தொகுதியில் தோல்வியை தழுவினால் உங்கள் அமைச்சர் பதவி போய் விடும் – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை
Author: Babu Lakshmanan25 January 2024, 3:46 pm
அமைச்சர்கள் தங்களின் தொகுதியில் தோல்வியை தழுவினால், அமைச்சர் பொறுப்பையே இழக்க நேரிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த முறை மத்தியில் பாஜகவை வீழ்த்தி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று இண்டியா என்ற கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளன.
பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் எப்படியாவது எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதில் தமிழகத்தில் ஆளும் திமுக கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் படுத்திக் கொள்ளும் வகையில், தொகுதி பங்கீடு நடத்தவும், தேர்தல் அறிக்கையை தயார் செய்யவும், தேர்தலை ஒருங்கிணைக்கவும் தனித்தனியே குழுக்களை திமுக தலைமை அமைத்தது. மேலும், தேர்தல் பணிகளை மற்ற கட்சிகளைக் காட்டிலும் திமுக முன்கூட்டியே மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, அமைச்சர்கள் தங்களின் தொகுதியில் தோல்வியை தழுவினால், அமைச்சர் பொறுப்பையே இழக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், தீர்க்க முடியாத பிரச்சனைகளையும், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் இருக்கும் சாதக, பாதக அம்சங்களை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுக்களிடம் ஆலோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் மாவட்டம் – பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், கூட்டணியை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.