ரகசிய சர்வேயில் திருப்தி அடையாத CM ஸ்டாலின்…? 6 அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு.. ஜூன் 4-க்கு பிறகு நடக்கப்போகும் அதிரடி…!

Author: Babu Lakshmanan
30 April 2024, 8:50 pm

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில் ஜூன் நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது தாங்கள் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்குமா? என்று திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் அலசி ஆராய்வதை இதுவரை நிறுத்தியதாக தெரியவில்லை. ஏனென்றால் பலத்த மும்முனை போட்டியில் வாக்குகள் எந்தப் பக்கம் போகும் என்று கணித்து கூற முடியாத நிலைதான் இதுவரையிலும் நீடிக்கிறது.

2019 தேர்தல் போலவே திமுக வலுவான கூட்டணியை அமைத்திருப்பதால் 39 தொகுதிகளிலும் வெற்றி நமக்கே என்று கணக்கு போடுகிறது.

அதிமுகவோ பெரிய அளவில் கூட்டணி அமையவில்லை என்றாலும் கூட திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியால் 10 முதல்12 சதவீத மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் 7 அல்லது 8 சதவீத வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பினாலே போதும், கட்சிக்கென இருக்கும் பாரம்பரிய ஓட்டுகள் மூலம் குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றி விடலாம் என்று நம்புகிறது.

மேலும் படிக்க: ஐயோ, வேண்டவே வேண்டாம்… ஜுன் 1ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலா..? ராமதாஸ் சொல்லும் புது காரணம்…!!!

தமிழக பாஜகவோ நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் அதனால் திமுகவா? பாஜகவா? என்பதை கணக்கில் எடுத்துதான் மக்கள் வாக்களிப்பார்கள், தவிர 2019 தேர்தல் போல தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை இல்லாததாலும் வலுவான கூட்டணி அமைத்திருப்பதாலும் ஏழு தொகுதிகளில் வெற்றிவாகை சூடி விட முடியும். தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக பாஜகதான் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக வரும் என்றும் பல்வேறு மனக் கணக்குகளை போடுகிறது.

இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளில் களம் இறங்கியவர்களும் திமுக தலைவர் ஸ்டாலினை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவாலயத்தில் சந்தித்து தங்கள் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக நன்றியை தெரிவித்து கொண்டனர்.

“நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று உங்களிடம் ஆசி பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் கூறியும் உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் தமிழக உளவுத்துறை தேர்தல் நடப்பதற்கு முதல் நாளும், வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்பும் எடுத்த ரகசிய சர்வேயில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என்ற தகவலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்து இருந்ததுதான். திமுகவின் ஐ டி விங் நடத்தும் பென் அமைப்பின் கருத்துக்கணிப்பிலும் இதே தகவல் கூறப்பட்டிருந்ததால் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சியினருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது, நிஜம்.

என்றபோதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் இதில் இன்னும் முழு திருப்தி அடையாமல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்களோ அதைவிட இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தமிழக உளவுத்துறை மற்றும் பென் அமைப்பு எடுத்த ரகசிய சர்வேக்களில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக 10 தொகுதிகளில் மட்டுமே ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் 10 தொகுதிகளில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கலாம் என்றும் இன்னொரு பத்து தொகுதிகளில் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிக்கான வாய்ப்பு உண்டு என்றும் அந்த சர்வேக்களின் அடிப்படையில் தயாரித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, என்கிறார்கள்.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் எஞ்சிய 9 தொகுதிகளில் இழுபறி நிலைமைதான் உள்ளது என்பது வெளிப்படை. இதில் அதிமுக கூட்டணிக்கு ஐந்து தொகுதிகளிலும், பாஜக கூட்டணிக்கு நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தென்படுகிறது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.

இந்த இழுபறி நிலைக்கு முக்கிய காரணம் திமுகவில் நிறுத்தப்பட்ட வசதியான சீனியர் வேட்பாளர்கள் பலர் முழுமையாக பணத்தை செலவழிக்காமல் அதை கட்சிக்காரர்களை தலையில் சுமத்திவிட்டனர் என்று கூறப்படுவதுதான். இதில் கட்சிக்காரர்கள் பலருக்கு பெரிய அளவில் கடன் சுமையும் ஏற்பட்டுவிட்டது, என்கிறார்கள்.

