திமுக தேர்தல் வாக்குறுதிக்கு வேட்டு வைக்கும் ஆவின்…? திடீர் நெருக்கடியால் பால் விலை உயர்கிறதா….?
Author: Babu Lakshmanan13 மார்ச் 2023, 7:31 மணி
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தங்களிடம் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்யும் பசு மற்றும் எருமை பாலுக்கான விலையை உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் தீவிரமாக எழுப்பி இருப்பது திமுக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லவேண்டும்.
ஏற்கனவே மாட்டு தீவனத்தின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதால் அதற்குத் தகுந்தாற்போல் எருமைப்பாலின் கொள்முதல் விலையை 51 ரூபாய் ஆகவும், பசும்பாலின் விலையை 44 ரூபாய் ஆகவும், அதாவது லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தரவேண்டும், இல்லையென்றால் போராட்டத்தில் குதிப்போம் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அரசை எச்சரித்து வந்தனர்.
இதனால் வேறு வழியின்றி கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி முதல்
பசும் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 32 லிருந்து ரூபாய் 35 ஆகவும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 41லிருந்து 44 ஆகவும் உயர்த்தி வழங்குவதாக திமுக அரசு அறிவித்தது. அதேநேரம் நிறை கொழுப்பு கொண்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை லிட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் அதிகரித்து 60 ரூபாயாக நிர்ணயம் செய்தது.
இதை ஏற்கவே முடியாது என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஆவின் பால் அட்டை வைத்திருப்போர் ஒரு லிட்டர் நிறை கொழுப்பு பாலை விலை உயர்வு எதுவும் இன்றி 46 ரூபாய்க்கே
பெற்றுக் கொள்ளலாம் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் அப்போது அறிவித்தார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 27 ஒன்றியங்கள் மூலம் பெறப்படும் பாலின் அளவு கடந்த சில வாரங்களாக பெரும் சரிவை சந்தித்து இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறிய பல தகவல்கள் தமிழக மக்களின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக அமைந்துள்ளது.
அவர் கூறும்போது, “ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு, 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்தது. தற்போது, தனியார் பால் நிறுவனங்கள், ஒவ்வொரு கிராமத்திலும் பால் வாங்கும் மையங்களை ஏற்படுத்தி விட்டன. அவை லிட்டருக்கு 6 முதல் 10 ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து பால் கொள்முதல் செய்கின்றன.
இதனால் ஆவின் நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களாக படிப்படியாக 9 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் அளவு குறைந்து, தற்போது 27 லட்சம் லிட்டராக உள்ளது. ஆவின் தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகளாகி விட்ட நிலையில் இதுபோல எப்போதும் பால் கொள்முதல் அளவு குறைந்தது கிடையாது. ஆவின் பால் விற்பனை அளவுக்கு மேல் 3 லட்சம் லிட்டர் அதிகமாக பால் கொள்முதல் அளவு இருக்கவேண்டும். அப்போதுதான், பாலில் இருந்து வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ் கிரீம் உள்ளிட்ட இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க முடியும்.
தனியார் கொடுக்கும் பால் கொள்முதல் விலையை விட, அதிகமான விலையை கூட்டுறவு சங்கம் வாயிலாக பால் வழங்குபவர்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லாவிடில், ஆவின் சங்கங்களுக்கு மேலும் பால் வரத்து குறையும். இப்படியே போனால் ஆவின் நிர்வாகத்தின் நிலை கவலைக்கிடமாக மாறிவிடும்.
எனவே 1 லிட்டர் பசும்பால், 35 ரூபாயில் இருந்து 20 ரூபாய் உயர்த்தி 55 ரூபாயாகவும், எருமைப்பால் லிட்டர், 44 ரூபாயில் இருந்து, 24 ரூபாய் உயர்த்தி, 68 ரூபாயாகவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இந்த விலை உயர்வுக்கேற்ப, பால் விற்பனை விலையை உயர்த்தவும் முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க மதுரை ஆவின் ஒன்றியத்தில் இப்பிரச்சனை பால் உற்பத்தியாளர்களை போராட்டம் நடத்தும் நிலைக்கும் தள்ளிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், மதுரை மாவட்டத்தின் அன்றாட ஒட்டுமொத்த பால் தேவை
1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர். ஆனால் ஆவின் நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவில் பால் கிடைத்து வந்தது. அது படிப்படியாக குறைந்து தற்போது ஒரு லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதுதான்.
