திமுக எம்எல்ஏ வீட்டில் மொய்விருந்து… ரூ.10 கோடி வசூல்…. பேசு பொருளாக மாறிய காதணி விழா..!!
Author: Babu Lakshmanan24 August 2022, 2:38 pm
தஞ்சை : பேராவூரணி திமுக எம்எல்ஏ வீட்டில் நடந்த மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூலானது பேசு பொருளாக மாறியுள்ளது.
தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மொய் விருந்து தடப்புடலாக நுாறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. தங்கள் வசதிக்கு ஏற்ப உணவுகளை பரிமாறி மொய் விருந்து வைத்த காலம் மாறிப்போய், தற்போது கிடா வெட்டி கறிக்குழம்பு சமைத்து அசைவ விருந்து வைப்பது என்பதாகிவிட்டது.
மொய் விருந்து நடத்தியவர்கள் வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். பணத் தேவைக்காக யாரிடமும் வட்டிக்கு கடனாக பணம் வாங்காமல் இருக்கவும், கஷ்டத்தில் இருக்கும் உறவுகளுக்கு கை கொடுத்து உதவவும் தொடங்கப்பட்டது.
ஒரு நபர் மொய் பிடித்தால் அடுத்த ஐந்து ஆண்டுக்கு பிறகு தான் அடுத்த மொய் பிடிக்க வேண்டும். இதுபோன்ற விருந்துகளின் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவும் வசதிப்படைத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளவதாக ஒரு சர்ச்சையும் உண்டு.
இந்த நிலையில், பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார், பேரன் காதனி விழா, மொய் விருந்து விழாவில், 100 கிடா, 1,300 கிலோ கறி மற்றும் சைவம் பிரியர்களுக்கு தனி உணவு என பிராமண்ட விருந்து படைக்கப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பு, பத்துக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. 40 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு மொய் பிடிக்கப்பட்டது. இந்த மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூலானதாக சொல்லப்படுகிறது. எம்எல்ஏ வீட்டில் இவ்வளவு தொகை மொய் விருந்தாக வசூலானது விவாதப் பொருளாக மாறியுள்ளது.