தமிழக சட்டத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவருமான ரகுபதி அதிமுக குறித்து அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையை உருவாக்குவது வாடிக்கையாகி விட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர், “முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் புதுக்கோட்டைக்கு வரும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயை உடைத்துத் தனிப்பட்ட முறையில் அவருடைய வயல்களுக்கும், கல்லூரிக்கும் கொண்டு செல்கிறார். அதனால்தான் புதுக்கோட்டை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்போதே நீங்கள் போனால் அவர் மடைமாற்றி காவிரி நீரை தனது வயல்களுக்கு பயன்படுத்துவதை பார்க்கலாம்” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.
இதை உடனடியாக மறுத்த சி. விஜயபாஸ்கர் “நான் அரசியலில் தடம் மாறாத ஆள் மட்டுமல்ல. அரசியலில் தடுமாறாத ஆள். ஆனால் அமைச்சர் ரகுபதியோ அரசியலில் தடம் மாறியவர். ஆகையால் தற்போது அவர் தடுமாறுகிறார். நேற்று அதிமுகவில் இருந்தார். இன்று திமுகவில் உள்ள அவர் நாளை எங்கு இருப்பாரோ?… தன்னுடைய இருப்பை கட்சி தலைமையிடம் நிரூபிப்பதற்காக ஒரு சில அபாண்டமான குற்றச்சாட்டுகளை என் மீது வைத்துள்ளார். அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை நேரடியாக அழைத்துக் கொண்டு போய் இதை நிரூபிக்கட்டும். அப்படி செய்யத் தவறினால் 24 மணி நேரத்தில் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு அவர் தயாரா?” என்று பகிரங்க சவாலும் விட்டார். ஆனால் அதன் பிறகு அமைச்சர் ரகுபதி இந்த விவகாரத்தில் கப்சிப் ஆகிவிட்டார்.
அடுத்ததாக மிக அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் அதிமுகவை சீண்டினார்.
“எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் கொண்டாடுவது பற்றி கேட்கிறீர்கள். எதிர்க்கட்சி தலைவர் எதிர்க் கட்சி தலைவராக பணியாற்ற வேண்டும். அப்போதுதான் சரியான எதிர்க்கட்சியாக அது இருக்கும்.
அதனை விட்டு வேறுவிதமான விமர்சனங்களை வைக்கும்போது அவரது பதவிக்கே ஒரு ஆபத்து ஏற்பட்டு விடும். ஆனால் அவரது பிறந்தநாளில் அவரது பதவிக்கு ஆபத்து என்று சொல்வது அழகல்ல. அவா் பல்லாண்டு வாழ திமுக வாழ்த்தும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையிலா? என்று அங்கு மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனை நாங்கள் செய்யமாட்டோம். ஆனால் பாஜக செய்யும்” என்று ஒரு கருத்தை தெரிவித்தார்.
அமைச்சர் ரகுபதி இப்படி கூறியதன் பின்னணியில் சில வாரங்களுக்கு முன்பு தேனி தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதேபோல் பேசியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
“ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அக்கட்சி தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் அணி திரண்டு விடுவார்கள்” என்று அவர் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவேன் என்று கடந்த இரண்டு வருடங்களாக கூறி வரும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுக எங்கள் வசம் வரும் என்று
கூறியதும் நினைவுகூரத்தக்கது.
அமைச்சர் ரகுபதியின் கருத்தால் கொந்தளித்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில்
“அவரே அதிமுக தானே?” என்று எதிர் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்தார்.
அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய இன்னொரு கேள்விக்கு அவர் கூறும்போது “ஒரு திருவிழா வரும்போது சாமியும் தேரில் சுற்றி வருவாங்க.. பஞ்சு மிட்டாய் விற்கிறவர்களும் சுற்றி வருவார்கள். அதேபோல் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என எல்லா ஆட்டமும் அங்கே இருக்கும். இந்த ஆட்டம் எல்லாம் அங்கே பொழுதுபோக்குதான். அங்கே வரும் மக்களை தேரில் இருக்கிற தெய்வம் தான் வாழவைக்கும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு தெய்வங்களான எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் மறுவடிவமான இன்று பிறந்தநாள் காணும் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தியவர். எதிர்க் கட்சி தலைவராகவும் இருக்கிறார். ஆகவே பொழுது போக்கிற்கு வந்தவர்களை பற்றி நாம் பேசி நம்ம பொழுதை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்று ஒரு போடு போட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்து பற்றி முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அமைச்சர் கூறி இருப்பது அவருடைய கற்பனை. அன்றும் இன்றும் என்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதிமுகவின் மகத்தான தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு அதிமுக பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். ஆகவே அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
“நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கமாக திரள்வார்கள் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதன் அடிப்படையில் 2026 தமிழக தேர்தலுக்கான தேர்தல் வியூகத்தை திமுக இப்போதே தொடங்கி விட்டதை புரிந்துகொள்ள முடிகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 30 முதல் 32 தொகுதிகள் வரை இரண்டாம் இடம் பிடிக்கும் என்று இதுவரை வெளியான எல்லா கருத்துக்கணிப்புகளிலுமே தெரிய வந்துள்ளது. இதில் அதிமுக 6 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
இதுதான் திமுகவுக்கு 2026 தேர்தலில் மிகப்பெரிய அளவில் குடைச்சலை கொடுக்கக் கூடிய விவகாரமாக இருக்கும். ஏனென்றால் குறைந்த பட்சம் 30 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு இரண்டாம் இடம் என்பது சட்டப்பேரவை தேர்தலில் 180 தொகுதிகளுக்கு சமமான ஒன்று. இந்த இடங்களில் எல்லாம் மற்ற கட்சிகளை விட அதிமுக கூட்டணியுடன்தான் திமுக மல்லு கட்ட வேண்டிய நெருக்கடி உருவாகும். தவிர எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 2026 தேர்தலை நிச்சயம் வலுவாக சந்திக்கும்.
அதனால் திமுகவுக்கு சரி சமமான போட்டியாளராக திகழும் அதிமுகவை சிதற வைக்க வேண்டும் என்று அறிவாலயம் திட்டமிட்டு செயல்பட தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. அதைத்தான் அமைச்சர் ரகுபதியும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று மறைமுகமாக கூறுகிறார்.
ஏனென்றால் அதிமுகவை பலவீனமாக்கினால் மட்டுமே 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று திமுக நம்புகிறது. அதேநேரம், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதால் தற்போது திமுக அணியில் உள்ள விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவை அதிக எம்எல்ஏ சீட்டுகளை கேட்டு அதை திமுக ஒதுக்காத பட்சத்தில் அந்தக் கட்சிகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகளே அதிகம். அந்த அச்சத்தின் காரணமாகவே ஏதோ அதிமுகவுக்கு அட்வைஸ் செய்வது போல அமைச்சர் ரகுபதி நாடகம் ஆடுகிறார் என்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது.
மேலும் படிக்க: எல்லாமே 18… பெங்களூரூவுக்கு ராசியா…? சென்னையின் பிளே ஆஃப் கணக்கு இதோ..!!!!!
அவருடைய இந்த நயவஞ்சக பேச்சுக்கு அண்ணாமலை, டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா நால்வரும் துணை போவது போல நடந்துகொள்வதுதான் கவலை அளிப்பதாக உள்ளது.
அண்ணாமலை அதிரடியாக அரசியல் நடத்துகிறார், அதனால் தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரம் ஒவ்வொரு தேர்தலின் போதும் படிப்படியாக வளர்ச்சி காண்பதுதான் தமிழக பாஜகவுக்கு வலுவான, நிலையான அடித்தளமாக இருக்கும். ஒரே தேர்தலில் 30 சதவீத வாக்குகளை அள்ளி விடலாம் என்று மனக்கோட்டை கட்டினால் அது தப்பு கணக்காகவே முடியும். அதேநேரம் தங்களுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ஒரே காரணத்திற்காக அதிமுகவை சுக்குநூறாக உடைத்து விடலாம் என்று நினைப்பதும் தவறு.
அதுவும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் டிடிவி தினகரனிடம் அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா?…என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு “மத்தியில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் அது நோட்டாவோடு போட்டிபோட்டுக் கொண்டுள்ள கட்சி. அதனுடன் கூட்டணி வைப்போமா? நாங்களே கிணற்றில் போய் விழுந்து தற்கொலை செய்துகொள்ள விரும்புவோமா?” என்று எதிர் கேள்வி எழுப்பியவரின் கைகளிலேயே அதிமுக வந்து சேரும் என்று அண்ணாமலை கூறுவதுதான் வேடிக்கை.
திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்பதே எதார்த்தமான உண்மை. ஏனென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோருடைய ஒட்டு மொத்த 30 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அதிக பலன் பெற்றவர்கள் கோடிக்கணக்கான ஏழை எளிய நடுத்தர மக்கள்தான்.
அவர்களின் மனதில் இருந்து அதிமுகவை எளிதில் அகற்றி விட முடியாது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஜூன் நான்காம் தேதி வெளியாகும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை தமிழக அரசியல் கட்சிகளைப் போலவே நாட்டு மக்களும் அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வமாய் உள்ளனர். அதுவரை பொறுத்திருப்போம்!
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.