தொகுதி பங்கீட்டில் திமுக கறார்?…கலக்கத்தில் CPM, CPI, விசிக!

Author: Udayachandran RadhaKrishnan
9 செப்டம்பர் 2023, 9:39 மணி
DMK Alliance- Updatenews360
Quick Share

அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழித்தே தீருவேன் என்று அதிரடியாக பேசியது இண்டியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளை தர்ம சங்கட நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. அந்தக் கட்சிகளால் திமுகவின் மன ஓட்டத்தை வெளிப்படுத்துவது போல அமைந்த உதயநிதியின் பேச்சுக்கு நேரடியாக கண்டனத்தையோ ஆதரவையோ தெரிக்க முடியவில்லை என்பதும் நிஜம்!

அதேநேரம் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களான கே எஸ் அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சனாதன ஒழிப்பு விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காட்டும் அமோக ஆதரவு திமுகவுக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.

தொகுதிப் பங்கீடு

இந்த விவகாரத்தில் தேசிய அளவில் சில முக்கிய கட்சிகள் எதிரும் புதிருமான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், தமிழகத்தில் மட்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தபோது திமுக கூட்டணி எவ்வளவு வலிமையாக இருந்ததோ அதேபோன்ற பலத்துடன் இப்போதும் இருப்பதாக அறிவாலயம் நம்புகிறது.

இந்த நிலையில்தான் மும்பையில் ஆகஸ்ட் 31 செப்டம்பர் 1ம் தேதி என இரண்டு நாட்கள் நடந்த எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை 2024 தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், அதற்கு முன்பாக முதலில் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கி விடலாம் என்ற கருத்தை திமுகவும், ஆம் ஆத்மியும் முன் வைத்துள்ளன.

குறிப்பாக, ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்றால் தொகுதி பங்கீடு தான். அதுபற்றி விவாதிக்காமல், தொடர்ந்து கூட்டம் போட்டு பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்கவேண்டும். அப்போதுதான் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியும். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அதன் பலன் குறைவாகத்தான் இருக்கும்” என்று சற்று ஆவேசமாகவே வலியுறுத்தினார்.

முதல்கட்ட பேச்சுவார்த்தை

இதை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. இது பற்றி ராகுல் காந்தி கூறுகையில் ‘இண்டியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டை உடனடியாக துவங்கி, விரைவில் முடிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது” என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டது.

திமுக கூட்டணியில் 13 கட்சிகள் இருந்தாலும் கூட 2019 தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய 7 கட்சிகளுக்கு தான் திமுக தலைமை தொகுதி ஒதுக்கீடு செய்தது. இதில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் கொடுக்கப்பட்டது.

உதயநிதி போட்ட பிளான்

ஆனால் இம்முறை திமுக மட்டுமே 30 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறார். சனாதன ஒழிப்பு பேச்சுக்கு முன்பாக திமுக 27 இடங்களில் போட்டியிடவேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமாக இருந்தது. ஆனால் தேசிய அளவில் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக தற்போது அந்த இலக்கு 30 ஆக அதிகரித்து விட்டது, என்கிறார்கள்.

மேலும் திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த 20 பேராவது நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக உட்காரவேண்டும் என்று உதயநிதி, தனது தந்தையான திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அதை ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டு விடுவார் என்கிறார்கள்.

இதனால் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தவிர அத்தனை கட்சிகளும் அரண்டு போய் இருக்கின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு எம் பி சீட் ஒதுக்கப்படமாட்டாது என்பதை திமுக தலைமை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனிடம் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டது.

அதிர்ச்சியில் மார்க்சிஸ்ட்

அதேபோல மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை மதுரை, கோவை என இரண்டு தொகுதிகளை ஒதுக்கிய திமுக வரும் தேர்தலில் கோவையை மட்டும் தரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்டுக்கு 2019 தேர்தலில் திமுக ஒதுக்கீடு செய்தது. ஆனால் 2024ல் நாகப்பட்டினம் தொகுதியை மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்க தீர்மானித்து இருக்கிறது.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்து விடக்கூடாது என்றால் நாங்கள் கொடுக்கும் தொகுதிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும் என்று மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் அறிவாலயம் கறார் காட்டி வருவதாக தெரிகிறது.

கேரளாவை வைத்து பேசிய தமிழக அரசு

இதற்கு திமுக தரப்பில் சொல்லப்பட்ட காரணம்தான் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிகளுக்கு கேரளாவில் ஒரு இடம் தான் கிடைத்தது. தற்போது இண்டியா கூட்டணி உருவாகிவிட்டதால் கேரளாவில் உள்ள 20 எம்பி தொகுதிகளில் உங்களுக்கு பத்து எம்பிக்களும், காங்கிரசுக்கு10 எம்பிக்களும் கண்டிப்பாக கிடைத்து விடுவார்கள்.

