யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்….?முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகள் செக்…!
Author: Babu Lakshmanan9 October 2023, 9:11 pm
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு மிகக் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினாலே போதும், அவர்களும் அதை அப்படியே மனதார ஏற்றுக்கொண்டு தேர்தல் வேலையில் படு சுறுசுறுப்புடன் இறங்கி விடுவார்கள் என்று மனக்கோட்டை கட்டியிருந்த திமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பது போல ஒவ்வொரு கட்சியும் அதிக தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்குங்கள் என்று வெளிப்படையாகவே கேட்கத் தொடங்கிவிட்டன.
காங்கிரஸ் மேலிடம் தமிழகத்தில் இந்த முறை 15 சீட்டுகளை திமுகவிடம் கேட்டுப் பாருங்கள், இல்லையென்றால் கண்டிப்பாக 12 தொகுதிகளையாவது போராடி பெற்று விடுங்கள் என்று கட்டளையிட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் சில தினங்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் எம்பி 2009 தேர்தல் போல, 15 சீட்டுகளை ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்று தனிப்பட்ட முறையில் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.
திமுகவின் முழு அபிமானியாக மாறிவிட்ட காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி 2019 தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளை மீண்டும் திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று சிவகாசியில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவன், தங்களது கட்சிக்கு குறைந்தபட்சம் 4 சீட்டுகளை ஒதுக்கும்படி கூறி போட்டியிட விரும்பும் 13 தொகுதிகளின் பட்டியலையும் அறிவாலயத்திடம் கொடுத்திருக்கிறார். அதுவும் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம், பொதுத் தொகுதிகளும் வேண்டும் என கறார் காட்டியும் இருக்கிறார்.
இந்த அதிர்ச்சியில் இருந்தே திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் மீளாத நிலையில் மிக சமீபத்தில் அவரை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது “சென்ற தேர்தலை விட திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டிருக்கிறோம்” என தடாலடியாக தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “ஆசிரியர்களின் அனைத்து போராட்டங்களுக்கு சிபிஎம் ஆதரவு தெரிவித்துக் கொண்டுதான் உள்ளது. ஆசிரியர்களை கைது செய்யக்கூடாது என்றும் அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றும் அறிக்கை கூட வெளியிட்டிருந்தோம். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி சில தீர்வுகளை சொல்லி உள்ளனர். இது இன்றைக்கு வந்த பிரச்னை அல்ல 15 ஆண்டுகாலமாக உள்ளது. 10 வருடங்களாக தீர்க்கப்படாத எல்லா பிரச்னைகளையும் தீர்வுகாண வரும்போது அரசுக்கு கூடுதலான சுமை ஏற்படும்.
திமுகவுடனான கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை, இடப்பகிர்வு என்று வரும் போது நிச்சயம் அதுகுறித்து கோரிக்கை வைப்போம். ஏற்கனவே தந்த தொகுதிகளை குறைத்துக்கொள்கிறோம் என்றா நாங்கள் வலியுறுத்துவோம்? இப்போது இருக்கக் கூடிய தொகுதிகளை விட இன்னும் அதிகமாகத்தானே அனைவரும் எதிர்பார்ப்பார்கள்” என்று திமுகவுக்கு ஒரு செக் வைத்தார்.
அதிமுகவில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அழைப்பு எதுவும் இல்லை. அதிமுக-பாஜக கூட்டணி பிரிந்தாலும் அவர்கள் ஒன்றாக இருக்கும்போது எப்படி எதிர்த்து போராடினோமோ அந்த போராட்டம் தொடரும். 9 ஆண்டுகாலம் பாஜக செய்துள்ள எல்லா துரோகத்திற்கும் அதிமுக உடன்பட்டுள்ளது”என பதில் அளித்தார்.
இதில் வேடிக்கையான ஒரு விஷயம் என்னவென்றால், முதலமைச்சர் ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் அளித்த ஒன்பது அம்ச கோரிக்கை மனுவில் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை கோபம் கொப்பளிக்க மறைமுகமாக சுட்டி காண்பித்திருந்ததுதான்.
குறிப்பாக ‘அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது, இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் – ஓய்வூதியம் வழங்குவது; தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது; அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது’ என்னும் பல கோரிக்கைகளை சொல்லலாம்.
அதாவது தேர்தலில் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்ற கேள்விகளைத்தான் பாலகிருஷ்ணன் தமிழக முதலமைச்சரிடம் கேட்டு இருக்கிறார்.
“தனது கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பது திமுகவுக்கு பெரிய தலைவலி தரும் விஷயமாக உருவெடுத்து வருகிறது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை சிபிஎம் ஆதரிப்பதாக கூறினாலும் அதை நம்புவதற்கு ஆசிரியர்கள் யாரும் தயாராக இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதனால்தான் பேட்டியின்போது ஆசிரியர்களை கைது செய்யக்கூடாது. அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்று அறிக்கை கூட வெளியிட்டிருந்தோம்” என எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வதுபோல பாலகிருஷ்ணன் மழுப்பியும் இருக்கிறார்.
