திமுகவின் கோரிக்கையை நிராகரித்த ராகுல்…? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஆப்பு…!
Author: Babu Lakshmanan26 June 2023, 9:47 pm
கடந்த 23ம் தேதி பாட்னா நகரில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்று 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக
தீவிர பேச்சு நடத்தின.
இதில் பிரதான எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பாரத ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம், பகுஜுன் சமாஜ், AIMIM, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை கலந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. கூட்டம் நடந்து முடிந்த பின்பு அனைத்து கட்சித் தலைவர்களும ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர்களான ஸ்டாலின், கெஜ்ரிவால் இருவரும் செய்தியாளர்களை சந்திக்காமலேயே விமானம் ஏறிவிட்டனர்.
இதில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. டெல்லி மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்ப்பதாக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் சிம்லாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எங்கள் கட்சி பங்கேற்காது’ என்று டெல்லி திரும்பியதும் முதலமைச்சர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்தார்.
அதேநேரம் சென்னையில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம், “நீங்களும், ஆம் ஆத்மி கட்சியும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லையே. அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர்,” நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதற்குப்பிறகு எனக்கு விமான நிலையம் செல்ல நேரமாகிவிட்டது. மதிய உணவுக்கு பிறகுதான் செய்தியாளர் சந்திப்பு வைத்திருந்தார்கள். அதனால் மதிய உணவு கூட சாப்பிட முடியாமல், விமானத்தில்தான் சாப்பிட்டேன். அவர்களிடம் சொல்லிவிட்டுதான் வந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. அதுதான் உண்மை” என தெரிவித்தார்.
ஆனால் இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரும்பாலும் இந்தியில் கேள்விகள் எழுப்பப்படலாம். அது இந்தி திணிப்பை தீவிரமாக எதிர்க்கும் தனக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி விடும் என்பதாலும் தேசிய அளவிலான செய்தியாளர்கள் தன்னிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்கக்கூடும் என்று கருதியும் ஸ்டாலின் இந்த சந்திப்பை தவிர்த்திருக்கலாம் என்று முக்கிய ஆங்கில டிவி சேனல்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டன.
இன்னொரு பக்கம் விமானத்தை பிடிப்பதற்காக நான் அவசரமாக கிளம்ப நேர்ந்தது என்று ஸ்டாலின் தெரிவித்த கருத்தும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
ஏனென்றால் டி ஆர் பாலு எம்பி மற்றும் 6 உயரதிகாரிகளுடன் ஸ்டாலின் பாட்னாவுக்கு சென்றது தனி விமானம் ஆகும். இதன் மூலம் தான் விரும்பிய நேரத்தில் பாட்னா நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்தில் எந்த நேரம் வேண்டும் என்றாலும் ஸ்டாலின் சென்னை திரும்பலாம். ஒருவேளை செய்தியாளர்கள் சந்திப்பு முடியும் வரை காத்திருக்கவேண்டும் என்றால் தனி விமானத்தை நிறுத்துவதற்கான வாடகையை மட்டும் சற்று கூடுதலாக செலுத்தவேண்டிய நிலை ஏற்படலாம். அப்படி இருக்கும்போது ஏதோ பயணிகள் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு வந்தது போல விமானத்தைப் பிடிப்பதற்காக முன்கூட்டியே கிளம்பி வந்து விட்டேன் என்று ஸ்டாலின் கூறுவது நம்பும்படியாக இல்லை” என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.
ஆனால் உண்மையான காரணம் இப்போது வெளி வந்திருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசுக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் தனது வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கவேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால், அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அதனால்தான், செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்துவிட்டு ஸ்டாலின்
விமான நிலையத்திற்கு விரைந்து வந்துவிட்டார் என்கிறார்கள்.
இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா முதலமைச்சர்கள் ஸ்டாலின், கெஜ்ரிவால் இருவரிடமும் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படும் ஒரு தகவல் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
பரூக் அப்துல்லா அவர்களிடம் சொன்னதாக கூறப்படுவது, இதுதான்.
“எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டத்தை, சிம்லாவில் காங்கிரஸ், தலைமையில் நடத்தாமல், ஜம்மு-காஷ்மீரில் எனது தலைமையிலோ அல்லது சண்டிகர் நகரில் பஞ்சாப் ஆம் ஆத்மி முதலமைச்சர் பகவந்த்மான் தலைமையிலோ
நடத்தவேண்டும். இந்த முடிவை காங்கிரஸ் ஏற்காவிட்டால், அதை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டு,மாநில கட்சிகள் மட்டுமே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் இல்லாமல், மாநில கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்கவேண்டும் என்பதே, நிதிஷ் குமார் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான தலைவர்களின் விருப்பம். அதற்கேற்றவாறு செயல்படுங்கள்”
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா காங்கிரஸ் தலைமையைதான் ஆதரிப்பார், அவருக்கு தங்களை விட்டால் வேறு யாருமே கிடையாது என்று கருதி வந்த காங்கிரஸ் தலைமைக்கு இந்த தகவல் பலத்த ‘ஷாக்’ கொடுத்தது போல ஆகிவிட்டது.சோனியாவும், ராகுலும் இதனால் பெரும் அதிர்ச்சிக்கும் உள்ளாகி இருக்கின்றனர்.
“இதில் வியப்படைவதற்கு எதுவும் இல்லை. காங்கிரஸ்தான் பருக் அப்துல்லாவை தவறாக கணித்து வைத்திருக்கிறது. ஏனென்றால் கடந்த மார்ச் மாதம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் பதவியை பெறுவதற்குரிய அத்தனை தகுதிகளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருக்கிறது. அவர் ஏன் பிரதமர் ஆகக் கூடாது? ஸ்டாலின் பிரதமர் ஆவதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பி இருந்தார். மாறாக காங்கிரஸ் தலைவர்களில் யாராவது ஒருவர் பிரதமராக வேண்டும் என்று அவர் சொல்லவில்லை” என்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
“2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்ட 7 யோசனைகளும் பரூக் அப்துல்லாவிற்கு அப்படியே ஏற்புடையதாக அமைந்துவிட்டதும் இதற்கு முக்கிய காரணம்.
அதிலும் குறிப்பாக, எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். கூட்டணி அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம். தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது போன்றவை மாநிலக் கட்சிகளுக்கு மிகுந்த முன்னுரிமை தரும் விஷயங்களாக இருப்பதாக பருக் அப்துல்லா கருதுகிறார்.
அதனால்தான் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் மனதில் வைத்திருக்கும் ரகசிய திட்டத்தை கெஜ்ரிவால், ஸ்டாலின் இருவரிடமும் போட்டு உடைத்து இருக்கலாம். ஆனால் காங்கிரஸோ 300 தொகுதிகள் வரை தங்களால் பாஜகவுக்கு நேரடியாக கடும் போட்டியை உருவாக்க முடியும் என்று நம்புகிறது. அதனால் தங்கள் தலைமையில்தான் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறது.
திமுக கூறும் பொதுவேட்பாளர் நிறுத்தம் என்பது கேரளா, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி விடும் என்றும் காங்கிரஸ் கருதுகிறது.
அதேநேரம் 2019 தேர்தலில் காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொண்ட திமுக, 2024-ல் இணைந்து பயணிப்போம் என்று கூறுவதை டெல்லி தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை. தவிர தமிழகத்தில் இந்த முறை காங்கிரசுக்கு 5 எம்பி சீட்டுகளுக்கு மேல் திமுக ஒதுக்காது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் விஷயமும் ராகுலுக்கு கடும் எரிச்சலை தந்திருக்கிறது.
அதனால்தான் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ராகுல் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பாட்னாவில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு வெளியாகி இருக்கும் தகவல்கள் பாஜகவை வீழ்த்துவதில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் சொல்வதும் உண்மைதான்!