அதேபோல் மேற்கு வங்காளத்தில் உங்கள் இரு கட்சிகளுக்கும் நான்கு தொகுதிகளை மம்தா ஒதுக்கி தந்து விடுவார். பிறகு எதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள்? அதனால் தமிழகத்தில் உங்களுக்கு ஒரு தொகுதி என்பதே நிறைவானதாக இருக்கும்” என்று திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை. என்ற போதிலும் நாங்கள் திமுகவிடம் 2019 தேர்தல் போலவே நான்கு தொகுதிகளை எங்களுக்கு தரவேண்டும். அதில் எந்த மாறுதலும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

தலையை ஆட்டும் காங்கிரஸ்?

காங்கிரஸுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 6 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் காங்கிரசுக்கு திமுகவை விட்டால் வேறு கதியே கிடையாது என்பதால் திமுக தரும் எம்பி சீட்டுகளை காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவார். ஏனென்றால் திமுகவை விட சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற ஆர்வம் அவரிடம் தான் இன்று மிகுதியாக காணப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்தால் அவருக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் ஒன்றை தரவேண்டும் என்று திமுக தலைமை கண்டிஷன் போட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதேபோல திருமாவளவனின் விசிகவிற்கும், முஸ்லிம் லீக்கிற்கும் தலா ஒரு தொகுதியை மட்டும் தர முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதை இந்த இரண்டு கட்சிகளும் அப்படியே ஏற்றுக் கொண்டு விடும் வாய்ப்புகளே அதிகம்.

பரிதாபத்தில் வைகோ கட்சி

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பாடுதான் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. ஏற்கனவே அவருடைய கட்சி திமுகவுடன் ஐக்கியமாகிவிட்டதால் அவரை யாரும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இதனால் அவருடைய கட்சிக்கு ஒரு எம்பி சீட் கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

“கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவை யாருக்குமே தெரியாது என்ற கூற்றை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி சனாதன ஒழிப்பு விவகாரத்தை நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுக்க வைத்து பொய்யாக்கி விட்டார். தற்போது இந்திய மக்கள் அனைவரும் நன்கு அறிந்து விட்ட ஒரு கட்சியாக
திமுக உருவெடுத்து விட்டதும் உண்மைதான். இந்த விளம்பரம் மூலம் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் உதயநிதி உறுதியாக இருக்கிறார்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பிரதமராகிறாரா உதயநிதி?

“தேசிய அளவில் பிரதமர் மோடியையும், பாஜகவையும் இவ்வளவு துணிச்சலுடன் எதிர்த்து மாநிலக் கட்சிகளை சேர்ந்த எந்தவொரு இளம் தலைவரும் இதுவரை பேசியது இல்லை. அவருடைய சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவிட்டு உள்ள நிலையில் அதை திமுகவுக்கு சாதகமாக மாற்ற உதயநிதி திட்டமிடுவது நன்றாகவே தெரிகிறது. அதனால்தான் 30 தொகுதிகளுக்கும் குறையாமல் திமுக போட்டியிட வேண்டுமென அவர் நினைக்கிறார். ஒருவேளை இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றி விட்டால் பிரதமர் பதவியை ராகுல் விரும்பாத நிலையில் கூட்டணியில் உள்ள 28 கட்சிகளும் உதயநிதியை பிரதமராக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால் வட மாநிலங்களில் சனாதன ஒழிப்பு என்பது இந்துக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதால் எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது என்கிறார்கள். அதனால் உதயநிதி பிரதமர் ஆவார் என்பதெல்லாம் மித மிஞ்சிய கற்பனை. தவிர இந்தி தெரியாமல் வடமாநிலங்களில் நடக்கும் இண்டியா கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு தன்னால் பேச முடியாது என்பதும் உதயநிதிக்கு நன்றாகவே தெரியும்.

உதயநிதி கணக்கு கைக்கூடுமா?

என்ற போதிலும் திமுக நாடாளுமன்றத்தில் வலிமையான மூன்றாவது பெரிய கட்சியாக திகழ வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் முக்கிய இலாக்காக்களை கேட்டுப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் திமுக 30 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடவேண்டும் என்று உதயநிதி நினைக்கிறார்.

கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரை அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது திமுக தலைமைக்கு நன்றாகவே தெரியும். 2019 தேர்தலில் வழங்கியது போல
25 கோடி ரூபாயை ஒதுக்கி விட்டால் போதும். பிறகு எம்பி சீட் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். ஒருவேளை காங்கிரஸ் அழுத்தம் கொடுத்தால் திமுக மேலும் இரண்டு தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்கும் வாய்ப்பு உள்ளது. அவ்வளவுதான்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தொகுதி பங்கீடு விஷயத்தில் உதயநிதி போடும் கணக்கு கை கொடுக்குமா?… என்பது போக போகத்தான் தெரியும்!

  • Manickam Tagore விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!
  • Views: - 349

    0

    0