செந்தில்பாலாஜியை அடிக்கடி சந்திக்கும் திமுக அமைச்சர்கள்.. எல்லாத்துக்கும் அதுதான் காரணம் : இபிஎஸ் விமர்சனம்!
Author: Babu Lakshmanan30 June 2023, 6:56 pm
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்துவது தான் திமுக ஆட்சியின் சாதனை. இதை தவிர வேறு எதையும் செய்யவில்லை, திமுக ஆட்சியில் கல்லூரிகளுக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது.
இந்த ஆட்சி லஞ்சத்தின் உச்ச நிலைக்கு சென்றுவிட்டது. இன்றைக்கு எந்த துறையிலும் லஞ்சம் இல்லாமல் மக்கள் ஒன்றும் செய்யமுடியாது. அந்தவகையில், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தான், இந்த ஆட்சியில் இருந்து வருகிறது என விமர்சித்தார். இதன்பின் பேசிய இபிஎஸ், அதிக காலம் அமைச்சராக இருந்தவர், மூத்த தலைவர், திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இத்தனை அமைச்சர்கள் செல்லவில்லை, ஒரு சிலர் மட்டுமே சென்று பார்த்தனர்.
ஆனால், இன்றைக்கு ஒரு வருடத்தில் 5 கட்சிக்கு மாறியவர் செந்தில் பாலாஜியை பார்க்க ஏன் இத்தனை அமைச்சர்கள் சென்றார்கள், ஊழல் தான். ஊழல் செய்து அதிகமான நிதியை கொடுத்தவர் செந்தில் பாலாஜி. மதுபானம் மூலம் ஒரு பாட்டீலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து, ஒரு நாளைக்கு 10 கோடி என்று விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்து வருகிறார்கள் என்று கூறிய இபிஎஸ், குடும்ப நலனுக்கே திமுக அரசு முன்னுரிமை தருகிறது எனவும் விமர்சித்தார்.