அமைச்சர் பதவியா? துணை முதலமைச்சர் பதவியா? உதயநிதிக்கு ஆதரவாக அமைச்சர்களுடன் போட்டிக்கு வந்த திமுக எம்பி!!
Author: Udayachandran RadhaKrishnan3 December 2022, 9:00 pm
தமிழக அமைச்சரவை பொங்கலுக்கு பிறகு மாற்றியமைக்கப்படும் என ஆருடங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்ற குரல்கள் திமுகவில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
அண்மையில் அவரது 45வது பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டால் அவரிடம் உள்ள திறமை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பயன் தரும் வகையில் இருக்கும் எனக் கூறியிருந்தார்.
மேலும், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறார். இந்நிலையில் சீனியர் அமைச்சரான முத்துசாமியும் அன்பில் மகேஷ் கோரிக்கையை வழிமொழிந்துள்ளார்.
இதன் மூலம் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் நாளுக்கு நாள் திமுகவில் வலுவடைந்து வருவது தெரிய வருகிறது. உதயநிதிக்கு கட்சிக்காரர்கள் ஆதரவு மட்டுமின்றி மக்களின் அன்பும் ஆதரவும் உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் புதிய வணிக வளாகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். இதேபோல் அமைச்சர் சிவசங்கரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தார்.
அதே போல திமுக எம்பி கௌதம சிகாமணியும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக ஆவார்.. அப்போது தான் தமிழகம் முழுக்க அவரது பணிகளால் பலனடையும். இந்த தமிழக மக்களே அவரது பின்னால் இருக்கும். வரும் அனைத்து தேர்தல்களிலும் உதயநிதி திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியை நிச்சயம் பெற்றுத் தருவார். உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் சார்பாகவும் இந்த கோரிக்கையைத் தமிழக முதல்வரிடம் முன்வைக்கிறோம்” என்றார்.
அமைச்சர்கள் வரிசையாக உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதை வைத்து பார்த்தால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் கட்டாயம் இடம் பிடித்துவிடுவார் போல் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது தான் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.