திமுக பெண் கவுன்சிலரின் மண்டையை உடைத்த மாமியார்… கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் செல்வத்தின் வீட்டில் நடந்த ரகளை..!!
Author: Babu Lakshmanan17 June 2022, 11:12 am
சென்னையில் திமுக பெண் கவுன்சிலரின் மண்டையை அவரது மாமியார் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை தெற்கு மாவட்ட திமுக பிரமுகர், கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, அரசியல் போட்டியால் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக அவருக்கு நெருக்கமான கட்சியினர் மற்றும் கூலிப்படையினர் என 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அவரது காதல் மனைவி சமீனாவுக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. அதன்படி, போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இந்த நிலையில், மடிப்பாக்கம் பகுதியில் கணவன் இல்லாத நிலையில் வசித்து வரும் திமுக பெண் கவுன்சிலரான சமீனாவுக்கும், கணவரின் தாயாரும், மாமியாருமான லிசி (57)க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மாமியார் வீட்டிலிருந்த இரும்பு பூட்டைக் கொண்டு கவுன்சிலர் சமீனாவின் மண்டையை உடைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த சமீனா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக சமீனா செல்வம் அளித்த புகாரின் பேரில் அவரது மாமியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.