ரூ.2.45 கோடியில் கைக்கடிகாரங்கள்… திமுக எம்பி ஜெகத்ரட்சகனை சுற்றி வளைக்கும் ஐ.டி. ; மருமகனுக்கு அடுத்த ஸ்கெட்ச்..!!
Author: Babu Lakshmanan9 October 2023, 1:40 pm
கடந்த 2020ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. அதன் பேரில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாகக் கூறி, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் கணக்கில் வராத ரூ.1.20 கோடி பணம் கட்டு கட்டாக எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் 5வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து 2.45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகயுள்ளது. அதே போல, சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ஜெகத்ரட்சகனின் மருமகன் நாராயணசாமி இளமாறனிடம்வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். ஜெகத்ரட்சகனின் மகள் ஸ்ரீநிஷாவின் கணவரான இவர், எலைட் டிஸ்டில்லரிஸ், பான்யம் சிமெண்ட் உட்பட 12 நிறுவனங்களில் இயக்குனராக உள்ளது குறிப்பிடத்தக்கது.