காங்கிரஸ் கட்சிக்கு அவமானத்தை கொடுக்க காத்திருக்கும் திமுக… நீங்க தலைகீழ நின்னாலும் அது கிடைக்காது : குஷ்பு கடும் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan31 December 2023, 6:59 pm
காங்கிரஸ் கட்சிக்கு அவமானத்தை கொடுக்க காத்திருக்கும் திமுக… நீங்க தலைகீழ நின்னாலும் அது கிடைக்காது : குஷ்பு கடும் விமர்சனம்!!
இந்தியா கூட்டணி இந்தாண்டுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றும் வட மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க யாரும் தயாராக இல்லை என்றும் தமிழ்நாட்டில் திமுகவை நம்பி காங்கிரஸ் இருக்கிறது எனவும் குஷ்பு கூறியுள்ளார். காங்கிரஸ் கேட்கும் அதிக தொகுதிகளை திமுக கொடுக்காது எனக் கூறியுள்ள குஷ்பு, பிரதமர் மோடி தான் மீண்டும் 3வது முறையாக பிரதமராவார் என நம்பிக்கை பொங்க கூறியிருக்கிறார்.
வரும் புத்தாண்டு நிச்சயம் பல புதுமைகளை படைக்கும் என்றும் பிரதமர் மோடிக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் எனவும் கூறியுள்ள அவர் மோடி தலைமையில் நாடு மேலும் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மம்தா பானர்ஜி பகிரங்கமாகவே கருத்துக் கூற தொடங்கியிருக்கிறார் என்றும் காங்கிரஸ் கட்சியை சுமக்க சமாஜ்வாதி கட்சிக்கும் விருப்பமில்லை எனவும் குஷ்பு கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஷாக் அடிக்கும் வகையில் இருப்பதாகவும் மக்களை திண்டாட விட்டுவிட்டு அவர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள் எனவும் குஷ்பு விமர்சித்துள்ளார்.
தென் மாவட்ட மக்கள் இன்னும் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீளவில்லை என்றும் வரட்டும் தேர்தல் எனக் காத்திருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். தாங்கள் பிரதமர் வேட்பாளராக மோடி முகத்தை காட்டி ஓட்டுக் கேட்பதை போல் இந்தியா கூட்டணியில் யார் முகத்தை காட்டி ஓட்டுக்கேட்பார்கள் என வினவியுள்ளார்.
உலகத் தலைவர்கள் வரிசையில் 78% ஆதரவை பெற்று முதலிடம் வகிப்பவர் பிரதமர் மோடி என பெருமிதம் தெரிவித்துள்ள குஷ்பு இந்தியா கூட்டணிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சப் போவதாக தெரிவித்துள்ளார். சமீபநாட்களாக மீண்டும் ஆக்டிவ் பாலிடிக்ஸுக்கு திரும்பியுள்ள குஷ்பு இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் விமர்சித்து வருகிறார்.