டெல்டா பீதியில் திமுக?…. கூட்டணி கட்சிகளுக்கு தாராளம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 9:11 pm

தென் மாவட்டங்களில் உள்ள பத்து நாடாளுமன்ற தொகுதிகளில் 7-ஐ கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியதால் அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இதே போன்ற பஞ்சாயத்து காவிரி டெல்டா மாவட்டங்களிலும் எழுந்துள்ளது.

டெல்டா மாவட்ட தொகுதிகள் என்று அழைக்கப்படும் கடலூர், சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய ஆறு எம்பி சீட்டுகளில் ஒரேயொரு இடத்தில்தான் திமுக களம் காண்கிறது. அதாவது தஞ்சாவூரில் மட்டும் திமுக வேட்பாளர் முரசொலி என்பவர் போட்டியிடுகிறார்.

அதேநேரம் கடலூரில் காங்கிரஸ் சார்பில் விஷ்ணு பிரசாத்தும், மயிலாடுதுறையில் வக்கீல் சுதா ராமகிருஷ்ணனும், சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவனும், திருச்சியில் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செல்வராஜூம் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

அதேநேரம் 2019 தேர்தலில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக போட்டியிட்டு மூன்றிலும் வெற்றி பெற்றது. தற்போதோ தஞ்சாவூரில் மட்டுமே தனது வேட்பாளரை களமிறக்கி விட்டுள்ளது.

இதுதான் திமுகவினரின் மனக்குமுறலுக்கு முக்கிய காரணமே. ஏனென்றால் 2021 தமிழகத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் திமுக அமோக அறுவடை செய்தது.
இங்குள்ள 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி கண்டது. இவற்றில் திமுக மட்டும் 28 தொகுதிகளில் வென்றது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 சீட்டுகளை திமுகவும் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின.

இத்தனை இடங்களில் வெற்றி பெற்றும் கூட இந்த நான்கு மாவட்டங்களிலும் திமுக எம்எல்ஏக்கள் யாருக்கும் அமைச்சர் பதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அளிக்கவில்லை. இது தொடர்பாக இந்த மாவட்டங்களின் செயலாளர்கள், நிர்வாகிகள் “கருணாநிதி காலத்தில் எப்படியும் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் குறைந்தபட்சம் இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிடும்.
ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் அப்படி நடக்கவில்லையே” என்று தங்களது ஆதங்கத்தை அறிவாலயத்தில் கொட்டி தீர்த்தனர்.

இப்படி இரண்டு ஆண்டுகள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு பின்பு மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவான டிஆர்பி ராஜாவுக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பதவியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். ஆனால்
இதிலும் திமுகவினரை திருப்தி படுத்த முடியவில்லை. ஏனென்றால் டிஆர்பி ராஜா திமுக பொருளாளர் டி ஆர் பாலுவின் மகன் என்பதுதான். அதேநேரம் அவர் அமைச்சர் உதயநிதியின் ஆதரவைப் பெற்றவர் என்பதால் அந்தக் கோபத்தை திமுகவினரால் வெளிக்காட்ட முடியாமல் போனது என்றே சொல்ல
வேண்டும்.

அதேநேரம் “தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக அளவில் தொகுதிகளை திமுக ஒதுக்கி கொடுப்பது தொடர்ந்தால் எதிர்காலத்தில் கட்சிக்கு இப்பகுதிகளில் படிப்படியாக செல்வாக்கு குறைந்து விடும். மாவட்ட செயலாளர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி கொண்டால் கூட்டணிக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிடும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் நாம் அதிக தொகுதிகளில் போட்டியிட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இது நல்லது அல்ல” என்று திமுக தொண்டர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கி விட்டதை காண முடிகிறது.

ஆனால் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய ஐந்து தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்து விட்டு தஞ்சையில் மட்டும் திமுக போட்டியிடுவதற்கு வேறொரு முக்கிய காரணமும் உண்டு.

தஞ்சாவூரைப் பொறுத்தவரை 1996 முதல் 2019 ம் ஆண்டு வரை 2014 தவிர்த்து தொடர்ச்சியாக திமுக ஆறு முறை வெற்றி கண்டுள்ளது. கடந்த தேர்தலில் இத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ் எஸ் பழனிமாணிக்கம், தமாகா வேட்பாளர் நடராஜனை மூன்று லட்சத்து 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆறாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். அதனால் இந்த தொகுதியை
மட்டும் தற்போதைய தேர்தலில் திமுக எடுத்துக் கொண்டுள்ளது.

அதேநேரம் நான்கரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வென்ற திருச்சி தொகுதியில் திமுக போட்டியிடாமல் மதிமுகவுக்கு ஸ்டாலின் ஒதுக்கியிருக்கிறார். இங்கு திமுகவே போட்டியிட்டு இருக்கவேண்டும் என்பது அக்கட்சியினரின் எண்ணமாக உள்ளது. இதேபோல்தான் மயிலாடுதுறை தொகுதியில் சென்ற தேர்தலில் 2 லட்சத்து 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக இப்போது அதை காங்கிரசுக்கு ஏன் கொடுத்தது என்ற கேள்வியும் திமுகவினரிடம் எழுந்துள்ளது.

“இப்படி ஒரே நேரத்தில் டெல்டா மாவட்ட தொகுதிகளில் திமுக மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காரணம் காவிரி நீர் பிரச்சனையில் திமுகவுக்கு பெரிய அளவில் தோல்வி ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நாங்கள் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறி அதற்காக பட்ஜெட்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கவும் செய்கின்றன. அதுவும் கர்நாடக காங்கிரஸ் அரசில் தற்போது நீர்வளத் துறையை தன் வசம் வைத்துள்ள துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. நாங்கள் இதைத் தேர்தலில் வாக்குறுதியாகவே மக்களுக்கு அளித்திருக்கிறோம். எங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி நீர் பிரச்சினை வராது.

எங்கள் மாநிலத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி எங்களால் யோசிக்கவே முடியாது என்றும் கூறுகிறார்.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரசும், திமுகவும் இருக்கின்றன. ஆனாலும் முதலமைச்சர் ஸ்டாலினால் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைக் கேட்டு பெற முடியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருகிறது.
இப் பிரச்சனை நாடாளுமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் எதிரொலித்தால் திமுகவுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.

இதற்குப் பயந்துதான் கூட்டணி கட்சிகளுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கிவிட்டு திமுக ஒரே இடத்தில் மட்டும் போட்டியிடுகிறதோ என நினைக்கத் தோன்றுகிறது.

மேலும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலம் என்னும் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. அது இன்றுவரை டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு, அதிமுக கூட்டணி பலத்த சவாலை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தஞ்சாவூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முருகானந்தம் மக்களிடம் பரிச்சயமானவர் என்பதால் அங்கு
அவர் பலத்த மும்முனை போட்டியை நிச்சயம் ஏற்படுத்துவார்” என அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 316

    0

    0