ஈரோடு கிழக்கு பார்முலாவை உருவாக்கி ஜனநாயக படுகொலை செய்துள்ளது திமுக : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan2 மார்ச் 2023, 8:10 மணி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார்.15-வது சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி.
ஈரோடு கிழக்கு பார்முலா என ஒன்றை உருவாக்கி ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது திமுக. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர்.
‘வாக்காளர் பட்டியலில் முறைகேடு, மக்களை அடைத்து வைத்தல், கட்டற்ற முறையில் பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகித்தல், மக்களை மிரட்டி அச்சமூட்டுதல், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கோயில் முன்னால் நிறுத்தி எலுமிச்சை பழத்தின் மீது சத்தியம் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தி வாக்கு கொள்ளை நடத்தல்’ என்று திமுக நடத்திய வரலாறு காணாத அட்டூழியங்களை அதிமுக வெளிக்கொண்டு வந்தும், புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜாதி, மத ரீதியாக மக்களை பிளந்து அதன்மூலமாக வாக்குகளைப் பெறும் வழக்கமான திமுகவின் பாணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரங்கேற்றப்பட்டது. திமுகவினர் பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது திமுகவுக்கு அழகல்ல. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது இடைத்தேர்தலில் அவரை விட சுமார் 15,000 வாக்குகள் குறைவாக வாக்குகளை பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.
0
0