சிறிது நேரம் அமைதி காக்கவும்… சனாதனத்திடம் வேறெதுவும் இல்லை ; ஆளுநர் ஆர்என் ரவிக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி..!!

Author: Babu Lakshmanan
1 July 2023, 6:19 pm

சனாதனம் குறித்து பேசிய ஆளுநர் ஆர்என் ரவிக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை – ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஆளுநர் ஆர்என் ரவி பேசியதாவது :- தமிழ்நாடு என்பது புனிதமான ஒரு இடம். இங்கு பல ஆன்மிக சிந்தனையாளர்கள் வாழ்ந்துள்ளனர். சனாதன தர்மம் துவங்கவும், பாரத் என்ற இந்த நாடு உருவாகவும் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது.

ஆங்கிலேயர்கள் பெயர் வைத்ததால் தான் இந்தியா என்ற பெயர் உருவானது. அதனால் தான் அரசியல் அமைப்பு சட்டத்தில் INDIA IS BHARAT என கூறப்பட்டுள்ளது. சனாதன தர்மம் மனிதர்கள் இடையே தீண்டாமையை ஒருபோதும் வலியுறுத்தவில்லை. இந்தியா ஒரு சனாதன நாடு. பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது என ரிஷி அரவிந்தோ தெரிவித்துள்ளார். சனாதன தர்மம் அதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை வலியுறுத்துகிறது, எனக் கூறினார்.

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :- ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை எனக் கூறியுள்ளார். அதோடு வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது.

அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை. தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை! நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும், என வலியுறுத்தியுள்ளார்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!