அதேநேரம் மார்க்சிஸ்ட் தலைவர்கள் எப்போதும் நாங்கள் உண்மையை மட்டுமே பேசக்கூடியவர்கள் என்று தங்களை தாங்களே மார்தட்டிக் கொள்ளக் கூடியவர்கள். ஆனால் உண்மையை மறைப்பதில் அவர்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது என்பதும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேட்டியில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
ஒன்பது ஆண்டுகளாக பாஜக செய்த தவறுகளுக்கு அதிமுக உடந்தையாக இருந்துள்ளது என்று கூறுகிறார்.
ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பாஜக அரசுக்கு எதிர்ப்பாகத்தான் செயல்பட்டார். அவர் மறைந்த பிறகு 2017 மார்ச் மாதத்திற்கு பின்புதான் அதிமுக தலைவர்கள் மோடி அரசுக்கு தங்களது ஆதரவைத் அளிக்க தொடங்கினர்.
இந்த கணக்குப்படி பார்த்தால் மோடி அரசுக்கு அதிமுக ஆறாண்டுகள்தான் ஆதரவளித்து வந்திருக்கிறது. ஆனால் பாலகிருஷ்ணன் ஒன்பது ஆண்டுகள் என்று சொல்வதன் மூலம் கணக்கில் அவர் படு வீக்காக இருக்கிறார் என்பது தெரிகிறது.
இன்னொரு பக்கம் திமுக குறித்த விஷயங்களை தனக்கு வசதியாக அவர் மறந்தும் விட்டிருக்கிறார்.
மோடி அரசில் மத்திய அமைச்சர் பதவிகள் எதையும் அதிமுக வகிக்கவில்லை. பாஜக மேலிடம் தருவதாக கூறியும் அதை அதிமுக ஏற்கவில்லை.
ஆனால் 1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில் முரசொலி மாறன், டி ஆர் பாலு போன்றோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். அதுவும் முரசொலி மாறன் இறந்த பிறகு மத்திய அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கு நடத்திய பின்பு அடுத்த சில மாதங்களிலேயே வாஜ்பாய் அமைச்சரவிலிருந்து திமுக விலகிக் கொண்டது.
சுமார் நாலே முக்கால் ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்து விட்டு, அதுவும் முரசொலி மாறன் சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இலாகா இல்லாத அமைச்சராகவும் பதவியில் நீடித்த நிலையில் அவர் மரணமடைந்த பிறகு வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக விலக்கி கொண்டது ஏன் என்பது பாலகிருஷ்ணனுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
அதேபோல பாஜக ஆதரவுடன் நடந்த விபிசிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசில் 1989 முதல் 1990 வரை ஓராண்டு காலம் முரசொலி மாறன் மத்திய மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் இப்போதுள்ள இளைஞர்களுக்கு தெரியாது என்று நினைத்து அதிமுகவை மட்டும் பாலகிருஷ்ணன் சாடுகிறார்.
இப்போது திமுகவிடம் அதிக சீட்டுகள் கேட்கும் தைரியம் மார்க்சிஸ்டுக்கு எப்படி வந்ததாம்?… பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால்தானே சிபிஎம்மால் இப்படி பேச முடிகிறது.
இல்லையென்றால் 2019 தேர்தலில் திமுக தலைமையிடம் இரு கம்யூனிஸ்ட்களும் 25 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது போல இப்போது 50, 60 கோடி ரூபாய் பெற்றுக் கொள்ளும் சூழல்தான் ஏற்பட்டிருக்கும். அதற்காக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.
அதிமுக-பாஜக கூட்டணி நீடித்திருந்தால் தொகுதி பங்கீடு விஷயத்தில் வேறு வழியின்றி திமுக சொல்வதைதான் கேட்கும் நிலைமைக்கு அதன் கூட்டணி கட்சிகள் தள்ளப்பட்டிருக்கும். ஏனென்றால் பிரதமர் கனவுடன் இருப்பதாக கூறப்படும் ஸ்டாலின் 30 தொகுதிளில் திமுக போட்டியிட விரும்பினார். அதன்படி காங்கிரசுக்கு 5, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஓரிடமும் ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டும் இருந்தது.
ஆனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதால் விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகியவற்றுக்கு திமுக தவிர அதிமுகவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பும் காத்திருக்கிறது என்பது வெளிப்படை.
இல்லையென்றால் திமுகவுடன் என்றோ ஐக்கியமாகிவிட்ட மதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் வைகோ எங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று ஸ்டாலினிடம் துணிவுடன் கோரிக்கை வைக்கும் அளவிற்கு அரசியல் சூழல் மாறி இருக்கிறது என்றுதானே அர்த்தம்?
கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ள தொகுதி பங்கீடு கோரிக்கைகளை அறிவாலயம் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நெருக்கடிதான் தற்போது உருவாகி உள்ளது. இதன்படி பார்த்தால் 20 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாத இக்கட்டான நிலை திமுகவுக்கு ஏற்படும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
திமுகவின் இந்த தர்ம சங்கட நிலைக்கு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டீன் மீதான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையின்போது ஒரு தெளிவான விடை கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.