விஸ்வரூபம் எடுத்த ‘சின்னவர்’ விவகாரம்..? சிவசேனா வீழ்ச்சியால் U Turn….? கேள்விக்குறியான அமைச்சர் பதவி!

Author: Babu Lakshmanan
5 July 2022, 2:37 pm

அமைச்சர் பதவி

முதலமைச்சர் ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அமைச்சர்களான அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு போன்றவர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இது தொடர்பாக திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், மாவட்ட செயலாளர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதை அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்து நெருக்கடியும் கொடுத்தனர்.

ஆனால் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டுமென்ற திமுகவினரின் முழக்கம் பொதுவெளியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. திமுகவில் வாரிசு அரசியல் திணிக்கப்படுகிறதா?… தலைதூக்குகிறதா?…என்று சமூக ஊடகங்களில் விவாதங்களும் எழுந்தன.

தர்மசங்கடம்

இதைத்தொடர்ந்து என்னை அமைச்சராக்கும்படி யாரும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளை மாவட்ட செயலாளர்களுக்கு வைக்கும் நிலைக்கு உதயநிதி தள்ளப்பட்டார்.

இந்த சர்ச்சைக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில்தான் உதயநிதி, சின்னவர் என்ற அடைமொழி விவகாரத்தில் தற்போது சிக்கிக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம் அவர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது புதுக்கோட்டையில் பேசிய உதயநிதி, “என்னைப் பாராட்டிப் பேசும் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் மீது அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும்போது, மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்றெல்லாம் அழைக்கிறீர்கள். அப்படி அழைப்பதில் எனக்கு துளிகூட விருப்பம் கிடையாது. என்னை சின்னவர் என்றும் அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். அதனால், என்னை சின்னவர் என்றே கூப்பிடுங்கள்” என்று கூறியதாக அச்சு, காட்சி ஊடகங்களிலும் பரபரப்பு தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. திமுக ஆதரவு
செய்தி சேனல்களில் இது பிளாஷ் நியூஸ் ஆக ஒளிபரப்பு ஆனது.

கடவுள் போன்றவர்

மேலும் தஞ்சை சென்ற உதயநிதியின் காலில் தஞ்சை மேயர் ராமநாதன் விழுந்து ஆசி பெற்றார். இதுகுறித்து அவரிடம் எழுப்பியபோது உதயநிதி எனக்கு கடவுள் போன்றவர். அதனால் அவருடைய காலில் விழுந்தேன் என ராமநாதன் விளக்கமளித்தார். 

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏனென்றால் உதயநிதி கடவுள் மறுப்பாளர். தவிர ஒருவரின் காலில் விழுந்து வணங்குவதை திமுக ஒருபோதும் ஏற்காது. அது சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்று கட்சி தொடங்கப்பட்ட 1949-ம் ஆண்டு முதலே திமுக தனது முக்கிய கொள்கைகளில் ஒன்றாக கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம். மேலும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?…என்ற கடும் விமர்சனமும் எழுந்தது.

‘சின்னவர்’ விஸ்வரூபம்

இப்படியொரு சர்ச்சை உருவாகும் என்று உதயநிதியே கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்.
இந்த நிலையில்தான், சின்னவர் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
திமுகவில் உதயநிதி சின்னவர் என்றால் பெரியவர் யார்? என்கிற கேள்வியும் எதிர்க்கட்சியினாரால் கேலியாக எழுப்பப்பட்டது.

இதனால் 6 நாட்களுக்குப் பிறகு, உதயநிதி சின்னவர் பிரச்சினையிலிருந்து தற்போது அப்படியே ஒரு ‘யூ டேர்ன்’ போட்டுள்ளார்.

“என்னை சின்னவர் என்று அழைக்கும்படி நான் யாரையும் சொல்லவில்லை”என்று அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசும்போது “என் மீதுள்ள அன்பால் நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மூன்றாம் கலைஞர், இளம் கலைஞர் என்றெல்லாம் என்னை அழைக்கின்றனர். என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்துகின்றனர்.

கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே. ஒரே கலைஞர்தான். உங்கள் வயது, அனுபவம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது நான் இளையவன். அதனால் சின்னவர் என்றே அழைக்கலாம் என்றுதான் சொன்னேன். யாரையும் நான் அப்படி கூப்பிடும்படி வற்புறுத்தவும் இல்லை. ஆனால் அதை நீங்களே புரிந்து கொள்ளவில்லை. இங்கு யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். அனைவரின் அன்புக்கு நான் அடிமை” என்றார்.

