பாஜகவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது… தமிழ் மண்ணில் இருந்து துரத்தி அடிக்கப்படுவது உறுதி ; கனிமொழி ஆவேசப் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 8:41 am

தூத்துக்குடி ; இரண்டாவது இடத்தை பிடிக்க துடிக்கும் பாஜகவிற்கு, இந்த தமிழ் மண்ணில் இடமில்லை என்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணி கட்சிகள் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது :- நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சென்ற முறை இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது, கனிமொழி மறுபடியும் வெற்றி பெற்ற பிறகு தூத்துக்குடிக்கு வருவாரா என்று விமர்சனங்களை வைத்தார்கள். ஆனால், இன்று எனது இரண்டாவது தாய்வீடு தூத்துக்குடி என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த மக்களோடு இந்த மண்ணோடு கலந்து இருக்கக்கூடிய அந்த உறவை உணர்வை பெற்றிருக்கக் கூடியவளாக நான் உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கின்றேன். தொடர்ந்து உங்களுடைய அன்பு பாசம் என்பது என்னால் என்றென்றும் மறக்கமுடியாத ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்கும். அதனால்தான் மறுபடியும் உங்களோடு பணியாற்ற உங்களில் ஒருவளாக உங்களோடு நிற்கக் கூடிய வாய்ப்பை கேட்டுப் பெற்று இங்கே வந்திருக்கிறேன்.

இங்கே உரையாற்றியவர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார்கள், ஏன் ஒன்றியத்தில் ஒரு ஆட்சி மாற்றம் வரவேண்டும், இங்கே ஒரு பிடி அளவு மண் கூட பாஜகவிற்குச் சொந்தம் இல்லை என்று சொல்ல முடியாத, சொல்லக் கூடாத ஒரு நிலையை உருவாக்கிக் காட்ட வேண்டும்.

ஏனென்றால், இங்கே வரக்கூடிய நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் தேர்தல் நேரத்தில் வாரத்துக்கு மூன்றுநாள், நான்கு நாள் தமிழ்நாட்டுக்கு வருகிறார். ஆனால், இதுவரை தமிழ்நாடு சந்தித்து இருக்கக்கூடிய ஏதாவது பேரிடர் நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவதற்கு, மக்களுடைய துயரைத் துடைப்பதற்கு மக்களோடு நின்று பணியாற்றுவதற்கு வந்திருக்கிறாரா? வந்ததில்லை. அமைச்சர்களை அனுப்பினார், ஒரு ரூபாய், ஒத்த ரூபாய், தூத்துக்குடி மக்கள் வீடு இழந்திருக்கிறார்கள்.

வயல் வெளிகள் எல்லாம் அடித்துச் செல்லக்கூடிய அந்த அளவுக்கு மழை, ஆடு, மாடு, நம்முடைய மீனவ தோழர்கள் உடைய வாழ்வாதாரமே பாதிக்கப்படக்கூடிய நிலை என்று பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. வியாபாரிகள் சிறு குறு தொழில் செய்யக்கூடிய வரை அத்தனை பேரும் பாதிக்கப்பட்டார்கள் இழந்து நடுத்தெருவில் மக்கள் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்கள். ஒன்றிய அரசாங்கம் இன்று வரைக்கும் ஒரு ரூபா கொடுத்து இருக்கிறார்களா? கொடுக்கவில்லை.

நம்மைப் பற்றி அக்கறையில்லை, கவலையில்லை. நிதி அமைச்சர், அவர்களிடம் போய் பிச்சை எடுப்பதுபோல நம்மை அவ்வளவு தரக்குறைவாகப் பேசுகிறார். இப்படிப்பட்ட ஒருவர் தொடர்ந்து தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதிற்குத் தமிழர்களைப் பக்கத்து ஊரில் கர்நாடகாவில் ஒரு பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஏதோ கர்நாடகாவில் குண்டு போடுவதற்கும், அங்கே தீவிரவாதத்தை விதைப்பதற்குத் தான் அங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு தொனியில் பேசுகிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள், எதுவும் கிடையாது. ஏனென்றால், மக்களை பிரித்து மக்களுக்கு இடையே பிரச்சனைகள் குழப்பங்கள் வெறுப்பு இதைத்தான் அவர்கள் விதைத்த அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏதனையோ காலமாகத் தமிழர்களும், கர்நாடக மாநிலத்தில் இருக்கக் கூடிய மக்களும் ஒன்றாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வந்து பணியாற்றுகிறார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த மதமாக இருந்தாலும் எந்த மொழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இங்கே வாழக்கூடிய நிம்மதியாக வாழக்கூடிய, பாதுகாப்போடும் வாழக்கூடிய ஒரு நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

