வைகோவையே தூக்கி எறிந்தோம்… எம்ஜிஆர்-க்கே நாங்க கவலைப்படல… திமுக எம்பி ஆர்எஸ் பாரதி பேச்சு : கொந்தளிக்கும் மதிமுக..!!
Author: Babu Lakshmanan11 May 2022, 12:41 pm
திமுகவில் இருந்து வைகோவை தூக்கி எறிந்ததாக அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ். பாரதியின் பேசியது மதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்து தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பினார். தான் திமுக எம்பி கனிமொழியின் ஆதரவாளர் எனக் கூறி புறக்கணிக்கப்பட்டதாகவும், குடும்ப கட்சி பிடியில் திமுக உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து திமுகவினரிடையே அதிர்ச்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது. மேலும், பல தலைவர்கள் இது குறித்து தங்கள் பாணியில் விளக்கத்தை கொடுத்தனர்.
இந்த நிலையில், திருநின்றவூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த திமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதியிடம் திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :- எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போன போதே நாங்கள் கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். யார் வந்தாலும் யார் போனாலும் அதை பற்றி கவலையில்லை. தேம்ஸ் நதியைப் போல திராவிட முன்னேற்ற கழகம் 70 வருடங்களாக போய்க்கொண்டு இருக்கிறது. இன்னும் பல நூறாண்டுகள் போகும், எனக் கூறினார்.
ஆர்எஸ் பாரதியின் இந்தப் பேச்சு மதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சி தலைவரான வைகோவை இழிவுபடுத்துவது போன்ற கருத்தை, திமுக எம்பி ஆர்எஸ் பாரதி கூறலாமா..? என்றும், அவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்வதாகவும் மதிமுகவினர் கூறி வருகின்றனர்.