சாதியை சொல்லி சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி… இந்தியை இப்படித்தான் எதிர்க்கனுமா..? அரசியல் தலைவர்கள் கண்டனம்…!!

Author: Babu Lakshmanan
6 June 2022, 9:53 pm

சென்னை : இந்தி மொழி விமர்சிப்பதற்காக சாதியை சொல்லி பேசிய திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவனின் கருத்துக்கு கண்டனம் குவிந்து வருகின்றன.

தமிழகத்தில் இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஆளும் கட்சியினர் பல்வேறு இடங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அண்மையில் கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‛ஹிந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஹிந்தி படித்தவர்கள்தான் பானிபூரி விற்கிறார்கள். யாரும் யார் மீதும் மொழியை திணிக்க கூடாது’ என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் இந்தி மொழி குறித்து சாதியை ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் திமுக எம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:- இந்தி நம்மை சூத்திரர்களாக மாற்றும். இந்தி எந்த நன்மையும் நமக்கு செய்யாது. நான் சொல்லும் பட்டியலை கேளுங்கள். மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எல்லாம் வளர்ந்த மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தி தாய்மொழியாக இல்லை.

வளராத மாநிலங்கள் என்றால் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான். அப்படியெனில் எதற்காக நான் இந்தி படிக்க வேண்டும். நாடு முன்னேற வேண்டும் என்றால் மாநில மொழிகளை பாதுகாக்க வேண்டும். ஹிந்தி, சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்தி மொழியை கற்றால் தாழ்த்தப்பட்டவர்களாக மாறி விடுவோம் என்பதைப் போல அவர் கூறியிருப்பது அரசியல் கட்சியினரிடையே பெரும் விமர்சனத்தையும், கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது.

அவர் பேசிய இந்த வீடியோவை பதிவிட்ட பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், “அம்பேத்கர் மட்டும் தற்போது உயிரோடு இருந்திருந்தால், இந்தப் பேச்சை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, திமுக எம்பி தயாநிதி மாறன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

  • Case Against MGR எம்ஜிஆர் மீது வழக்கு தொடுத்து ஜெயித்தவர் என் அப்பா… பிரபல நடிகர் ஓபன் டாக்!
  • Views: - 678

    0

    0