அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மருத்துவ கல்வி நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், மதுபான ஆலைகள் என 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் 5 நாட்கள் அதிரடி ரெய்ட் நடத்தியது, ஊரறிந்த ரகசியம்.
இச் சோதனையின்போது என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது பற்றிய விவரங்களை
பத்து நாட்கள் கழித்து ஐடி அதிகாரிகள் ஒரு அறிக்கையாகவும் வெளியிட்டனர். அது அரசியல் களத்தையே திடுக்கிட வைப்பதாக இருந்தது.
அந்த செய்திக் குறிப்பின் வாயிலாக ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் 32 கோடி ரூபாய்க்கு கணக்கில் காட்டப்படாத ரொக்கம், 28 கோடி ரூபாய் அளவுக்கு தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும் மருத்துவ கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் 1250 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் அவருடைய நிறுவனங்களில் ஐடி அதிகாரிகள் கைப்பற்றிய சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான ரகசிய ஆவணங்கள் முறைப்படி அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அதன் அடிப்படையில் அத்துறையினர் விரைவில் அவரிடம் தீவிர விசாரணையில் இறங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி போலவே ஜெகத்ரட்சகனும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
இப்படி அடுக்கடுக்கான சோதனைகளால் நிலை குலைந்து போய் இருக்கும் ஜெகத்ரட்சகனுக்கு கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் மூலம் இன்னொரு மிகப் பெரிய தலைவலியும் உருவாகி இருக்கிறது.
இதனால் அவர் கடும் கோபத்திலும், எரிச்சலிலும் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், எவ்வளவுதான் முன் ஜாக்கிரதையாக இருந்தும் கூட அதனால் பெரிய அளவுக்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே, இப்படியா நம்மை ஏமாற்றுவார்கள்?… என்று புலம்பும் நிலையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது, என்கிறார்கள்.
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி காலை 7 மணி அளவில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டில் இறங்கிய அடுத்த அரை மணி நேரத்திலேயே, அவருடைய நிறுவனங்களில் பணிபுரியும் மூத்த நிர்வாகிகள் உஷார் ஆகிவிட்டனர். அடுத்து எமபியின் நகர்வு எப்படி இருக்கும் என்பதையும் அவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்ததுதான் அதற்கு காரணம்.
ஏனென்றால் அதற்கு முன்பாக அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கௌதம சிகாமணி எம்பி இருவரின் வீடுகளில் ED திடீர் சோதனை நடத்தியபோதே தனக்கு வருமானவரித் துறையின் மூலம் எந்த நேரமும் குடைச்சல் வரலாம் என்பதை ஜெகத்ரட்சகன் யூகித்தே வைத்திருந்தார். அப்போதே இது மாதிரியான சோதனைகளின்போது பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது தனக்கு மட்டுமல்லாமல் கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
அதனால் இதுபோன்ற ரெய்டுகள் நடக்கும்போது, தன்னிடம் பணி புரியும் மூத்த நிர்வாகிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை ஜெகத்ரட்சகன் பலமுறை அவர்களுக்கு பாடமும் எடுத்திருக்க வாய்ப்பு உண்டு. இதை உணர்ந்தே அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளில் அவர்களும் இறங்கினர்.
ரெய்டின்போது பணம் எதுவும் வருமானவரித்துறையிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும்
150 கோடி ரொக்கத்தை, ஜெகத்ரட்சகன் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரக்கோணம் தொகுதி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவதால் அங்குள்ள 50க்கும் மேற்பட்ட நெருக்கமான கட்சி நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் ரகசியமாக ஒப்படைத்துவிட்டு இன்னும் இதை ஓரிரு வாரங்கள் கழித்து திரும்ப வாங்கிக் கொள்கிறோம், அதுவரை பணத்தை பத்திரமாக வைத்திருங்கள், யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அந்த மூத்த நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை முடிந்து 5 வாரங்களுக்கு மேலாகியும் பதுக்கி வைக்கும்படி கூறி கட்சி நிர்வாகிகள், உறவினர்களிடம் கொடுத்த 150 கோடியில் 110 கோடி ரூபாய் மட்டுமே மீண்டும் எம்பியின் கைக்கு வந்திருக்கிறது. மீதமுள்ள 40 கோடி என்ன ஆனது? அந்த பணம் யாரிடம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதனால் ஜெகத்ரட்சகனின் மிகுந்த நம்பிக்கைக்குரிய மூத்த நிர்வாகிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி போய் உள்ளனராம்.
இதையடுத்து ஜெகத்ரட்சகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியை ரகசியமாக நாடி, யார் யாரெல்லாம் பணத்தை கொடுக்கவில்லை என்ற பட்டியலையும் அளித்து கைக்கு வராத 40 கோடி ரூபாயை மீட்டுத் தாருங்கள் என்று கோரிக்கையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக 20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக களத்தில் இறங்கி
சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு “எம்பி கொடுத்த பணத்தை திருப்பி தந்து விடுங்கள், அதுதான் உங்களுக்கு நல்லது” என்று வேண்டுகோள் வைப்பது போல் எச்சரிக்கையும் விடுத்துள்ளனராம்.
ஆனால் ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஒரு சில முக்கிய திமுக நிர்வாகிகளும், ஜெகத்ரட்சகனின் நெருங்கிய உறவினர்கள் சிலரும் அதை கண்டு கொள்ளாமல் பதுக்கல் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் துணிச்சலுடன் தொடர்ந்து எம்பிக்கு டிமிக்கி கொடுத்து வருகின்றனர், என்கிறார்கள்.
அவர்கள் யார் என்று தெரிந்தும் கூட ஜெகத்ரட்சகன் எம்பியால் சம்பந்தப்பட்டவர்கள்
மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லையாம் இதற்கு முக்கிய காரணம், பதுக்கிய பணத்தை ஒப்படைக்காதவர்களில் பலர் அமைச்சர்கள் துரைமுருகன்,
காந்தி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுவதுதான்.
அவர்களில் இன்னும் சிலரோ “ஜெகத்ரட்சகன் அண்ணன் நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி, சட்டப்பேரவைத் தேர்தல் என்றாலும் சரி செலவுக்காகவும்,
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவும் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள எங்களுக்கு பணத்தை கை நிறைய வாரி வாரி கொடுப்பது வழக்கம்.
இன்னும் ஆறு மாதங்களில், நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது, அவரும் அரக்கோணத்தில் மீண்டும் போட்டியிடப் போவது உறுதி. அதற்காகத்தான் எங்களுக்கு பணத்தை கொடுத்திருப்பதாக நினைத்து, அதை கிளைக் கழக நிர்வாகிகளுக்கு நாங்கள் பிரித்துக் கொடுத்து விட்டோம். இனி அந்தப் பணத்தை அவர்களிடமிருந்து கேட்டுப் பெறுவது ரொம்ப கடினம். ஏனென்றால் எங்களைப் போலவே, அவர்களும், உள்ளூர் நிர்வாகிகளுக்கு பணத்தைப் பங்கு போட்டு இருப்பார்கள். அதனால் கொடுத்த தொகையை எதிர்பார்க்காதீர்கள்” என்று தடாலடியாக பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்கள் என்று பேசப்படுகிறது.
இதனால் மெல்லவும், முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பவர் போன்ற பரிதாப நிலைக்கு ஜெகத்ரட்சகன் தள்ளப்பட்டிருப்பார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இப்படியும் ஒரு சோதனையா?… வேடிக்கையாகத்தான் இருக்கிறது!
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.