மதுரை ஒன்றியத்தில் தனியார் பால் நிறுவனங்கள் ஆவினை விட ஒரு லிட்டருக்கு 15 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்து விடுகின்றன. பசு, எருமைகளுக்கு தேவையான தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதை புரிந்து கொண்டு கறவை மாடுகள் வைத்திருப்பவர்களை தங்களது நிறுவனத்தின் பக்கம் அவை இழுத்தும் விட்டன.
ஆனால் ஆவின் நிர்வாகமோ கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க மிகுந்த தயக்கம் காட்டுகிறது. இதனால் விரக்தியும், எரிச்சலும் அடைந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடந்த 11ம் தேதி காலை மதுரை, தேனி மாவட்டங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பாலை ஆவினுக்கு வழங்காமல் தீவிர போராட்டத்திலும் குதித்தனர்.
ஆனால் பால் நிறுத்த போராட்டம் நடத்தினால் கூட்டுறவு சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆவின் பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பால் உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். எனினும் பால் கொள்முதல் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி அறிவிக்காவிட்டால் வருகிற 17-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பால் நிறுத்த போராட்டத்தை நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்து இருக்கின்றனர்.
“பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் விதித்துள்ள கெடு, திமுக அரசுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது என்றே கூறவேண்டும்” என சமூக நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
“விலைவாசி உயரும்போது ஒவ்வொரு அத்தியாவசிய பொருளின் விலையும் ஆண்டு தோறும் தானாகவே 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துவிடும். இதுபோன்ற நேரங்களில் மாட்டு தீவனங்களின் விலையும், பசு எருமை போன்ற கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கான மருத்துவ செலவும் கணிசமாக உயர்ந்து விடும் என்பதும் நிஜம்.
இதனால்தான் அரிசி, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிச் சந்தையில் இத்தனை ரூபாய் அளவிற்கு குறைப்போம் என்று எந்த அரசியல் கட்சியும் நம்பிக்கையுடன் தேர்தல் வாக்குறுதி தருவதில்லை.
அதற்கு மாறாக திமுக தனது வாக்குறுதியில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்போம் என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு அதை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டது. அதேநேரம் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் தனியார் பால் நிறுவனங்கள் கால் நடைகள் வளர்ப்போரின் கஷ்ட சூழ்நிலையை புரிந்து கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்கின்றன. நுகர்வோரிடம் பால் விலையையும் ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ உயர்த்தியும் கொள்கின்றன. ஆனால் ஆவின் நிர்வாகமோ அரசு தொடர்புடையது என்பதால் முதலமைச்சரின் சம்மதம் இன்றி இந்த விஷயத்தில் எந்த உறுதியான முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடியாது.
அதேநேரம் கொள்முதல் விலையை அதிகரித்து தரும்படி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வைக்கும் கோரிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டால் ஆவின் பாலின் விற்பனை விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை உயர்த்தவேண்டிய நெருக்கடிக்கு திமுக அரசு தள்ளப்படும். அதுபோல் ஆவின் பால் விலையை நுகர்வோருக்கு அதிகரித்தால், கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு? என்ற கேள்விக் கணைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும். இதனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திண்டாட்ட நிலைதான் உருவாகும். இதுபோன்ற இக்கட்டான நிலைமை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு திமுக அரசுக்கு தொடரத்தான் செய்யும்.
அதனால் விலைவாசியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆவின் பால் விலையை உயர்த்தாமல் தாக்குப் பிடிக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். பாலில் இருந்து தயாரிக்கப்படும் இதர பொருட்களின் விலையை மட்டுமே கணிசமாக அதிகரித்து ஆவின் பாலின் விலையை தற்போதைய நிலையிலேயே வைத்திருப்பதும் கடினமான செயலாகத்தான் இருக்கும். அதனால் ஆவின் பாலில் நீல நிற மற்றும் பச்சை நிற பாக்கெட்டுகளை தனது 5 வருட ஆட்சிக்காலத்திலும் ஒரே விலையில் வைத்திருக்க திமுக அரசு தடுமாறும் என்பதே எதார்த்தமான உண்மை” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
1
1