சாலையில் சரிந்து விழுந்த திமுக கொடிகம்பம்… அதிர்ஷ்டவசமாக தப்பிய வாகன ஓட்டிகள் : பொதுமக்களின் உயிர் மீது அலட்சியம் காட்டுவதா..? சமூக ஆர்வலர்கள் கேள்வி

Author: Babu Lakshmanan
23 March 2022, 7:19 pm

சென்னை : சாலையோரங்களில் வைக்கப்படும் அரசியல் கட்சிக் கொடிகம்பங்கள் மற்றும் பேனர்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், சென்னையில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் பேனர் மற்றும் கொடிக்கம்பம் கலாச்சாரங்கள் இன்றும் ஓய்ந்தபாடில்லை. கட்சிக் கூட்டங்கள், அரசியல் பிரமுகர்களின் சொந்த நிகழ்ச்சிகளுக்காக சாலையோரத்தின் வழிநெடுகிலும் பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் இன்று வரையும் கட்டப்பட்டுதான் வருகிறது. ரகு மற்றும் சுபஸ்ரீ-யின் மரணத்திற்கு பிறகும் இனி பேனர் கலாச்சாரங்களுக்கு தடை போடுவதாக அரசியல் தலைவர்கள் விடுத்த அறிவிப்புகள் வெறும் வாயளவில்தான் இருந்து வருகின்றன. அரசியல் கட்சிகளும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தையும் தாக்கல் செய்தன.

இப்படியிருக்கையில் அண்மையில் சேலத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி, திமுக சார்பில் சாலையோர கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தது. அந்த வழியாக பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற மாணவி, கொடிக்கம்பத்தில் மோதி காயம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான தடுப்பில் திமுக கொடிக்கம்பங்கள் ஒன்று நடப்பட்டிருந்தது. திடீரென அந்தக் கொடிக்கம்பங்களில் ஒன்று சரிந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரம் சாலையில் வாகன ஓட்டிகளோ, பாதசாரிகளோ யாரும் வரவில்லை. இதனால், எந்த சேதமும் ஏற்படவில்லை.

இதுபோன்று சாலைகளில் திமுக கொடிக்கம்பங்கள் கட்டப்படுவதை முதலமைச்சர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தி மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Rukmini Vasanth in Prashanth Neel film சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு அடித்த மெகா அதிர்ஷ்டம்…கொத்தா தூக்கிய பிரபல இயக்குனர்…!