டிஆர் பாலுவுக்கு எதிராக போர்க்கொடி… டெல்டா திமுகவில் திடீர் கொந்தளிப்பு…! ‘அப்செட்’டில் CM ஸ்டாலின்!

Author: Babu Lakshmanan
12 May 2023, 8:44 pm

முதலமைச்சர் ஸ்டாலின் மூன்றாவது முறையாக தனது அமைச்சரவையை மாற்றி அமைத்திருப்பது மாநிலம் முழுவதும் திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆவடி நாசர், பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதும், திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பியின் மகனும் மன்னார்குடி எம்எல்ஏவும் ஆன டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அக்கட்சியினர் இடையே பெரும் பேசு பொருளாகவே மாறிவிட்டது.

ஏனென்றால் தஞ்சை, திருவாரூர், நாகை,மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் தங்களது பகுதியில் வசிக்கும் திமுக எம்எல்ஏக்களில் யாராவது ஒருவருக்குத்தான் நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

குறிப்பாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்களிடம் பரவலாக காணப்பட்டது.

ஏனென்றால் திமுக தலைவர் கருணாநிதிக்காக 2011, 2016 தேர்தல்களில் திருவாரூர் தொகுதியை விட்டுக் கொடுத்தவர்தான் பூண்டி கலைவாணன். அவருடைய மறைவிற்கு பின்பு 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் இயல்பாகவே பூண்டி கலைவாணனுக்குத்தான் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவருடைய ஆதரவாளர்கள் பெரிதும் நம்பினர்.

அதேபோல் 1989 தேர்தலில் திருவையாறு தொகுதியில் நடிகர் சிவாஜிகணேசனை தோற்கடித்து அங்கு 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை சந்திரசேகரனும் தனக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி ஆர் பாலுவின் மகனுக்கு அமைச்சர் பதவி போய்ச் சேர்ந்துவிட்டது.

டிஆர்பி ராஜா திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர் என்றாலும் கூட அவருடைய வசிப்பிடம் சென்னை என்பதால் 2011 தேர்தலில் முதன்முதலாக மன்னார்குடி தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும் அப்போது திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் டிஆர்பி ராஜாவின் பெயர் இடம் பிடித்திருந்தால் நாளடைவில் அந்த சலசலப்பு அடங்கிப் போனது. அந்தத் தேர்தலில் 23 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி கண்டாலும் கூட அதில் டிஆர்பி ராஜாவும் ஒருவராக இருந்தார். அதைத்தொடர்ந்து 2016, 2021 தேர்தல்களிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

என்றபோதிலும் கூட சொந்த தொகுதியை டிஆர்பி ராஜா எட்டிப் பார்ப்பது அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகள் ஒரு சில விசேஷங்களில் மட்டுமே என்பதால் திருவாரூர் மாவட்ட திமுகவினர் அவரை அந்நியமாகவே பார்த்து வந்தனர். கட்சியில் தந்தைக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவர் அரசியல் நடத்தியதும் திமுகவில் நீண்ட காலமாக உள்ள உள்ளூர் நிர்வாகிகளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்கிறார்கள்.

இதனால் டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் ஒரு பரபரப்பு சுவரொட்டியை அச்சிட்டும் ஒட்டி இருக்கிறார்கள்.

அதில், “திருவாரூர் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றி கழகத்திற்கும் மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எங்கள் திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அவர்களுக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும். கழகத்திற்காக நாங்கள் இல்லை. எங்கள் கலைவாணனுக்காக மட்டும்தான் கழகத்தில் நாங்கள் இருக்கோம்” என்று கொந்தளித்து உள்ளனர். இந்த போஸ்டரை பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர்கள் அதிகளவில் முகநூலில் பகிர்ந்தும் வருகிறார்கள்.

