‘மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கேன்’ ; நகராட்சி கூட்டத்தில் பேசிய சுயேட்சை கவுன்சிலரை அடித்து உதைத்த திமுக கவுன்சிலர்கள்..!!
Author: Babu Lakshmanan27 December 2022, 4:09 pm
கரூர் ; தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பள்ளப்பட்டி நகராட்சி கூட்டத்தில் பேசிய சுயேட்சை கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பேரூராட்சி, தற்போதைய திமுக ஆட்சியில் தான் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், நகர்மன்ற தேர்தலையும் சந்தித்து 27 இடங்களில் 21 இடங்களை திமுக பிடித்து மெஜாரிட்டியை காட்டியது.
இந்நிலையில், மீதமுள்ள இடங்களில் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், எஸ்.டி.பி.ஐ கட்சி ஒன்றும், சுயேட்சைகள் மட்டும் 3 இடங்களை பிடித்தது. நகராட்சியின் முதல் பெண் தலைவராக முனைவர் ஜான் நியமிக்கப்பட்ட நிலையில், துணை தலைவராக பள்ளப்பட்டி நகராட்சியின் திமுக நகர செயலாளர் தோட்டம் பஷீர் அஹமது நியமனம் செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை பெண் நகர்மன்ற தலைவருக்கும், துணை தலைவரான ஆண் தலைவருக்கும் இடையே பிரச்சினை நீண்டு கொண்டே வந்தது.
இந்த நிலையில், இன்று பள்ளப்பட்டி நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் முனைவர் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 27வது வார்டு சுயேட்சை நகர்மன்ற உறுப்பினர் சாகுல் அமீது நகர்மன்றத்தில் எழுந்து, மக்கள் என்னை தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்துள்ளார்கள். ஆகவே அவர்களுக்காக பணியாற்றுவது எனது கடைமை, ஆகவே எனது வார்டு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை இந்த நகராட்சி செய்து தர கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று கூறினார்.
அப்போது, திடீரென்று நகர்மன்ற துணை தலைவரின் உறவினர்களும், திமுக கவுன்சிலர்களுமான 24வது வார்டு முஸ்தாக் அலி, 9வது உறுப்பினர் சாதீக் அலி, 2வது வார்டு உறுப்பினர் யாக்கூப், 16வது வார்டு உறுப்பினர் ஜமாலுதீன் ஆகிய திமுக வார்டு உறுப்பினர்கள் எழுந்து, சுயேட்சை உறுப்பினர் சாகுல் அமீதை, நகர்மன்றத்திலிருந்து வெளியே செல் என்பது போல, ஒருமையில் பேசி, சுயேட்சை கவுன்சிலரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட சுயேட்சை வார்டு உறுப்பினர் சாகுல் அமீது, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தனது வார்டு மக்கள், தன்னை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை கூட நகர்மன்றத்தில் பேச முடியவில்லையா..? என்றும், முன்விரோதம் காரணமாக நகர்மன்ற துணை தலைவர் தோட்டம் பஷீர் அஹமது அவர்களின் தீவிர ஆதரவாளர்களான மற்ற திமுக கவுன்சிலர்கள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் இஸ்லாமிய சமுதாய மக்களை சிந்திக்க வைத்துள்ளது.