மதுவிலக்கில் தடுமாறும் திமுக அரசு : அன்று சொன்னதை இன்று மறந்த கனிமொழி!
Author: Udayachandran RadhaKrishnan30 January 2023, 9:36 pm
டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூடுவது பற்றிய பேச்சு எழும் போதெல்லாம் திமுக தலைவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும், ஆளும் கட்சியாக ஆன பின்பு வேறொரு நிலைப்பாட்டையும் கையில் எடுப்பது கண்கூடாக தெரிகிறது.
அது திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ஆக இருந்தாலும் சரி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி ஆக இருந்தாலும் சரி இருவருமே இந்தப் பிரச்சினையில் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
மதுக்கடைகள் குறைக்கப்படும்!!
மிக அண்மையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,”ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி என்பது நிச்சயமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தான். அது உறுதியான ஒன்று. அதிமுக பல திசைகளில் பிரிந்து கிடக்கிறது என்பது உண்மை தான். ஆனாலும், அதில் நிறைய பேர் ஆதாயம் தேட வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அதிமுகவில் எல்லோரும் இடைத்தேர்தலில் இணைந்து வேலை செய்தாலும், வேலை செய்யாவிட்டாலும் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும்.
தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என இந்த தேர்தலில் யாரும் சொல்லவில்லை, மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி” என்று தெரிவித்தார்.
டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது பற்றி கனிமொழி தெரிவித்த இந்த கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து பெரும்பாலான ஊடகங்கள் அதை பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டும் உள்ளன.
கனிமொழியின் வழக்கமான வாக்குறுதியே
அதேநேரம், இன்னொரு பக்கம் அரசியல் வட்டாரத்தில் அது தொடர்பான விவாதங்களும் எழுந்து விட்டன. 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்பு டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்து கனிமொழி இப்படி கூறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.
கனிமொழிக்கு கிடுக்குப்பிடி கேள்வி
ஏனென்றால் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளி மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கனிமொழி கலந்துகொண்டு மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது ஒரு மாணவி, “ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்னீர்கள், எப்போது மதுவிலக்கு அமலுக்கு வரும்? தந்தை, அண்ணன், தம்பியின் மதுப்பழக்கத்தினால் குடும்பங்கள் சீரழிந்து வருகிறதே” என்று கிடுக்குபிடி கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கனிமொழி,”இந்தத் தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று திமுக எந்த ஒரு உறுதிமொழியையும் கொடுக்கவில்லை. மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம் என்றுதான் சொன்னோம். அது நடக்கும்” என்று குறிப்பிட்டார்.
ஜகா வாங்கிய திமுக
ஆனால் 2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிபடி கடந்த 20 மாதங்களில் எவ்வளவு மதுக் கடைகளை திமுக அரசு இழுத்து மூடியது என்பதற்கான சரியான விடை கிடைப்பது கடினம்தான். அதேபோல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மதுபானங்கள் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது என்ற சமூக நல ஆர்வலர்களின் மனக்குமுறலுக்கும் எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதும் கேள்விக்குறியான ஒன்றுதான்.
“2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மதுவிலக்கை முன்னிறுத்தி திமுக நடத்தாத போராட்டங்களே கிடையாது என்று சொல்லலாம். ஆனால் 2019க்கு பின்பு திமுக இப்பிரச்சனையில் அப்படியே ஜகா வாங்கிவிட்டது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திமுகவினரின் மது ஆலைகள் மூடப்படும்
“ஏனென்றால் 2015 ம் ஆண்டு கோவை நகரில், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, மது ஆலைகளை திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள் என்பது அரசியலுக்காக சொல்லப்படுகிறது. நமது தலைவர் ஒரு விஷயத்தை மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் மதுவிலக்கு அமலான உடனே திமுகவினர், அவர்களது உறவினர்கள் மது ஆலைகள் நடத்தி வந்தால் அதை மூடிவிடுவோம். தமிழகத்தில் மதுவிலக்கு என்பதற்காக வெளி மாநிலத்துக்காக உற்பத்தி செய்யமாட்டார்கள். அது மிக தெளிவாக சொல்லப்பட்டு விட்டது” என்று கூறி இருந்தார்.
