போலி ரசீது அடித்து திமுகவினர் வசூல் வேட்டை: அமைச்சர் பெயரை சொல்லி மிரட்டி பணம் பறிப்பு…திமுகவினர் அடாவடி..!!
Author: Rajesh6 April 2022, 9:13 am
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலின் தேர் திருவிழாவின் போது திமுகவினர் கடைக்காரர்களிடம் போலி ரசீது அடித்து வந்து மிரட்டி பணம் வசூலித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பேரூரில் பழமை வாய்ந்த பட்டீஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த தேர்த்திருவிழா இந்த ஆண்டு கடந்த மாதம் 15ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்காள பக்தர்கள் கலந்து கொண்டு ஈசனின் அருளாசி பெற்றுச்சென்றனர்.
இந்நிலையில் திமுகவை சேர்ந்த ஞானவேல் மற்றும் 6 வது வார்டு கவுன்சிலர் மோகன் உள்ளிட்டோர் இத்தேர்த்திருவிழாவின் போது போலி ரசீது அடித்து வந்து கடை வைத்திருந்த கடைக்காரர்களிடம் மிரட்டி ரூ.200 வசூல் செய்துள்ளனர்.
இதுகுறித்து கேட்டதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எங்களுடைய கட்சியை சேர்ந்தவர். நாங்கள் சொல்வதைத்தான் அவர் கேட்பார் என கூறி அடாவடியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூர் பேரூராட்சியின் தலைவர் அண்ணாத்துரை தனக்கு தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும்,பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யவும் ஏலம் விடப்படாத நிலையில் திமுகவினர் எப்படி வசூல் வேட்டையில் ஈடுபட்டனர் என பொதுமக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
திமுகவினரின் அடாவடி வசூல் வேட்டை குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுக தலைமை இதுபோன்ற கட்சி நிர்வாகிகளை களையெடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.