கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்த திமுக அரசு?… விழிபிதுங்கும் சிறுவியாபாரிகள்…!!
Author: Babu Lakshmanan30 March 2022, 8:24 pm
முதல் வெளிநாட்டு பயணம்
முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 4 நாள் பயணமாக அண்மையில் துபாய், அபுதாபி போன்ற ஐக்கிய அமீரக நாடுகளுக்கு
சென்றிருந்தார்.
அப்போது லூ லூ என்ற நிறுவனத்துடன் 3,500 கோடி ரூபாய், ‘நோபல் ஸ்டீல்ஸ்’ நிறுவனத்துடன் 1,000 கோடி ரூபாய், ‘ஒயிட் ஹவுஸ், ஆஸ்டர் டி.எம்.ஹெல்த்கேர், ஷெராப்’ ஆகிய நிறுவனங்களுடன் தலா 500 கோடி ரூபாய், ‘டிரான்ஸ்வேர்ல்டு’ குழுமத்துடன் 100 கோடி ரூபாய் என மொத்தம் 6 நிறுவனங்களுடன் 6,100 கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது.
குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், லூ லூ குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுப் அலியை அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசி
3,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்னும் வகையில் 3 திட்டங்களை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது
திமுகவினராலும், அதன் கூட்டணி கட்சியினராலும் பெரிதும் பாராட்டப்படுகிறது. மிகப் பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த ஒப்பந்தங்களில் 2500 கோடி ரூபாய் முதலீடுகளில் பிரமாண்டமான இரண்டு வணிக வளாகங்கள்,1000 கோடி ரூபாய் முதலீட்டில் ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் ஆகியவையும் அடங்கும்.
இன்னொரு பக்கம் லூ லூ குழுமத்துடன், செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தலையீடு
அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு.
ஸ்டாலினின் துபாய் பயணம், சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது, துபாயில் எங்கெங்கு செல்வது, யார் யாரை அவர் சந்திப்பது, எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, எந்தெந்த நிறுவனங்களுடன் அவர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது போன்றவற்றை தீர்மானித்தது ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், தொழிலதிபர் யூசுப் அலியும்தான் என்று கூறப்படுவதுதான்.
பக்கத்து மாநிலமான கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் தொழிலதிபர். அவருடைய லூ லூ குழும நிறுவனங்கள் உலகம் முழுவதும் இன்று வணிகரீதியாக செயல்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தொழிலதிபர்களை சந்திக்க தொழிலதிபர் யூசுப் அலி
ஏற்பாடு செய்துள்ளார். சுற்றுப்பயணத்தின் 4 நாட்களும் ஸ்டாலினுடன் அவர் இருந்தார், இதன் மூளையாக சபரீசன் இருந்துள்ளார் என்று பரவலாக பேசப்படுகிறது.
இன்னொரு புறம் ஸ்டாலின் தனது மனைவி, மகன், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், மகனின் நண்பர்கள் என குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதனால்தான் முதலமைச்சர் குடும்ப சுற்றுலாவாக துபாய், அபுதாபி சென்று வந்துள்ளார் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கேலி பேசுகின்றன.
அமேசான் கட்டிடம் திறப்பு
இந்த நிலையில் சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனத்தின் 18 மாடிக் கட்டிடத்தை சென்னை பெருங்குடியில் திறந்து வைத்தார்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அமேசான் நிறுவனத்தின் தமிழகத்தின் மிகப்பெரிய அலுவலகமும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய அலுவலகமுமான இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தமிழகப் பயணத்தில் மற்றொரு மைல்கல் இதுவாகும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றுக்கான அமேசான் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை எதிர்நோக்குகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இதுவும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
வாய் திறக்காத விக்கிரமராஜா
இதுகுறித்து அரசியல் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் கேட்போமே!
“திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் கம்பெனி அதிபர்களுக்கு எதிராக முழக்கமிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. அந்த நிறுவனங்கள் தமிழகத்துக்குள் நுழைய முடியாதபடி காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. அதில் பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி பேசினர்.
குறிப்பாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா அமேசான் நிறுவனம் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வது வர்த்தகர்களை பெரிதும் பாதிக்கும் என்று கொந்தளித்து பல தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்.
ஆன்லைன் வர்த்தகத்தால் லட்சக்கணக்கான வியாபாரிகளும் அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுவதாக விமர்சித்த விக்கிரமராஜா, “ஆன்லைன் வணிகம் என்பது வெளிநாட்டு வணிகம். அதில் வெளிநாட்டு சக்திகள் உள்ளே நுழைந்து இங்குள்ள வணிகர்களை சுரண்டிக் கொண்டிக்கின்றன. ஆன்லைன் வியாபாரம் என்பதே ஒரு மோசடி தொழில்” என்று குற்றம்சாட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இப்போது திமுக அரசு வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் தொடங்க, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால், தமிழக வியாபாரிகள் பாதிக்கப்பட மாட்டார்களா, என்ன?…
அதானி, அம்பானி கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க கடந்த ஆட்சி காலத்தில் ஆர்வம் காட்டியபோதெல்லாம் அதை கடுமையாக எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சியினர், வணிகர் சங்கத்தினர் இப்போது எங்கே போனார்கள்? என்கிற கேள்வியும் தானாகவே எழுகிறது.
கோட்டை வட்டாரத்திலோ முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் என்றால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்தான் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்வார்கள். ஆனால் ஸ்டாலினின் துபாய் பயணத்திற்கான ஏற்பாடுகளை சபரீசனும், தொழிலதிபர் யூசுப் அலியும் செய்திருப்பதாக பேசப்படுவது, அரசு அதிகாரிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
புறக்கணிக்கப்படும் மாவட்டங்கள்
இதனால்தான் அரசுக்கு வெளியே அதிகார மையம் இருப்பது நல்லதல்ல என்று கோட்டை அரசு வட்டார அதிகாரிகள் மனதுக்குள் புலம்பியும் வருகின்றனர், என்கிறார்கள். இதை திமுக அரசு புரிந்து கொண்டு செயல்பட்டால் எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சனத்துக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாவதை தவிர்க்க முடியும்
பொதுவாகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை மட்டுமே குறி வைக்கின்றன. பெரிய அளவில் முதலீடுகளையும் செய்ய முன்வருகின்றன. மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் என்றால் 10 கோடி ரூபாய் முதல் அதிக பட்சம் 100 கோடி ரூபாய் வரையிலான தொழில் முதலீட்டு திட்டங்களைதான் தமிழக அரசு மேற்கொள்கிறது.
ஆகையால்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வேலைதேடி செல்வோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டு வருவேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். எனவே 500 கோடி ரூபாய்க்கும் மேலான தொழில் முதலீடுகளையும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு ஈர்ப்பதும் அவசியம். அப்போதுதான் கிராமப்புற மக்கள் வேலை வாய்ப்பிற்காக சென்னையையும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களையும் மட்டுமே தேடிப் போகும் அவல நிலை ஏற்படாது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் சம வளர்ச்சி பெறும்” என்று அந்த அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.