திமுக ஐடி விங் பஞ்சாயத்து… மகனுக்காக பொங்கிய தந்தை… திமுக எம்பி – டிஆர் பாலு மோதலா..?
Author: Babu Lakshmanan14 June 2022, 4:28 pm
தன் மகன் நிர்வகித்து வரும் திமுக ஐடி அணியின் செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்த சொந்த கட்சி எம்பிக்கு அக்கட்சியின் பொருளாளரும், அவரது தந்தையுமான சீனியர் நிர்வாகி கொதித்து போயிள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக திமுக அரசின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுமத்தி வருகிறார். ஆனால், திமுக அமைச்சர்கள் ஊழல் செய்ததாக சொல்லி, அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தார்.
மத்தியில் ஆளும் பாஜக அண்ணாமலைக்கு பின்புலமாக இருப்பதால், அவரை கட்டுப்படுத்த முடியாமல், திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பிலும், சமூகவலைதளங்களிலும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக, சுகாதாரத்துறையின் கீழ் வரும் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பவுடர் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக கூறிய அண்ணாமலையை விமர்சித்து திமுக ஐடி அணியின் தரப்பில் சில பதிவுகள் போடப்பட்டது. ஆனால், அந்தப் பதிவுகளுக்கு ஒரு சில நூறு பேர் மட்டுமே லைக்ஸ் கொடுத்திருந்தனர்.
சமூக வலைதளங்களில் திமுக வலிமையான கட்டமைப்பு கொண்டிருந்த போதிலும், அண்ணாமலையை விமர்சித்து போடப்பட்ட பதிவுக்கு லைக்ஸ்கள் வராதது அக்கட்சியினரிடையே சற்று ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. அதில் பெரிதும் ஏமாற்றம் அடைந்தவர் தர்மபுரி திமுக எம்எல்ஏ செந்தில்குமார்.
திமுக ஐடி அணியின் பதிவை சுட்டிக்காட்டி பதில் பதிவு போட்ட அவர், “தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணிக்கு, அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கைக்கு, ஒரு பதிவுக்கு, ஆறு மணி நேரத்தில், ஒரு லட்சம் பேர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால், அண்ணாமலைக்கு எதிரான பதிவுக்கு, ஆறு மணி நேரத்தில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் லைக்ஸ்களாவது வந்திருக்க வேண்டும். ஆனால், 240 லைக்குகள் மட்டுமே வந்துள்ளன,” எனக் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
திமுக எம்பி செந்தில்குமாரின் இந்தப் பதிவுக்கு பதிலளித்த ஐ.டி., அணி செயலரான, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு மகன் ராஜா, ‘ கடந்த சில மாதங்களாக ஐடி அணியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்த எம்பி செந்தில்குமார், ‘செயல்படாத நிர்வாகிகளை களையெடுத்தால் மட்டுமே, ஓர் பெரும் போர் படை திமுக மேல் பற்றுள்ள IT wing சமூக வலைதளத்தில் உருவாக்கிட முடியும். 24 மணி நேரமும் என்ன செய்தனர் என்பதை, தினமும் மாலை 6 மணிக்கு, ஐ.டி., அணி நிர்வாகிகளிடம் பெற வேண்டும், என்றும் அவர் யோசனைகளை அள்ளி வீசியுள்ளார்.
இது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தனது மகன் நிர்வகித்து வரும் திமுக ஐடி அணியின் செயல்பாடுகள் குறித்து, இவ்வளவு வெளிப்படையாக விமர்சிப்பதா..? என்று ஆத்திரமடைந்த அவர், இது தொடர்பாக எம்பி செந்தில் குமாரை கடிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், திமுகவினர் மீதான குறைகளை பொதுவெளியில் இனி இதுபோன்று விமர்சிக்காமல் இருக்குமாறு உத்தரவை போட முதலமைச்சர் ஸ்டாலினிடம் டி.ஆர் பாலு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.