‘என் பெயரும் கருணாநிதி தான்’.. முதியவரை வெளியே தள்ளிய அமைச்சர் பிடிஆர்?; அண்ணாமலை கடும் கண்டனம்
Author: Babu Lakshmanan13 January 2024, 4:38 pm
சென்னை ; அயலக தமிழர் தின நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட முதியவரை அமைச்சர் வெளியேற்றிய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, ஆண்டுதோறும் ஜனவரி 12 ஆம் நாள் அயலக தமிழர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் அயலக தமிழர் நாள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளுடன் நடைபெற்ற விவாத நிலையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவர், சிபிஎஸ்இ பாடதிட்டத்தை தமிழ்நாடு அரசு ஏன் தடுக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசுக்கு என தனி கல்விக்கொள்கை இருப்பதாக சுட்டிக்காட்டினார். அவர், “தமிழகத்தில் உள்ள மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் தழைத்தோங்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்த கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அமைச்சர் பதில் அளித்துக்கொண்டிருக்கும் போதே கேள்வி எழுப்பிய நபரை வெளியேற்றும் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அந்த நபர், நானும் திராவிடர் தான், தம்மை வெளியேற்றுவது ஜனநாயக முறையில்லை என்றும், தமது பெயரும் கருணாநிதிதான் என்றும் கூறினார். இருப்பினும், அந்த நபரை கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த செயலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 மொழி கொள்கையை அமல்படுத்துவதை தமிழக அரசு ஏன் தடுக்கிறது என்று அந்த முதியவர் கேள்வி கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும், மாறாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை மூன்றாம் மொழி கற்கத் தடை செய்த தமிழக அரசின் தவறான கொள்கைகளை அம்பலப்படுத்தியதற்காக, திமுக அமைச்சரால் அவர் வெளியே தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.