்சி செய்து வருகின்றனர்.

Narayanasamy Pipe bomb -Updatenews360

தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு திமுக தான் தலைமை. ஆனால் புதுச்சேரியில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது. எந்த கட்சியும் பெரியது, சிறியது இல்லை. எல்லா கட்சிகளுக்கும் பலம் உள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் போராட்டம் நடத்தவேண்டும். மற்ற கட்சிகள் வந்தாலும், வராவிட்டாலும் பராவாயில்லை. எப்போதும் மதச்சார்பற்ற கூட்டணி என்றாலே காங்கிரஸ் தலைமையில்தான் இருக்கும். கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும் நாம் இல்லை. ஒவ்வொரு துறையாக சென்று போராட்டம் நடத்தப்படும்” என்றும் அவர் கூறியிருந்தார்.

நாராயணசாமி இப்படி அறிவித்த நிலையில்தான், தற்போது புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சியை உதயமாகும் என்று ஸ்டாலின் அதிரடி காட்டி இருக்கிறார்.

திண்டாட்டம்

இதுபற்றி அரசியல் நோக்கர்கள் சொல்வது என்ன?…

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், 2026 புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுமா? என்ற கேள்வி எழுவதற்கு முக்கிய காரணம் புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுகவுக்கு 6 எம் எல் ஏக்கள் உள்ளனர். ஆனால் காங்கிரசுக்கோ இருவர்தான் இருக்கின்றனர். இதனால் புதுவையில் என்னதான் காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தாலும் தற்போதைய நிலையில் அங்கு திமுகவின் கையே ஓங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் புதுவையில் திமுக ஆட்சி உதயமாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பதை பார்த்தால் விரைவில் தனது கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றி விட வாய்ப்புள்ளதாகவே கருதத் தோன்றுகிறது.

ஏனென்றால் 2021 புதுவை சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திமுக பெரிதும் தயங்கியது. அந்த ஆண்டு ஜனவரி மாத மத்தியில் புதுவை திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அந்த மாநிலத்தின் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகன் எம்பி பேசும்போது, 30 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிட்டு
வெற்றி பெறும். இல்லையென்றால். இதே மேடையில் நான் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று சவால் விடுத்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

என்றபோதிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா 1 தொகுதிகளில் போட்டியிட இரண்டு மாதங்களுக்குப் பிறகு உடன்பாடு ஏற்பட்டது. இந்த தேர்தலில் திமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் போனது.

அதேநேரம் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு தங்களை விட அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றதால் அப்போது முதலே புதுவையில் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையே மன கசப்பு உருவாகிவிட்டது. இதனால்தான் நாராயணசாமி புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு எப்போதுமே காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.

ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர் இப்படி சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்.

ஏனென்றால் திமுக கூட்டணியில் பாமக இணைந்துவிட்டால், புதுச்சேரியிலும் செல்வாக்கு பெற்றுள்ள பாமகவை வைத்தே அங்கு நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று விட முடியும் என்ற தன்னம்பிக்கை திமுக தலைமைக்கு வந்திருக்கும்.

மேலும் ஏற்கனவே நான்கு முறை புதுவையை ஆட்சி செய்துள்ள திமுகவிற்கு மீண்டும் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே உருவாகி இருக்கவேண்டும். அதனால்தான் புதுவையில் திமுக ஆட்சி உதயமாகும் என ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

எப்படிப் பார்த்தாலும் திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்ற ஆசை ஸ்டாலினிடம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு காங்கிரஸ் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவர் இப்படி பேசுகிறார் என்றே சொல்லவேண்டும்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறுவதன் மூலம் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகத்தான் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. எப்படிப் பார்த்தாலும் தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு இது திண்டாட்டம்தான்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 1514

    0

    0