அதிமுக பெண் தலைவரை நிற்க வைத்து விட்டு… மேடையில் பெண் உரிமை குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி ; மேடையிலேயே வெடித்த கோஷ்டி மோதல்!!
Author: Babu Lakshmanan20 October 2023, 5:15 pm
அரசு நிகழ்ச்சியில் அதிமுக பெண் தலைவரை நிற்க வைத்து விட்டு, மேடையில் பெண் உரிமை குறித்து அமைச்சர் ரகுபதி பேசியது அங்கிருந்தவர்களை முனுமுனுக்கச் செய்தது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை, நியாய விலைக் கடை உள்ளிட்டவையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதன் ஒருபகுதியாக, வடுகச்சேரி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அதிமுகவைச் சேர்ந்த வடுகச்சேரி பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அமர இருக்கை வழங்கப்படவில்லை. நிகழ்ச்சி முடியும் வரை அவர் நின்று கொண்டிருந்தார். மாறாக, திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவர் அனுசியா, திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சி முடியும் வரை அதிமுக பெண் தலைவரை நிற்க வைத்து விட்டு, மைச்சர் ரகுபதி பெண்கள் தலைநிமிர்ந்தால்தான் நாடு தலை நிமிரும், பெண்களுக்கு சமுதாயத்தில் தனியான இடத்தை, சமத்துவமான இடத்தை தரவேண்டும் என்று பேசியது அங்கிருந்தவர்களை முனுமுனுக்கச் செய்தது.
முன்னதாக, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது, அதனை பொருட்படுத்தாமல், திமுக ஒன்றிய செயலாளர் வடவூர் ராஜேந்திரன், அமைச்சர் ரகுபதிக்கு சால்வை அணிவிப்பதிலே தீவிரமாக இருந்தார். இது அங்கிருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது.
மேலும், சால்வை அணிவிப்பதில் மேடையில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. தாட்கோ தலைவர் மதிவாணனுக்கு கடைசியாக சால்வை போட்டதால், கோபமடைந்த அவர், சால்வையை வாங்காமல் தள்ளி விட்டாதல் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் போதே, தாட்கோ தலைவர் மதிவாணனுக்கும், ஒன்றிய செயலாளர் வடவூர் ராஜேந்திரனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் நிகழ்ச்சியில் சலசலப்பு உண்டானது.