குஷ்பு குறித்து ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி…. யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது… மன்னிப்பு கேட்ட திமுக எம்பி கனிமொழி!!

Author: Babu Lakshmanan
28 October 2022, 8:47 am

பாஜக பிரமுகர் குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு திமுக எம்பி கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார்.

திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வுக்கு நன்றி பாராட்டும் பொதுக்குழு விளக்கக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை ஆர்கே நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

அமைச்சர் மேடையில் அமர்ந்திருந்த போது, திமுக நிர்வாகியான சைதை சாதிக் என்பவர் பாஜக குறித்தும், பாஜக மகளிர் நிர்வாகிகள் பற்றியும் தகாத வார்த்தைகளில் விமர்சித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், திமுகவினரே, அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசியதை, மேடையில் இருந்த அமைச்சர் கண்டிக்காமல், அதற்கு ஆதரவு அளிப்பது போல் சிரிப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது. இதுபோன்று அரசியல் நாகரீகம் இல்லாமல் நடக்கும் கட்சி நிர்வாகிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

திமுக நிர்வாகியின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள குஷ்பு, இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், பாஜக பிரமுகர் குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு திமுக எம்பி கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ,”பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்கிறேன். யாராக இருந்தாலும் இதுபோன்ற பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது. தனது கட்சியும் தலைவர் ஸ்டாலினும், இதனை மன்னிக்க மாட்டார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…