மக்களவைக்கு வராத திமுக எம்பியும் சஸ்பெண்ட்.. வெடித்த சர்ச்சை : 15 பேர் இல்லை.. சபாநாயகர் புதிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 9:32 pm

மக்களவைக்கு வராத திமுக எம்பியும் சஸ்பெண்ட்.. வெடித்த சர்ச்சை : 15 பேர் இல்லை.. சபாநாயகர் புதிய அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் நேற்று திடீரென சிலர் உள்ளே நுழைந்து புகை குப்பிகளை வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லோக்சபாவுக்குள்ளும் நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இதனை முன்வைத்து இன்று லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் இரு சபைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து ராஜ்யசபாவில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லோக்சபாவில் முதலில் ஜோதிமணி உள்ளிட்ட 5 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் கனிமொழி உட்பட மேலும் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் ஒரே நாளில் 15 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் லோக்சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்.பிக்களில் திமுகவின் எஸ்.ஆர். பார்த்திபன் எம்பி பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் எஸ்.ஆர். பார்த்திபன் இன்று சபை நடவடிக்கைகளில் பங்கேற்கவே இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்திருந்தார். இதுவும் புதிய சர்ச்சையாக வெடித்தது.

லோக்சபாவில் இல்லாத ஒரு எம்பி, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி எப்படி சஸ்பெண்ட் செய்ய முடியும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எஸ்.ஆர். பார்த்திபன் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டது.

மொத்தம் 13 எம்.பிக்கள் மட்டுமே லோக்சபாவில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இப்பட்டியலில் இருந்து எஸ்.ஆர். பார்த்திபன் பெயர் நீக்கப்பட்டுவிட்டது என்றார். இதனால் இந்த சர்ச்சை ஓய்ந்தது.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!