அதேபோல் “கலைவாணனுக்காகத்தான் திமுகவில் இருக்கிறோம், கழகம் வேண்டாம்,  கலைவாணன் போதும்” என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் பூண்டி கலைவாணனின் மூத்த மகன் கலை அமுதன் ஒரு பதிவை முகநூலில் பகிர்ந்துள்ளார். அதில், “நேற்று அப்பாவிடம் கழக உறுப்பினர்கள்: நம் மாவட்ட கழகத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் இஷ்டப்பட்டு செய்றீங்க! எவ்வளவு செலவு? போராட்டம், ஜெயில் ஆனால் அங்கீகாரம் வேறொருவருக்கா? அதற்கு அப்பாவின் பதில்: நம் வீட்டிற்கு வேலி நான் கட்டாமல் வேறு யாரு கட்டுவாங்கனு நினைத்து கொண்டு இருக்கமுடியும் என்றார். நம் மாவட்ட கழகத்தை தன் வீடாக நினைக்கும் இவர் மனதிற்கு நல்லதே நடக்கும். நீங்கள் என் இணையற்ற ஹீரோ” என்று புகழ்ந்து இருக்கிறார்.

இதனிடையே ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, ”தமிழக முதலமைச்சரின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மிகச் சிறப்பான அமைச்சர் என்று நல்ல பெயரை இவர் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்று குறிப்பிட்டார்.

அப்போது ஒரு செய்தியாளர் ஒருவர் ‘பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலருக்கு இதில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறதே’ என்ற கேள்விக்கு, ”இல்லை.. இல்லை.. அவர் எங்களது நண்பர். எங்களுடைய மாவட்டச் செயலாளர். இவர் அமைச்சராக அவரும் ஒரு காரணம். அவர்தான் மிக முக்கியக் காரணம்” என்று மறுத்தார்.

“டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது தனது தந்தையால் மட்டுமல்ல. அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்பதும் ஒரு காரணம்.

டி ஆர் பாலுக்கு தற்போது 82 வயது ஆகிறது. 6 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும் உள்ளார். அதனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, தான் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் போதே தன் மகனுக்கு அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு நிச்சயம் வந்திருக்கும். அதனால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுங்கள் என்று கேட்டிருக்கும் வாய்ப்புகளும் அதிகம். மேலும் அமைச்சர் உதயநிதியும், டிஆர்பி ராஜாவும் சம வயது உடையவர்கள் என்பதால் நெருக்கமான நட்பு உள்ளது. எனவே உதயநிதி கூட தந்தையான முதலமைச்சரிடம் சிபாரிசு செய்திருக்கலாம்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஆனால் தந்தை, மகன், பேரன் உறவு முறையில் திமுகவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடம் காலப்போக்கில் மனச் சோர்வையே ஏற்படுத்தும். கட்சிக்காக நாம் எவ்வளவு காலம் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நம்மால் எம்எல்ஏவாகவோ, எம்பி ஆகவோ ஒருபோதும் முடியாது. ஒரு வார்டு கவுன்சிலர் ஆவது கூட மிகக் கடினம். கடைசி வரை தொண்டனாகவே இருக்கும் நிலைதான் ஏற்படும் என்ற எண்ணம் வலுப்பெற்றால் அது திமுகவை பலவீனப்படுத்தவே செய்யும். இது கட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் போது திமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றபோது பல்வேறு மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்தலில் கொங்கு மண்டலம் திமுகவிற்கு கை கொடுக்காத நிலையிலும் அப்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செந்தில்பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் திமுகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டெல்டா மாவட்டத்தில் ஒரு அமைச்சர் கூட நியமிக்கப்படாதது அப்பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை கடும் அதிர்ச்சியடையச் செய்தது.

இப்போதும் கூட ஆவடி நாசருக்கு பதிலாக பெரும்பாலான நேரங்களில் சென்னையிலேயே வசிப்பதாக திமுகவினரால் கருதப்படும் டிஆர்பி ராஜாவுக்குத்தான் அமைச்சர் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால்தான் பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்களும், திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் ஆதரவாளர்களும் மிகுந்த கொந்தளிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

டெல்டா மாவட்ட எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளின் மனவேதனையை திமுக தலைமை புரிந்து கொண்டால் சரி!

  • Gautham Menon Talked Openly About Suriya சூர்யா என்னை ரிஜெக்ட் பண்ணி தப்பு செஞ்சுட்டாரு : கௌதம் மேனன் ஆதங்கம்!