வீடு புகுந்து திமுக பிரமுகரின் மகனுக்கு கத்திகுத்து.. தடுக்க முயன்ற நண்பருக்கு காயம் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!
Author: Babu Lakshmanan1 April 2023, 2:34 pm
முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரின் மகனை வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் முகமதியார் தெருவைச் சேர்ந்த திமுக நகர செயலாளர் பன்னீர். இவருடைய மகன் தயாளன் (28) வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது உறவினரும், மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தின் உதவியாளருமான சரவணன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தயாளன் தனது நண்பர் சங்கரலிங்கத்துடன் வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் கண்ணன் (31) ஆகியோர் சொத்து பிரச்சினை தொடர்பாக தயாளனிடம் பேசியதாக தெரிகிறது. இதில் 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சரவணன், தயாளனை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க முற்பட்ட தயாளனின் நண்பர் சங்கரலிங்கத்திற்கும் கத்திக்குத்துவால் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காயமடைந்த இருவரும் நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், இது தொடர்பாக தயாளன் தரப்பில் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, திமுக பிரமுகரை வீடு புகுந்து கத்தியால் குத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பகிரும் எதிர்கட்சியினர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதற்கு உதாரணம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.