கனிமொழி ஆதரவாளர் என்பதால் புறக்கணிக்கப்பட்டேன்.. திமுகவில் எதிர்காலம் இல்லை : பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் பகீர்..!!
Author: Babu Lakshmanan9 May 2022, 10:31 am
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 30 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று பாஜகவில் இணைந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா தெரிவித்துள்ளார்.
திமுகவில் தனக்கும், தனது தந்தைக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று திமுக எம்பியும், மாநிலங்களவை திமுக குழு தலைவருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கூறி வந்தார். மேலும், திமுக மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால், கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி வந்தது.
தி.மு.க.,வின் திருச்சி சிவா எம்.பி., மகன் சூர்யா தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சென்னை, தி. நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. வில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் உண்மையாக உழைத்த எனக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை. திமுக சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவேதான் பாஜகவில் இன்று இணைகிறேன். எனக்கு திமுகவில் அங்கீகாரம் கிடைக்கக் கூடாது என்பதை அப்பா தடுத்தார் என்பது உண்மைதான்.
எனக்கு ஏன் அங்கீகாரம் வழங்கவில்லை என்று கேட்டால், நான் கனிமொழியின் ஆதரவாளர் என்கின்றனர். எனவே, எந்தக் காலத்திலும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுகவில் பல மாவட்டச் செயலாளர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட்டுகள் வழங்கப்படவில்லை. அதுவே, பலருக்கும் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில்தான் நான் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனவேதான் அங்கீகாரம் தராமல் உள்ளார்கள். ஆனால், பிராமண பார்வையில் பார்க்கக்கூடிய பாஜகவில் அதுபோன்ற சூழல் இல்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 30 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு மக்களின் மனநிலை இப்போது மாறிவிட்டது, என தெரிவித்தார்.