திமுகவுக்கு ஓட்டு போடலனா அவ்வளவுதான்… ஒன்னுமே கிடைக்காது… மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள்!!!

Author: Babu Lakshmanan
17 February 2022, 6:07 pm

தற்போதுள்ள திமுக தலைவர்களில் சீனியர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பெருமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு உண்டு.

12 தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டு அதில் 10 முறை வெற்றியும் கண்டவர் என்பதால் கட்சியில் தனக்குள்ள அதிகாரத்தை அவ்வப்போது அவர் வெளிப்படுத்துவதும் வழக்கம்.

கதிர் ஆனந்த் கன்ட்ரோல்

2019 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியை தனது மகன் கதிர் ஆனந்துக்காக கட்சித் தலைமையிடம் போராடி பெற்றதோடு, அதில் 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் வைத்தார். வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாங்கிய அதிகப்படியான ஓட்டுகள்தான், கதிர் ஆனந்தை வெற்றி காணச் செய்தது.

durai murugan - kathir anand - updatenews360

அப்போது முதலே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக நிர்வாகத்தை கதிர் ஆனந்த் எம்பி, தன் பிடிக்குள் கொண்டு வரத் தொடங்கினார். 2021 தேர்தலில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வெற்றிபெற்று அமைச்சர் ஆகிவிட தந்தைக்கு இணையான செல்வாக்கு அவருக்கும் பெருகத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் கதிர் ஆனந்த் எம்பி, மாவட்ட பொறுப்பாளருடன் நேரடியாக மோதவும் செய்தார்.

துரைமுருகன் மிரட்டல்

அந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 36 வார்டுகளைக் கொண்ட வாணியம்பாடி நகராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைச்சர் துரைமுருகன் வாக்காளர்களை மிரட்டும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து இருப்பது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இரு தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில், அவர் பேசும்போது, “நான் இந்த வாணியம்பாடி மண்ணின் மைந்தன் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் மண்ணின் மைந்தன் என்று என்னை சொல்வதை விட கதிர் ஆனந்தைத்தான் சொல்ல வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் கதிர் ஆனந்தை காப்பாற்றியது வாணியம்பாடி தான். அவரை ஜெயிக்க வைத்தது வாணியம்பாடி மக்கள்தான். அவர்தான் வாணியம்பாடியின் மண்ணின் மைந்தர்.

அரசின் திட்டங்கள் உங்களை வந்து சேர வேண்டுமானால் கிணற்றிலிருந்து தண்ணீர் வயலுக்கு போக வேண்டுமானால், அதற்கு பம்ப் வேண்டும். வாய்க்கால் வேண்டும்.

அப்படித்தான் அரசாங்கம் எவ்வளவு செலவு செய்தாலும் அதை முறையாக உங்களுக்கு கொண்டுவர முனிசிபாலிட்டிகள், கவுன்சிலர்கள் இருக்கவேண்டும். அதற்காக நல்ல கவுன்சிலர்களை நீங்கள் உருவாக்கினால் இந்த வாணியம்பாடி சிறக்கும்.

ஏதோ தவறான எண்ணத்தில் சிலரை தேர்ந்தெடுப்பீர்களேயானால், ஐந்தாண்டு காலத்துக்கு இந்த வாணியம்பாடி நகர் புறக்கணிக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்” என வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பல்வேறு சமுதாயப் பிரமுகர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டமும் நடந்திருக்கிறது. அங்கேயும் இப்படித்தான் மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசி துரைமுருகன் அதிர வைத்திருக்கிறார், என்கிறார்கள்.

“திருப்பத்தூர் மாவட்ட திமுகவுக்குள் துரைமுருகன் வரம்பு மீறி உள்ளே நுழைந்தது மட்டுமின்றி தங்கள் கட்சிக்கு காலங்காலமாக வாக்களித்து வருவர்களை எச்சரிப்பது அவருக்கு தேவையற்ற வேலை” என்று அந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் கொதித்து எழுந்துள்ளனர்.

“வாணியம்பாடியில் தனக்கும், தன் மகனின் பேச்சுக்கும் கட்டுப்பட்டு நடக்கும் ஒருவர்தான் மேயராக வேண்டும் என்பதற்காகவே துரைமுருகன் இப்படி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படுவதாகும்” என்றும் அவர்கள் மனம் குமுறுகின்றனர்.

