செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பலம் கேடு விளைவிக்கும்… பாஜக – பாமக கூட்டணியை கிண்டலடித்த திமுக எம்பி..!!
Author: Babu Lakshmanan19 March 2024, 6:48 pm
பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்திருப்பதை திமுக எம்பி செந்தில் குமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பாமக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் இருந்து கொண்டே வந்தது. காரணம், அதிமுகவும், பாஜகவும் தங்கள் பக்கம் பாமகவை இழுக்க முழு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் பாமக இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக, பாஜவுடன் கூட்டணியை உறுதி செய்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு இழுபறிகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விழுப்புரம் தைலாபுரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பாஜக – பாமக இடையிலான நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தில் பாமக பத்து தொகுதிகளில் போட்டியிடுவதாக கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி, நாட்டின் நலன் கருதியும் மோடி நல்லாட்சி தொடரவும் தமிழ்நாட்டில் மாற்றங்கள் தொடர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர், சேலத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸும் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டனர்.
பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்ததை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், திமுக எம்பி செந்தில் குமாரும், கிண்டலடித்து X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “கோடை கால மருத்துவ அட்வைஸ்: இயற்கையாக பழுக்கும் #மாம்பழத்தை பருகுங்கள். செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழத்தினை கேடு விளைவிக்கும் என்ற அடிப்படையில் தவிர்ப்பது நன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.