சட்டம் ஒழுங்கில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது : செய்தியாளர் தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 1:48 pm

சட்டம் ஒழுங்கில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது : செய்தியாளர் தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

திருப்பூர் தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தளப்பக்கத்தில், “திருப்பூர் பகுதி தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் சகோதரர் நேசபிரவை, சமூக விரோதிகள் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ள செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தினசரி வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையின் கைகள் திமுக அரசால் முற்றிலுமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால், ஆட்சியின் தவறுகளையோ, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையோ, ஊடகங்கள் கேள்வி எழுப்பாமல், கேள்வி கேட்பவர்களையும் மௌனமாக்கவே முயல்கிறார்கள்.

அதிகாரத்தைக் கேள்வி கேட்கவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, மூத்த ஊடகவியலாளர்கள் விரும்புவதில்லை. நேர்மையான சில ஊடகவியலாளர்களும் சமூக விரோதிகளால் இது போன்ற தாக்குதலுக்கு உள்ளாவதால், அதிகாரத்துடன் அனுசரித்துச் செல்லவே அனைவரும் மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைப்பவர்களும், அதனை மக்களுக்காகப் பயன்படுத்துவதில்லை.

திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளது. ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். திமுக அரசின் தோல்விகளை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைத்து, மயிலிறகால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குறித்த பிரச்சினை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!