அதேபோல் 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு முன்பாக ஏப்ரல் மாதம் விருதுநகரில் நடந்த திமுக மகளிரணி கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி “இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. ஏனென்றால் மதுவுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை இங்கே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது” என்று ஆழ்ந்த கவலையுடன் பேசவும் செய்தார்.
2015ல் மதுவிலக்கு நிச்சயம் வாக்குறுதி
2015 ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அப்போதைய திமுக பொருளாளர் ஸ்டாலின், குறிப்பிட்ட ஒரு சிலர் இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். மதுவிலக்கை திமுகவால் நிறைவேற்ற முடியாது. கருணாநிதி சொல்வார் செய்ய மாட்டார். எனவே நம்பாதீர்கள் என்று இந்த மதுவிலக்கை வைத்து அரசியல் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்க கூடிய சில தலைவர்களெல்லாம் இன்றைக்கு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
முடியாது என்ற வார்த்தையே திமுகவின் வரலாற்றில் கிடையாது. கருணாநிதியின் வரலாற்றிலேயும் கிடையாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணியாக, முதல் நடவடிக்கையாக தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என்று உறுதி கூறினார்.
அதேபோல 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் உடனடியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று ஸ்டாலின் திமுக கூட்டங்களில் பேசியுள்ளார்.
திமுக தோல்விக்கு முக்கிய காரணம்
அதேநேரம், 2021 தமிழக தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது என்பதும் உண்மைதான். அதை மறுக்கவும் முடியாது.
இதற்கு 2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கருணாநிதி தொடர்ந்து கூறி வந்ததுதான் அந்தத் தேர்தலில் திமுக தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் என்று ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்கள் பலரும் நம்பினார்கள். ஏனெனில் அப்போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தது, மது பிரியர்களுக்கு நம்பிக்கை அளிக்க அவர்கள் ஒட்டுமொத்தமாக, அதிமுகவிற்கு வாக்களித்து விட்டனர். அதனால்தான் இரண்டாவது முறையாக அதிமுக, ஆட்சியை கைப்பற்றி விட்டது என்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் கருதினார்கள்.
கலைஞருக்கு பிறகு மறந்த கனிமொழி
அதனால்தான் 2021 தேர்தலில், திமுக முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை அளிக்கவில்லை என்றும் கூறலாம். அதேநேரம் திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்து 3 ஆண்டுகள் கூட முழுமை அடையாத நிலையில் 2021-ல் மதுவிலக்கு தொடர்பான தனது நிலைப்பாட்டை திமுக அப்படியே மாற்றிக் கொண்டு விட்டது ஆச்சர்யம்தான். தந்தை கருணாநிதி உயிரோடு இருந்த வரை திமுக ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் மதுபான கடைகளையும், திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகளையும் இழுத்து மூடுவோம் என்று உரக்க கூறி வந்த கனிமொழி அது பற்றி இப்போது எதுவுமே பேசுவதில்லை.
மாறாக ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையை அதிகரிக்க இலக்கு வைத்து திமுக அரசு செயல்படுவதுதான் நடக்கிறது. எங்கள் தந்தையின் உறுதிமொழியை அவருடைய மறைவுக்குப் பிறகு நாங்கள் நிறைவேற்றப் போவதில்லை என்று ஸ்டாலினும், கனிமொழியும் மறைமுகமாக கூறுவதுபோல இது இருக்கிறது.
20 மாதங்கள் ஆகிவிட்டது
எனவே 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போதாவது 2016 தேர்தலில் கருணாநிதி அளித்த பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை திமுக அளிக்க வேண்டும். ஏனென்றால் படிப்படியாக மதுபான கடைகளை குறைப்போம் என்று திமுக கூறி இருபது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
அதேநேரம் கருணாநிதியின் வாக்குறுதியை வலியுறுத்தி பல நேரங்களில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவருடைய தங்கை கனிமொழியும் பேசி இருக்கின்றனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். எனவே பூரண மதுவிலக்கை தமிழகத்தில் நிறைவேற்றவேண்டிய கடமை திமுகவில் உள்ள மற்ற தலைவர்களை விட இவர்கள் இருவருக்கும் அதிகமாகவே உண்டு” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.