ஒன்னும் பு••• முடியாது.. அண்ணாமலை எல்லாம் ஜுஜிபி தான் ; திமுக எம்பி ஆ.ராசா ஆவேசப் பேச்சு..!!
Author: Babu Lakshmanan15 May 2023, 7:17 pm
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட கையெழுத்து இல்லையென்றால், அண்ணாமலை ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார் என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே மாவூர் கடைத்தெருவில் திருவாரூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திராவிட மாடல அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக துணை செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா எம்பி கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை குறித்து விளக்கிப் பேசினார்.
அப்போது அவர் பேசும்போது ;- கொரோனா காலகட்டத்தில் எந்த முதலமைச்சரும், பிரதமரும், வெளியில் வராத நிலையில் தமிழக முதலமைச்சர் மட்டுமே கொரோனா கவச உடையை அணிந்து கொண்டு நோயாளிகளை பார்த்து நான் இருக்கிறேன் என்று தைரியமூட்டிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மட்டும் தான்.
6 லட்சம் கோடி கடனை எடப்பாடி பழனிச்சாமி அரசு வைத்து விட்டு போனது டிஆர் பாலுவுக்கு தெரியவில்லை. என்ன நிலைமை என்று கூட தெரியாமல் அதை செய்வோம், இதை செய்வோம், 1000 ரூபாய் கொடுப்போம், 2000 ரூபாய் கொடுப்போம் என்று அள்ளிவிட்டார். ஆனால் ஊதாரித்தனமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.
பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நான்காயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்ன ஒரே முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்தோமா..?இல்லையா..?என்று மக்களை பார்த்து கேட்டார். உடனடியாக அருகில் இருந்த திமுக தொண்டர் ஒருவர் எங்கே கொடுத்தீர்கள் என எதிர் கேள்வி எழுப்பியதால் ஆ ராசா சற்று சங்கடத்துக்குள்ளானார்.
தொடர்ந்து பேசிய அவர், கலைஞருக்கு 80 கோடி ரூபாய் பேனா ஏன் வைக்க வேண்டும் என கேட்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது..? பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்த பேனா கலைஞர் பேனா, கை ரிக்ஷா இழுத்தவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது இந்த பேனா தான். தமிழ்நாட்டின் அனைத்து குக் கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு சேர்த்தது இந்த பேனா தான். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கொங்குவேளாளர் கவுண்டர் இனத்தை கலைஞர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து போட்ட கையெழுத்தினால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தார். இல்லையென்றால் அவர் எங்கேயாவது வெள்ளமண்டியில் உட்கார்ந்து இருப்பார், வானதி சீனிவாசன் தென்னந்தோப்பில் மட்டை பொறுக்கி கொண்டிருப்பார், அண்ணாமலை ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார்.
திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாததன் விளைவு கலைஞரின் பேனா சிலை சர்ச்சை, வாரிசு அரசியல் என்று ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசு கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி திமுகவை விரட்ட பார்க்கிறார்கள். திமுக பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என தமிழக முதல்வர் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
அதானி விவகாரத்தில் மோடி அமைதியாக இருப்பதால் அதானி பிராடு என்றால் பிரதமர் மோடியும் பிராடு. இதை கூறியதற்கு கர்நாடகத்தில் இரண்டு பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. முடிந்தால் என்னையும் சிறையில் இட்டுப் பாருங்கள் பாருங்கள் என்று சவால் விட்டார். கலைஞரின் பிள்ளைகளிடம் உங்களால் எதுவும் செய்ய முடியாது. அதற்கான தொடக்கம் இன்று கர்நாடகத்தில் வெற்றி முகத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மூலமாக, எடப்பாடி பழனிசாமி மூலமாக அண்ணாமலை உள்ளே வர நினைத்தால் நாங்கள் அந்த அண்ணாமலைக்கு அரோகரா போட்டவர்கள். அந்த அண்ணாமலைக்கு அரோகரா போட்டவர் பெரியார். இந்த அண்ணாமலை தான் ஜுஜிபி, என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0
1