வரைமுறை இல்லாமல் கனிம வளக் கொள்ளை : வாக்களித்த மக்களை வஞ்சித்து நடுத்தெருவில் நிறுத்தும் திமுக அரசு.. அண்ணாமலை காட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan13 November 2022, 8:12 pm
கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆற்று மணல், கடல் மணல், மலைகள், பாறைகள் என்று மண்ணுக்கடியில் இருக்கும் கனிம வளங்கள் பல்லாயிரக்கணக்கான லாரிகளில், தமிழகத்தில் களவு போகிறது. அண்டை மாநிலங்களுக்கு மிக அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது.
முறையான அனுமதி பெறாமல் ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவதும், மலைகளையும், பாறைகளையும், குன்றுகளையும் குடைந்து கல் குவாரி அமைத்து, தமிழகத்தின் கனிம வளத்தை கொள்ளை அடிப்பதும், தற்போதைய திமுக ஆட்சியில் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
இதற்கு சாட்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கொரட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகள் ஆடு மாடுகளுடன் கிராமத்தை விட்டே வெளியேறி ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் கொட்டும் மழையில் தமிழகத்தின் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு பொது மக்களை தாக்கியுள்ளனர்.
அனுமதி பெறாமல் தனியார் சிலர் கொரட்டகிரி கிராமத்திற்கு அருகிலுள்ள மலையை உடைத்து அந்தக் குவாரியிலிருந்து ஜல்லி எம் சாண்ட் போன்றவற்றை கனரக லாரிகள் மூலம் வழியாக கொண்டு செல்வதால் சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டது.
கிராமத்தில் விவசாயம் செய்யக்கூட முடியவில்லை என்று கூறி அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு குழந்தை குட்டிகள் ஆடு மாடுகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி, சார் ஆட்சியாளர் அலுவலகத்திலே குடியிருக்க போவதாக கூறி போராட்டம் நடத்த, நெடுஞ்சாலைக்கு வந்தனர். வரைமுறை இல்லாமல் கொள்ளையடிப்பதற்காக, வாக்களித்த மக்களையெல்லாம் வஞ்சித்து நடுத்தெருவில் நிறுத்திய சாதனையை மட்டும் தான் ஆளும் திமுக அரசு செய்திருக்கிறது.
சாலையில் போராடிய மக்களை சந்தித்த எஸ்பி சரத்குமார் இரண்டு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானம் கூறி மக்களைத் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் ஜல்லி, எம் சென்ட் போன்ற கனிமவள கொள்ளை நிற்கவில்லை. காவல்துறையோ அல்லது சார் ஆட்சியரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளும் கட்சியின் நல்லாசியுடன், அடிக்க வேண்டிய கொள்ளை, ஆசி பெற்ற நபர்களால், அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உறங்க கூட நேரமில்லாமல் இரவும் பகலும் பலமான வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. வீடுகள் விரிசல் அடைந்து விட்டன. சில வீடுகள் இடிந்து விட்டன. இப்படிப்பட்ட அவல சூழலில், மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் கிராம மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு, உள்ள வனப்பகுதியில் தற்காலிகமாக டென்ட் அமைத்து தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் உதவிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் செய்து வருகிறார்கள்.
அண்டை மாநிலங்கள் எல்லாம் தங்கள் ஆறுகளையும் மலைகளையும் மண்ணுக் அடியில் உள்ள கனிம வளங்களையும் கண்ணும் கருத்துமாக காப்பாற்றிக் கொண்டிருக்கும் போது சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனை இல்லாமல், தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனை பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மக்களுக்காக தான் ஆட்சியாளர்கள் இருக்க வேண்டுமே தவிர ஆட்சியாளர்களுக்காக மக்கள் இருக்கக் கூடாது ஆகவே தமிழக அரசு கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்திட, கொரட்டகிரி மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு, மீண்டும் திரும்பும் வண்ணம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் பாஜகவின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.