பங்கேற்காத தலைவர்கள் ஏமாற்றத்தில் திமுக?…2024 தேர்தல் கூட்டணிக்கு பின்னடைவு!
Author: Udayachandran RadhaKrishnan3 April 2022, 5:26 pm
டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏப்ரல் 2-ம்தேதி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பும் பணியில் கடந்த ஒரு மாதமாகவே, டி ஆர் பாலு எம்பி தலைமையில் திமுக எம்பிக்கள் குழு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. பல்வேறு தலைவர்களை நேரில் சந்தித்தும் இக் குழுவினர் அழைப்பிதழ்களை வழங்கினர்.
அரசியல் பெரும் தலைவர்களுக்கு அழைப்பு
கடந்த 31-ம் தேதி மூன்று நாள் பயணமாக ஸ்டாலின் டெல்லி சென்றபோது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கி புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்!!
இதனால் திமுக அலுவலகத் திறப்பு விழா, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு எதிராக திரளும் ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியாக அமையுமென்று பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்காத ராகுல்
2024 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் ஒரு முறை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ராகுல் கலந்து கொள்ளவில்லை. டெல்லியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து ஸ்டாலின் இருவரையும் முதலில் சந்தித்து பேசியதால்தான், திறப்பு விழாவில் ராகுல் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
பங்கேற்காத எதிர்க்கட்சி முக்கிய பிரமுகர்கள்
இதேபோல் முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், சந்திர சேகர்ராவ், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்பி போன்றவர்களும் இந்த விழாவிற்கு வரவில்லை. அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ், அகாலிதளம் கட்சிகளின் எம்பிக்களில் சிலர் மட்டும் பங்கேற்றனர்.
இதனால் 2024 தேர்தலில் 18 எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டி பாஜகவுக்கு எதிராக போட்டியிட வைக்கும் திமுகவின் முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
இதுகுறித்து டெல்லியில் மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:
“திமுக விடுத்த அழைப்பை ஏற்று முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாடி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தேவேகவுடா, சஞ்சய் ராவத் போன்றவர்கள் டெல்லியில் இருந்தும் கூட திமுக கட்டிட திறப்பு விழாவிற்கு வராதது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெருத்த ஏமாற்றமாகவே அமைந்திருக்கும்.
முதல் நாள்தான் முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் டெல்லியில் உள்ள அரசு மாதிரி பள்ளிக்கு சென்று அங்குள்ள நடைமுறைகளை ஸ்டாலின் பார்வையிட்டார். இதனால் ஆம் ஆத்மியின் தலைவர் கெஜ்ரிவால் இந்த விழாவில் நிச்சயம் பங்கேற்பார் என்று திமுக எதிர்பார்த்தது.
குஜராத் சென்ற கெஜ்ரிவால்
ஆனால் அவரோ தனது கட்சியை தேசிய அளவில் இன்னும் பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் குஜராத்துக்கு சென்றுவிட்டார். இதுதவிர இமாச்சல பிரதேச தேர்தலிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்திருக்கிறார். இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜகவுக்கு கடும் போட்டியை தருவது காங்கிரஸ்தான்.
எனவே காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைவதை ஆம்ஆத்மி விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. டெல்லியில் திமுகவின் புதிய அலுவலகம் திறக்கப்படுவதற்கு முதல்நாள், ஸ்டாலின் அங்கு ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.
காங்கிரசை வலியுறுத்திய ஸ்டாலின்
அப்போது, அவரிடம் “காங்கிரஸ் பலவீனம் அடைந்திருப்பதால் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு மாநிலக் கட்சிகள் தலைமை தாங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் “சில மாநிலங்களில் அது சரியாக இருக்கலாம். ஆனால் பல மாநிலங்களில் திசைதிருப்புவதாக அமையும். என்னைப் பொறுத்தவரை பாஜகவை எதிர்க்கும் எல்லா மாநில கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கைகோர்க்க வேண்டும்.
தமிழகத்தில் திமுகவும், எங்கள் கூட்டணி கட்சிகளும் அனைத்து மதசார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைத்து பாஜகவை புறந்தள்ளி இருக்கிறோம். தேர்தலுக்காக மட்டுமின்றி கொள்கை ரீதியாகவும் இணைந்துள்ளோம். இதுதான் எங்கள் வெற்றியின் அடிப்படை. அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற அணியை அமைப்பதில் கவனம் செலுத்துமாறு காங்கிரசை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதிருப்தியில் காங்கிரஸ்!!
ஸ்டாலின் இப்படி சொன்னது காங்கிரசுக்கு வெளிப்படையாக அட்வைஸ் செய்வதுபோல இருந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் மல்லுக்கட்டி வருகிறது. அப்படியிருக்கும்போது இடதுசாரிகளுடன் காங்கிரஸ் எப்படி இணைந்து செயல்படும்?. அதேபோல காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் ஒரே அணியாக போட்டியிட்ட 2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக இந்த கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதனால் கூட்டணிக்காக காங்கிரஸ் எதிர்க் கட்சிகளை அனுசரித்து செல்லுமா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை, கடந்த 31ம் தேதி நாடாளுமன்ற அலுவலகத்தில் ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பு இரண்டு நிமிடம் மட்டுமே நீடித்தது. இதுவும் காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
திமுக அலுவலக திறப்பு விழாவில் ராகுலும் பங்கேற்பார் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. ஆனால், விழாவில் அவர் பங்கேற்காததற்கு இதுதான் காரணம் என்கின்றனர்.
ஸ்டாலின் மீது கோபத்தில் ராகுல்
நாட்டின் பிரதமர் என்ற முறையில் மோடியை ஸ்டாலின் சந்தித்ததை ராகுல் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், காங்கிரசால் பரம எதிரியாக கருதப்படும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவர் சந்தித்தது தான், ராகுலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.அதனால் தான் விழாவில் அவர் பங்கேற்கவில்லை என, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் ஸ்டாலின் யோசனைப்படி காங்கிரஸ் நடந்துகொண்டால் பஞ்சாப், டெல்லி, குஜராத், இமாச்சலப்பிரதேசம்,கோவா மாநிலங்களில் ஆம் ஆத்மியுடன் அனுசரித்து செல்ல வேண்டிய நெருக்கடியும் காங்கிரசுக்கு ஏற்படலாம்.
கூட்டணியை மாற்றும் திமுக
இன்னொரு பக்கம், ஸ்டாலினை பிரதமராக்குவோம் என்ற முழக்கத்தை தமிழகத்தில் திமுக தலைவர்களும், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இது தற்போது டெல்லியிலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது.
2024 தேர்தலில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிட போவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதேபோன்ற வாய்ப்பை தமிழகத்தில் பிற மாநில கட்சிகளுக்கு திமுக அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த மாநிலங்களில் காங்கிரசுக்கு பிரதான கூட்டணி கட்சிகள் ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையலாம்.
தலைகாட்ட தயங்கிய ராகுல்
இதனால் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூட்டணிக் கட்சிகள் தயங்கலாம் என்று கருதித்தான் டெல்லி திமுக அலுவலக கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் ராகுல் ஒதுங்கிக் கொண்டுவிட்டார் என்றும் பேசப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் திமுகவின் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா 18 எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்ததுபோல தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் பல முன்னணி தலைவர்கள், திமுக விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இதன் மூலம் திமுக போட்ட அரசியல் கணக்கு டெல்லியில் பலிக்கவில்லை என்பதே உண்மை”என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர். இவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பது போல்தான் தெரிகிறது!
0
0