3 வருடமாக ஒரு மாவட்டத்தை கூட திமுக அரசு உருவாக்கவில்லை.. உங்களை தடுப்பது எது? அன்புமணி காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2024, 1:22 pm

3 வருடமாக ஒரு மாவட்டத்தை கூட திமுக அரசு உருவாக்கவில்லை.. உங்களை தடுப்பது எது? அன்புமணி காட்டம்!!

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து திருவோணம் என்ற புதிய வட்டத்தை தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது.

நிர்வாக வசதிக்காக இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்குவதாக அளித்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டமும், கடலூர் மாவட்டத்தைப் பிரித்து விருத்தாசலம் மாவட்டமும், திண்டுக்கல் மாவட்டத்தைப் பிரித்து பழனி மாவட்டமும் புதிதாக அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். புதிய மாவட்டங்களை உருவாக்க அதிக செலவு ஆகாது. ஆனாலும், புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழக அரசை தடுப்பது எது? என்பது தெரியவில்லை.

இனியும் தாமதிக்காமல், தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…