பழிவாங்கும் செயலில் ஈடுபட்டால் திமுகவின் போர்க்குணத்தை பார்க்க நேரிடும் ; மத்திய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
Author: Babu Lakshmanan8 October 2022, 9:37 am
தமிழகத்தின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்பட்டால் திமுகவின் போர்க்குணத்தை பார்ப்பீர்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை தொகுத்து ‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ எனும் நூலை திமுக எம்எல்ஏ சி.வி. எம்.பி. எழிலரசன் உருவாக்கியுள்ளார். இந்த நூலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் இந்த நூலை வெளியிட, அமைச்சர் அன்பில் மகேஷ் அதனை பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது ;-
பெரியார், அண்ணா, கருணாநிதி மாடல்களின் கலவையாக தற்போது தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த பாஜகவினரே, கருணாநிதியை விடவும் மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறி ஒப்புதல் கொடுத்துவிட்டார்கள். இது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. அடுத்த முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கப்போகிறது. அதை யாராலும் தடுக்க முடியாது.
மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் நல்லாட்சியையும், நல்ல திட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். அதற்கு அத்தனை பேரும் உதவ வேண்டும். ‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்..’ என்ற இந்த நூலில் கலைஞரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்வி, பதில்கள் இடம்பெற்று இருக்கின்றன.
அதில் முக்கியமான கேள்வியாக ‘திமுகவின் அடையாளமான போர்க்குண எதிர் அரசியலை இப்போது பார்க்க முடியவில்லையே? இது தலைமுறை மாற்றத்தின் விளைவா அல்லது காலமுறை ஓட்டத்தின் சிதைவா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கருணாநிதி, ‘திமுகவின் போர்க்குணம் குறைந்துவிடவில்லை. அது என்றைக்கும் குறையாது. இன்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பாதகமான நடவடிக்கை எடுக்கப்பட்டால், திமுகவின் போர்க்குணத்தை பார்க்கவே செய்வீர்கள்’ என்று பதில் அளித்து இருக்கிறார்.
இந்த நேரத்தில் இந்த கேள்வி, பதில் மிக முக்கியமானதாக பார்க்க முடிகிறது. மத்திய அரசால் பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலோ, தமிழகத்தின் மாநில நிதி, கிடைக்கக்கூடிய உரிமைகள் பறிக்கப்பட்டாலோ திமுகவின் போர்க்குணம் கண்டிப்பாக வெளிவரும், என்று கூறினார்.