‘திமுகவில் இருப்பதால் எனக்கு அதிகாரம் இருக்கு’… தள்ளுவண்டி கடை போடும் பெண்ணிடம் திமுக கவுன்சிலரின் கணவர் அடாவடி..!! (வைரல் ஆடியோ)
Author: Babu Lakshmanan17 June 2022, 5:39 pm
தூத்துக்குடியில் அத்துமீறி கடைகளை அப்புறப்படுத்திய திமுக கவுன்சிலரின் கணவர், பெண்ணிடம் அடாவடியாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாநகர திமுக 24வது வார்டு கவுன்சிலர் மெட்டில்டாவின் கணவர் டேனியல். இவர், பீச் ரோட்டில் புதியதாக புதிப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள முத்து நகர் பூங்காவில், பானிபுரி உள்ளிட்ட சிறு தொழில் செய்பவர்களை கடை போடக் கூடாது என்று கூறி, அவர்களை அப்புறப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும், வேறு நபர்கள் அந்த இடத்தில் கடை வைக்க அனுமதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவர், திமுக கவுன்சிலர் டேனியலுக்கு தொலைபேசியின் மூலம் அழைத்து பேசியுள்ளார்.
அப்போது, அந்தப் பெண் பீச் ரோட்டில் கடைகளை அகற்ற சொல்வதற்கு நீங்கள் யாரு..? என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு கவுன்சிலரின் கணவர் டேனியல், ‘நான் திமுகவின் மீனவர் அணி மாவட்ட செயலாளராக இருக்கிறேன். எனக்கு மாவட்டம் முழுவதும் உள்ள பிரச்சனைகளில் தலையிட உரிமை உண்டு. நீங்கள் யார் கிட்ட வேண்டுமானாலும் சென்று சொல்லிக் கொள்ளுங்கள்,’ எனக் கூறுகிறார்.
மேலும், அந்தப் பெண் நானும் திமுக உறுப்பினர்தான் என்று சொன்னதற்கு, உறுப்பினர்களுக்கெல்லாம் அந்தப் பவர் இல்லை, மாவட்ட பொறுப்பில் இருக்கும் எனக்கு தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்று கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து, இருவரின் வாக்குவாதம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்களின் தலையீடு அதிகமாக இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், இது இன்னும் தொடர் கதையாகி வருவது திமுக மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.