டுபாக்கூரின் உச்சம் மோடி… கர்நாடகாவைப் போல தமிழகத்திலும் அண்ணாமலை விரட்டியடிக்கப்படுவார் ; திண்டுக்கல் லியோனி கடும் தாக்கு…!!
Author: Babu Lakshmanan28 July 2023, 4:40 pm
அண்ணாமலையை கர்நாடகவில் விரட்டி அடித்தது போல் தமிழ்நாட்டிலும் விரட்டியடிப்பார்கள் என புதுச்சேரி திமுக பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார்.
புதுச்சேரி அரியூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா கலந்துகொண்டு பேசியதாவது;- 1996-இல் மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை அப்போதைய முதலமைச்சர் ஜானகிராமன் போட்டார்.
பின்னர் டெல்லி அழைத்து சென்று அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து சென்று வலியுறுத்தினோம். ஆனால் ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு போடப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சியும் தீர்மானம் கொண்டுவந்து ஒருமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இது டெல்லிக்கு சென்று பரிசீலனையில் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சுப்பராயன் கேள்வி கேட்டபோது, இதுபோன்ற தீர்மானம் வரவில்லை என்று பாராளுமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி எம்பி சிவா உட்பட பலர் பேசினார்கள். ஆனால் இதற்கு எழுத்துப்பூர்வமான பதில் வரவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஆளுநர் தமிழிசை காலில் போட்டு மிதிக்கிறார். மாநில அந்தஸ்து தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை ஆளுநருக்கு அதிகாரம் கொடுத்தது யார். எனவே, ஆளுநர் மாளிகை நோக்கி மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும்.
மிகப்பெரிய போராட்டத்தை திமுக நடத்தும். சட்டமன்றத்தில் அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது என்று ஆவேசமாக பேசினார். மேலும் மக்கள் உரிமையில் கை வைத்துள்ள ஆளுநர் தமிழிசை, உள்துறை அமைச்சர், தலைமை செயலாளர், அரசு மீது உரிமை மீறல் கொண்டுவருவோம், என கூறினார்.
இதைத் தொடர்ந்து, பேசிய திண்டுக்கல் லியோனி, “டுபாக்கூரின் உச்சம் மோடி. அமைதிப்படை அமாவாசை ரங்கசாமி. தமிழீன துரோகி தமிழிசை. அண்ணாமலையை கர்நாடகாவில் விரட்டி அடித்தது போல் தமிழ்நாட்டிலும் விரட்டியடிப்பார்கள், என தெரிவித்துள்ளார்.