ஆளுநர் ரவி மீது உச்சகட்ட கோபத்தில் திமுக?…நாடாளுமன்றத்தில் டி ஆர் பாலு ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan5 April 2022, 11:51 pm
தமிழக ஆளுநராக, ஆர் என் ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே நாகாலாந்து மாநில ஆளுநராக அவர் இருந்தபோது,போராட்ட குழுக்களை அமைதி பாதைக்கு திருப்பியவர் என்பதால் தமிழகத்தில் அவருடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து கட்சிகளிடமும் ஏற்பட்டது.
தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு
எனினும் அவர் தமிழக ஆளுநராக பதவி ஏற்கும் முன்பாகவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் ரவியின் நியமனத்தை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்தனர்.
ஆர் என் ரவி, தமிழக ஆளுநராக பதவி ஏற்ற பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கின.
இதற்கிடையேதான், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாவை, கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு திமுக அரசு அனுப்பியும் வைத்தது.
நீட் மசோதாவை திருப்பி அளித்த ஆளுநர்!!
ஆனால் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா, சமூக நீதிக்கு எதிராக இருப்பதாக கூறி, கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கே ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி வைத்தார். இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
ஏனென்றால் திமுக ஆட்சி அமைந்ததும், முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதாகத்தான் இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தொடர்ந்து வாக்குறுதி அளித்தார். இதேபோல திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என்றும் அதிரடி காட்டினார்.
இதனால் ஆளுநர் ரவி நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது திமுக தலைவர்களுக்கு கௌரவப் பிரச்சனையாக மாறியது.
மீண்டும் மசோதாவை நிறைவேற்றிய திமுக அரசு
இதனால் பிப்ரவரி 8-ம் தேதி, சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை திமுக அரசு மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இரண்டாவது முறையாக நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் அனுப்பிவைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளதால் ஆளுநர் ரவி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விடுவார் என்றே, முதலமைச்சர் ஸ்டாலின் கருதினார். ஆனால் இரண்டு மாதங்களாகியும், கூட இதுவரை அந்த சட்ட மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை.
ஆளுநரை சந்தித்து பேசிய முதலமைச்சர்
இதற்கிடையே, சில வாரங்களுக்கு முன்பு ஆளுநர் ரவியை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைவில் ஆளுநர் அனுப்பி வைப்பார் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. அதேசமயம் நீட் தேர்விற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா பிரச்சனையில் மட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கை, ஆன்மீக கலாச்சாரம் போன்ற பல முக்கிய விஷயங்களில் திமுக அரசின் கொள்கைக்கு மாறான நிலையில் ஆளுநர் ரவி காணப்படுகிறார்.
நீட் விலக்கு சட்ட மசோதா மட்டுமின்றி கூட்டுறவு சங்கங்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை தமிழக அரசே நியமிப்பது குறித்து நிறைவேற்றப்பட்ட மசோதா, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இருந்து 5 உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான மசோதா, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக்கிடக்கின்றன என்கிறார்கள்.
அமித்ஷாவை சந்தித்த ஸ்டாலின்
மிக அண்மையில் திமுக அலுவலகத் திறப்பு விழாவிற்காக 3 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகும் கூட தமிழக ஆளுநர் ரவி அசைந்து கொடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்தே ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் சட்ட மசோதாக்கள் மீது, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவர் முடிவு எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் தனி நபர் மசோதாவை டெல்லி மேல்-சபையில் திமுக எம்பி வில்சன் தாக்கல் செய்து இருக்கிறார்.
தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்திய திமுக எம்பி!!
அதேநேரம் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் ஒன்றை டி ஆர் பாலு அளித்தார். ஆனால் இதன் மீது விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதுகுறித்து டி ஆர் பாலு கூறும்போது, “அரசியலமைப்பு சட்டத்தின் 200-வது விதிகளை தமிழக ஆளுநர் தொடர்ந்து மீறி வருகிறார். எனவே அவரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டது” என்றார்.
இதன் மூலம் தமிழக ஆளுநர், திமுக அரசு இடையேயான மோதல் உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
இதுகுறித்து டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: “10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியதால் எந்த சிக்கலும் இன்றி ஆட்சியை நடத்தலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின், நினைத்தார். ஏனென்றால் அவர் முதலமைச்சராக பதவி ஏற்ற நேரத்தில் அதிகம் அதிர்ந்து பேசாத பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தார். ஆனால் அவர் திடீரென பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு மத்திய அரசுப் பணியில், அதுவும் பலகாலம் உளவுத்துறையில் பணியாற்றி அனுபவம் பெற்றவரான ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவருக்கு எப்போதுமே கறாராக நடந்து கொள்ளும் குணம் உண்டு.
அண்ணாமலை – ஆர்எஸ் பாரதி மோதல்
அதேநேரம் திமுக அரசும், அமைச்சர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை கண்டறிந்து, அதில் ஏதாவது வில்லங்கம், சிக்கல் இருந்தால், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அதை பொதுவெளியில் போட்டு உடைத்து விடுகிறார்.
அண்மையில் திமுக எம்பி ஆர் எஸ் பாரதி, அண்ணாமலையை எச்சரிக்கும் விதமாக உரிய நேரத்தில் அவர் சிறைக்கு செல்வார் என்று கூறியதற்கு, நாங்கள் நடவடிக்கை எடுத்தால் உரிய நேரத்தில் திமுகவினரில் பாதிப் பேர் சிறையில்தான் இருப்பார்கள் என்று அண்ணாமலை பதிலடி கொடுத்து கடுப்பேற்றியதை திமுக தலைமையால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்போது அண்ணாமலை பற்றி அவர்கள் அதிகம் பேசுவதில்லை.
தவிர தமிழக அரசின் முதல் தலைவராக இருக்கும் ஆளுநருக்கு தெரியாமல், எதையும் செய்ய முடியாது என்பதால், திமுக தவியாய் தவித்து வருவது வெளிப்படையாகவே தெரிகிறது.
டெல்லியில் கடந்த 2-ம் தேதி நடந்த திமுக அலுவலகக் கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரில் யாராவது ஒருவர் கலந்துகொண்டு இருந்தால்கூட அதை தமிழகத்தில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திமுக தலைமை கருதியிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம், தமிழக மக்களிடம் மத்திய அரசுக்கு எதிரான எண்ணத்தை ஏற்படுத்த, திமுக அரசு என்னவெல்லாம் செய்கிறது என்பதை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கவனத்திற்கு உரிய முறையில் தமிழக ஆளுநர் ரவி, முன்கூட்டியே கொண்டு சென்றுவிட்டதுதான்.
திமுக திட்டத்தை உடைத்த ஆளுநர்
தங்களின் திட்டத்தை, ஆளுநர் தவிடுபொடியாக்கி விட்டாரே என்ற கோபத்தில்தான், அவரை திரும்ப பெறக் கோரி, நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்பத்
தொடங்கி இருக்கிறார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.
தவிர இந்தாண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக திமுக அரசால் தமிழகத்தில் நடைபெறும் நீட் தேர்வை தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வை சந்திக்கும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்களை நடத்தவேண்டிய நிலையும் உருவாகிவிட்டது.
இதனால் தமிழக ஆளுநர் ரவி- திமுக அரசு இடையேயான மோதல் பூதாகரமாக மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இது குறைந்த பட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரவே செய்யும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.