கே.என். நேருவின் வார்னிங்

இதேபோல் திமுகவின் இன்னொரு மூத்த அமைச்சரான கே என் நேருவும் தனது மாவட்டத்தில் ஒரு பரபரப்பு காட்டியிருக்கிறார்.

திருவெறும்பூர் பிரசாரத்தில் பேசிய அவர், “எனது துறையின் கீழ் வரக்கூடிய சாலை, தெரு விளக்கு, கழிப்பறை , கால்வாய், பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற திமுகவிற்கே வாக்களிக்க வேண்டும். போட்டியிடும் இரண்டு திமுக வேட்பாளர்களும் தோல்வி அடைந்தால் அங்குள்ள தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்” என்று மிரட்டல் விடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு உள்ளது.

Minister KN Nehru - Updatenews360

எனினும் திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யுங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் அமைச்சர் கே.என்.நேரு இப்படி பேசியதாக உள்ளூர் திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதேநேரம் அமைச்சர்களாக உள்ள திமுக தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது
மாவட்டங்களில் பலத்தை நிரூபிக்க பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் துரைமுருகனும் கே.என்.நேருவும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறி இருப்பதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், “திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் புறக்கணிக்கப்படுவீர்கள்” என சீனியர் அமைச்சர்கள் இருவர் வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசி வருவதாக மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

அதிமுக புகார்

இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் பாபு முருகவேல் எச்சரித்துள்ளார்.

அவர் கூறும்போது, “இது, முற்றிலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல். விதிமுறைகளை மீறி வாக்காளர்களை மிரட்டும் வகையில் பிரசாரம் செய்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு இருவரும் தொடர்ந்து பிரசாரம் செய்ய தடை விதிக்கவேண்டும் எனவும் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரித்தபோது திமுகவினர் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை வழங்கி வருவதை பார்த்து புகாரளித்துள்ளார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் புகார்களின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம். அதன்காரணமாக தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.

அரசியலுக்கு நல்லதல்ல

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “வேலூர் மாவட்டம் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்றாகப் பிரிக்கப்பட்டது முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் கோலோச்சி வரும் அமைச்சர் துரைமுருகனின் அதிகார எல்லை திமுக நிர்வாகிகளிடம் சுருங்கிப் போய்விட்டது.

ஆனால் துரைமுருகனோ திமுகவின் பொதுச் செயலாளராக இருப்பதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முன்புபோல் தனது கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக நினைக்கிறார். அதை வைத்து தனது மகன் கதிர் ஆனந்தின் செல்வாக்கை அதிகரிக்க இதுபோன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்ளவும் செய்கிறார்.

வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருவதால், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜ் எடுக்கும் நடவடிக்கைகளில் கதிர் ஆனந்த் தலையிடுகிறார், தந்தையின் மூலம் அதிகப்படியான உரிமைகளை எடுத்துக் கொள்கிறார் என்று திமுக நிர்வாகிகளே கூறுகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜூக்கு எதிராக காய்களை நகர்த்தி திமுகவினரின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானவர். ஆலங்காயம் ஒன்றியத்தில் கதிர் ஆனந்தை எதிர்த்து திமுகவினர் போராட்டம் நடத்திய சம்பவங்களும் அப்போது அரங்கேறின.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திமுகவின் மூத்த அமைச்சர் கே என் நேரு தனக்குள்ள செல்வாக்கை நிரூபித்து, தான் யாருக்கும் சளைத்தவரல்ல என்று காட்ட விரும்புகிறார். ஆனாலும் அவர் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டிப்பேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. ஏனென்றால் ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எச்சரிக்கை விடுப்பது நடுநிலை வாக்காளர்களிடையே அக்கட்சியின் மீது கடும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தும். அது எதிர்கால அரசியலுக்கும் நல்லதல்ல.

ஏனென்றால் கட்சி பாகுபாடின்றி தங்களுக்கு பிடித்தமான வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் ஓட்டுப் போடுவது ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் மட்டுமே. இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டதே என்ற பயம் அவர்களுக்கு ஏற்படும் என்பதும் உண்மை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1700

    0

    0