இதனால் திமுக நிர்வாகிகளே சில வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கே இவர் பணம் செலவழிக்கவில்லை. ஜெயித்த பிறகு நமக்கு என்ன செய்துவிட போகிறார் என்ற விரக்தியில் பேசவும் ஆரம்பித்துள்ளனர். இதுபற்றிய புகாரும் அறிவாலயம் சென்றுள்ளது.

ஸ்டாலினும் தேர்தல் முடிவுகள் வெளி வரட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பொறுமையாக இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி இருக்கிறார்கள். அதில் யார்-யார் சரிவர பணியாற்றவில்லை, முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள் யார் யார் என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கடந்த தேர்தலை போல் நான்கு, ஐந்து லட்சம் ஓட்டுகள் வித்தியாச வெற்றி எல்லாம் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே எந்த தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி திமுகவில் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்த தேர்தல்தான் 2026 ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அடித்தளம் அமைத்தது போல இருக்கும் என்று ஸ்டாலின் கருதுகிறார். எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு திமுகவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் 6 பொறுப்பு அமைச்சர்களும், ஒன்பது மாவட்ட செயலாளர்களும் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

அதிமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றி தீவிர பிரசாரம் செய்திருந்தாலும் கூட சில மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் வேட்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவரது கவனத்துக்கு வந்துள்ளது.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அழைத்துச் சென்று ஓட்டுக் கேட்க வேண்டியது, அந்தந்த மாவட்டச் செயலாளரின் பொறுப்பு ஆகும். இதற்காக எந்தெந்த பகுதிக்கு எப்போது செல்ல வேண்டும் என்று அட்டவணை தயாரித்து அதன்படி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டும். இந்த பணியை கூட சில மாவட்டச் செயலாளர்கள் சரிவர செய்யவில்லை என்று ஒன்றிய செயலாளர்கள் தலைமைக் கழகத்துக்கு புகாராக அனுப்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியில் உள்ள பிரச்சினைகளையும், புகார்களையும் பட்டியலிட்டு அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம், வடசென்னை, தென் சென்னை, பொள்ளாச்சி, கோவை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட 15 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அதிமுக கருதுகிறது.

அதிமுக கூட்டணிக்கு 30 தொகுதிகளில் இரண்டாம் இடம் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும் கூட குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வெற்றியையும் அக்கட்சி எதிர்பார்க்கிறது. மேலும் ஒட்டுமொத்தமாக 39 தொகுதிகளிலும் ஒரு கோடியே 50 லட்சம் ஓட்டுகளுக்கும் அதிகமாக கிடைத்தால்தான் 2026 தமிழக தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் வலுவான நிலை உருவாகும் என்பதும் அதிமுகவின் கணக்காக உள்ளது.

இதேபோல பாஜகவிலும் நெல்லை, தென்காசி, சிவகங்கை, சிதம்பரம், கோவை, நீலகிரி, தென்சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் கடைசி நேரத்தில் சொதப்பி விட்டதாக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு புகார்களை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அனுப்பி வைத்துள்ளனர். குறிப்பாக கிராமப் புறங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படாமலேயே அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்ததாக கூறி பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகளும் அதில் எழுப்பப்பட்டு உள்ளது.

பாஜக நேரடியாக களம் இறங்கிய 20 தொகுதிகளின் கிராமப்புற வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜெண்டுகள் ஓட்டுப்பதிவு நேரம் முடியும் வரை உள்ளே இருக்காமல் பகல் 11 மணிக்கே வெளியேறி விட்டதாகவும் இதை ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன என்றும் கூறப்படுகிறது.

இதேபோல பாமக போட்டியிட்ட தர்மபுரி, மயிலாடுதுறை உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டுமே வாக்குச்சாவடி முகவர்கள் தங்களது பணிகளை திறம்பட நடத்தி உள்ளனர். மற்ற தொகுதிகளில் அவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிகிறது.

இதனால் பாஜகவிலும் மாவட்ட தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மீதும் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடும் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புள்ளது.

என்றபோதிலும் குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளிலாவது வெற்றியை சுவைத்து விடவேண்டும் என்பது மாநில பாஜகவின் உறுதியான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

என்ன நடக்கிறது, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 345

    0

    0