பிரதமர் பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள அடிக்கடி தமிழகம் வருகிறார் மோடி ; முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!!!
Author: Babu Lakshmanan4 March 2024, 7:46 pm
பிரதமர் நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்காக ரூபாய் 114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் புத்தகம் பரிசாக கொடுத்து மேளதாள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, ரூ.114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் ஏழு மாடி பிரமாண்ட கட்டிடமாக கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து உள்ளே சென்று பார்வையிட்டார்.
தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக நாகையிலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன் பின் பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக சாலை கட்டமைப்பு வசதிகள் மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் பொது மக்களின் நலன் சார்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தல் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் 114.48 கோடி மதிப்பீட்டில் நிறைவுற்ற திட்டப்பணிகளான நாகப்பட்டினம் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் நன்னிலம் அரசு மருத்துவமனை, சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 71 கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தல், அடிக்கல் நாட்டு விழாவாக 88.62 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை குத்தாலம் நாகூர் மருத்துவமனை உள்ளிட்ட 40 பணிகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 12,653 பயணாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் என 655.44கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள் மெய்யநாதன் , ரகுபதி , கே.என். நேரு , துரைமுருகன் , ஏ.வ.வேலு , எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், டிஆர்பி ராஜா கே.கே எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் உடனிருந்தனர். முன்னதாக முதலமைச்சருக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது :- மயிலாடுதுறை காவேரி பாசனத்தால் வேளாண்மை செழிப்போடு இருக்கக்கூடிய மாவட்டம். புகழ்பெற்ற பழமையான திருக்கோயில்கள் நிறைந்து இருக்கக்கூடிய மாவட்டம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் ஏழுநிலை மாடம் மற்றும் சிற்பக்கூடம் கொண்ட மாவட்டம் மயிலாடுதுறை.
மேலும், முன்சீப், வேதநாயகம், மணிமண்டபம் மற்றும் தமிழிசை மூவர் மண்டபம் புனரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக கூறினார். இது போன்ற மாவட்டத்தின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம் என தெரிவித்தார்.
புதிய மாவட்டம் அறிவிப்பது பெரிது அல்ல அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருவதுதான் மிக மிக உறுதியானது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்டத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் தான் செய்து தரப்பட்டதாக தெரிவித்தார். அதற்கு எடுத்துக்காட்டு தான் இன்றைய தின விழா என கூறினார்.
அறிவிப்புகளை அரசாணையாக மாற்றும் அரசு திமுக அரசு எனவும், அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது இந்த அரசு எனவும் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவோணத்தை தலைமை இடமாகக் கொண்டு பொது வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 7 கோடி 56 லட்சம் ரூபாய் செலவில் ஏற்கனவே பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் 27ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு நேற்றைய முன்தினம் அரசு இதழில் வெளியிடப்பட்டது. புதிய வருவாய் வட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருவதை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதாக கூறினார்.
நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளதாகவும் , கிராமப்புற மக்கள் நத்தம் வீட்டு மனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்திப்பதாக தெரியவந்தது. அதனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார் தெரிவித்தார். கிராமப்புறம் நத்தம் பட்டாவை கணினி மூலியமாக வழங்குவது இதுவே முதல்முறை என கூறினார். முதல்கட்டமாக 75 லட்சத்து 35 ஆயிரத்து 102 பயனாளிகள் இதன் மூலம் பயன்பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் கூடுதல் சிறப்புகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். 150வது ஆண்டில் அடி அடித்து வைக்கும் மயிலாடுதுறை நகராட்சிக்கு 10 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்தார்.
வேளாண் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சீர்காழி வட்டம் பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறிக்கிலும் , தென்னம்பட்டினம் கிராமத்தில் முல்லை ஆற்றின் குறிக்கிலும், தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி கிராமத்தில் நண்டல ஆற்றின் குறிக்கிலும் உப்பு நீர் புகுவதை தடுக்கும் வகையில் கடைமடை நீர் ஒழுங்கி 44 கோடி செலவில் அமைக்கப்படும்.
குத்தாலம் வட்டத்தில் வானாதி ராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்கால் உழவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் கடலங்குடி கிராமத்தில் 2 கோடி 40 லட்சம் செலவில் புதிய அணை அமைக்கப்படும்.
மாவட்டத்தின் மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று வானகிரி 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் எனவும், நாகை மாவட்டம் செறுதூர் வெள்ளையாறு முகத்தாரத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை பாதுகாப்பு சுவர் அமைக்கப்படும், என தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். பூம்புகார் பகுதி மீனவர்கள் பயன்பெறும் வகையில் 2 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் உலர் மீன் தயாரிக்கும் குழுமம் அமைக்கப்படும்.
திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்கள் இருக்கக்கூடிய 12 அரசு கலை மற்றும் மூன்று தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 1642 மேசை மற்றும் கணினிகள் மற்றும் கணினி சார்ந்த உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 கோடி மதிப்பீட்டில் நூலகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கான நிலம் பார்க் அவன்யூ பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். விரைவில் சிறப்பான நூலகம் கட்டப்படும் என தெரிவித்தார்.
திமுக அரசு நம்முடைய அரசு என ஒவ்வொருத்தருடைய மனதிலும் உருவாகி இருப்பதாகவும் கூறினார். அரசின் பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடம் சரியான முறையில் சென்று சேர்ந்துள்ளதா என உறுதி செய்யும் வகையில் வருகின்ற ஆறாம் தேதி புதுத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், நீங்கள் நலமா என்ற திட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் நேரடியாக பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு கருத்துக்கள் கேட்க உள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக நலத்திட்டங்கள் படற்றியும் , பின்னர் அரசின் சலுகைகள் குறித்து கருத்துக்கள் பெறப்பட்டு அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு நாளும் திட்டங்களை பார்த்து பார்த்து அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
நிதி நெருக்கடி இருக்கக்கூடிய சூழ்நிலையில் எந்த நலத்திட்டங்களையும் அரசு நிறுத்தவில்லை எனவும் , மக்கள் தொண்டு ஒன்றுதான் நமது ஆட்சி நோக்கம் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆக இருந்தாலும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் டெல்டா காரன் என்ற உணர்வோடு, இந்த திட்டங்களை துவங்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் வந்து முகத்தை காட்டக் கூடியவர்கள் நாங்கள் இல்லை என்றும் , யார் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என அவசியம் இல்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள் என்றும் , பிரதமர் அடிக்கடி தமிழகம் வருகை தந்து கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு நன்மை செய்துவிட்டு நமது கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு தமிழகம் வரட்டும் என கருத்து தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் மற்றும் ஓட்டு மட்டும் போதும் என வரவேண்டாம் என கருத்து தெரிவித்தார்.
சமீபத்தில் இரண்டு இயற்கை பெரிய பேரிடர்களை எதிர்கொண்டோம். அதை சரி செய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டோம் , அதை கொடுத்துவிட்டு தமிழ்நாட்டில் பிரதமர் வருகிறாரா ? என கேள்வி எழுப்பினார். ஒரு ரூபாய் கூட தமிழகத்திற்கு நிதி உதவி செய்யவில்லை , தங்களுடைய பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள தமிழகமத்திறுகு ஆதரவு கேட்டு வருகிறார்கள் என விமர்சித்தார்.
தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் , தமிழ்நாட்டு உரிமை மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது திராவிட மாடல் அரசு பக்கம் தான் மக்கள் என்றும் உறுதுணையாக இருப்பார்கள் என கூறினார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உள்ளிட்ட 6 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 8 ஏடிஎஸ்பிக்கள், மற்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 1745 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.