உதயநிதி இப்படி திடீரென சின்னவர் விஷயத்தில் பின் வாங்கியது ஏன்?…

“மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி கவிழ்ந்து போனது காரணமாக இருக்கலாம்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சிவசேனா

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தபோது மறைந்த பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே மராட்டிய முதலமைச்சரானார். அவருடைய அமைச்சரவையில் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கும் இடம் கொடுத்தார்.

அங்குதான் பிரச்சினையே சிவசேனாவுக்கு உருவானது. ஆதித்யா தாக்கரே அத்தனை பொறுப்புகளையும் எடுத்துக்கொண்டு கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். சக அமைச்சர்கள் யாரும் தந்தையைப் பார்க்க முடியாமல் தடுக்கவும் செய்தார் என்ற பேச்சும் உண்டு.

இதைக் கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இதனால் சிவசேனா அமைச்சர்கள், எம்எல்ஏகளுக்கும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே இடைவெளி அதிகம் ஏற்பட்டது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் ஒன்று திரண்டனர். அது உத்தவ் தாக்கரேயின் ஆட்சி கவிழ்ந்து பாஜகவின் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக வழிவகுத்தது. அதாவது கட்சியில் வாரிசு செலுத்திய ஆதிக்கம் உத்தவ் தாக்கரே பதவிக்கு வேட்டு வைத்துவிட்டது.

இதேபோல்தான் தெலுங்கானா மாநிலத்திலும் நிலைமை காணப்படுகிறது. சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள அவருடைய மகன் ராமராவ் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதனால் ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக மக்களின் பார்வை பாஜக மீது வேகமாக திரும்பி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்பது சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ளது. ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவால், சமாஜ்வாடி கட்சி செல்வாக்கை இழந்ததோடு கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாமலும் போனது. இதேபோன்ற நிலைமைதான் பீகார் மாநிலத்தில் வாரிசு அரசியல் நடத்தும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.

வாரிசு அரசியல்

தவிர அண்மைக்காலமாகவே பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாரிசு அரசியலால் இந்தியா சலிப்படைந்து விட்டது. வீழ்ச்சி அடையும் கட்சிகளின் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்கவேண்டும் என்று
காங்கிரசையும் ராகுலையும் சுட்டிக் காண்பித்து பாஜக நிர்வாகிகள் மத்தியில் வலியுறுத்தி பேசி வருகின்றனர். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலைத்தான் பாஜக தீவிரமாக முன்னெடுக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது.

இதையெல்லாம் உணர்ந்துள்ளதால்தான் என்னவோ முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க தயக்கம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

stalin-udhayanidhi-updatenews360

மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாரிசு அரசியல் விவகாரம் அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சார ஆயுதமாக மாறி விடக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருதுவதற்கும் இடமுண்டு. அது திமுகவின் வெற்றிக்கு பாதகமாக கூட அமையலாம். அதனால்தான் சின்னவர் விவகாரத்தில் இருந்து உதயநிதி பின்வாங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

அதேநேரம் சின்னவர் என்கிற சிறப்பு அடைமொழி மீது உதயநிதிக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு.

பதவி டமால்

ஏனென்றால் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் உதயநிதி பேசும்போது, “இங்குள்ள பலர் என்னை ‘சின்னவர்’ என்றும் ‘சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை’ என்றும் அழைப்பதை கேட்கிறேன். இங்குள்ள தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் அனுபவத்துடன் ஒப்பிடுகையில் உண்மையிலேயே நான் சின்னவன் தான். மக்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருந்தார்.

என்றபோதிலும் இப்போதைக்கு உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்பது கேள்விக்குறிதான்!

Udhayanithi - Updatenews360

அதேநேரம் 5 ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என்று ஸ்டாலினும், கனிமொழியும் அடித்து கூறியிருந்தனர். தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அப்போது உதயநிதியும் உறுதியாகச் சொன்னார். ஆனால் நடந்ததோ வேறு.

எனவே அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை என அடியோடு மறுத்து விடவும் முடியாது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 830

    0

    0