ஆனால், இதையெல்லாம் கலைக்கக்கூடிய வகையில் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள், நம்முடைய பிள்ளைகளுடைய எதிர்காலம் பாதுகாப்பு இல்லாமல் மாறக் கூடிய ஒரு சூழலை, எப்படி மணிப்பூரில் உருவாக்கி வைத்திருக்கிறார்களோ, எப்படி அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய அதனை மாநிலங்களிலும், குஜராத் கலவரங்களை உருவாக்கினார்களோ, அதைத் தமிழகத்திலே நடத்திப் பார்த்துவிட வேண்டும் என்ற கனவோடு அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக எந்த வழியில் தமிழ்நாட்டுக்குத் தொல்லை கொடுக்க முடியுமா…? நம்முடைய முதல்-அமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நல்ல ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய எல்லா மக்களுக்கும் உறுதுணையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது, நீ காசு கொடுத்தால் கொடு… கொடுக்காமல் போ.. நான் இருக்கிறேன் என்று மக்களைப் பாதுகாப்பதற்கு என்று நின்ற நம்முடைய முதல்-அமைச்சர், என்னென்ன வழிகளில் தொல்லை கொடுக்க முடியுமோ கொடுப்பதற்கு என்று ஆளுநர் போட்டு வெச்சிருக்காங்க. இந்த கவர்னரை கடைசியில் வழிக்குக் கொண்டு வர உச்சநீதிமன்றம் தான் சாட்டை எடுக்க வேண்டியிருந்தது. அண்ணன் பொன்முடி அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்ய மாட்டேன்னு ஏதோ உலகத்தில் சட்டங்கள் எல்லாத்தையும் கரைத்துக் குடித்தவர் மாதிரி பேசிக்கிட்டு இருந்தார்.

சுப்ரீம் கோர்ட் கூப்பிட்டு ஒரு மிரட்டல் போட்டதும், இன்றைக்கு இருக்கிற இடம் தெரியாமல் பதவிப் பிரமாணத்தைச் செய்துவிட்டு அடங்கி கிடக்கிறார். இப்படி ஒன்றொன்றுக்கும் வழக்காடு மன்றத்தை நாடித்தான் தமிழ்நாடு நியாயம் பெறவேண்டும் என்ற ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். யார் யார் எல்லாம் அவர்களுக்கு எதிராக எதிர்த்து கேள்வி கேட்கக் கூடியவர்களாக இருக்காங்களோ, அவங்க எல்லாம் சிறையில் அடைப்பது, வழக்குப் போடுவது, காங்கிரஸ் கட்சி உடைய கணக்கை, முடக்கி விட்டார்கள். தேர்தல் நேரத்தில் அவர்கள் பணம் எடுத்து செலவு பண்ணக்கூடாது.

எப்ப பார்த்தாலும் பயம், அவர்களைப் பார்த்து நம்ம பயப்படவேண்டும் என ஆசைப்படுறாங்க, நீங்க என்ன சிறைக்கு அனுப்பினால் என்ன பண்ணாலும் இந்த நாட்டு மக்கள் இனிமேல் உங்களுக்கு பயப்படுவதாக இல்லை, என்ன வந்தாலும் பார்த்துருவோம். எப்படி விவசாயிகள் தலை நிமிர் நினைக்கிறார்களோஇ இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனும் இந்த நாட்டில் எதிர்க்க எதிர்க்கத் தயாராகிவிட்டார்கள். வீட்டுக்கு போறதுக்கு பேக் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க. ஏனென்றால் விரைவிலே வீட்டுக்கு அனுப்பப் பட்டவர்கள் அனுப்பப்படுவீர்கள்.

இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள், நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவிற்குப் போடக்கூடிய வெடி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த தேர்தலில் களப்பணி ஆக இருக்கட்டும், வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து வாக்கு அளிப்பதாக இருக்கட்டும், அது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் தமிழ் நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற இந்த மண்ணிலே ஒரு இடத்தில்கூட பாஜக என்பதை இரண்டாவது இடத்தில் கூட வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு நாம் தேர்தலிலே பணியாற்ற வேண்டும், எனக் கூறினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 382

    0

    0