மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த திடீர் சோதனை… தயா அழகிரியை களமிறக்க திமுக திட்டம்…? அதிர்ச்சியில் கூட்டணி கட்சி எம்பி..?

Author: Babu Lakshmanan
18 January 2023, 6:13 pm

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அண்மையில் மதுரைக்கு வந்திருந்த அமைச்சர் உதயநிதி, தனது பெரியப்பா மு.க. அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

அதேநேரம் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய எம்பி
சு வெங்கடேசனுக்கும், அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இது
ஒரு விதத்தில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

குடும்பம்

சொந்த, பந்த உறவுக்கு அப்பாற்பட்டு அரசியல் ரீதியாக அமைச்சர் உதயநிதியும், அழகிரி குடும்பத்தினரும் மனம் விட்டு பேசிக் கொண்டது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏனென்றால் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 2014 மார்ச் 25-ம் தேதி திமுகவிலிருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பிறகு, அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு, பல ஆண்டுகள் நீடித்தது.

என்றபோதிலும் 2021சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக ஆன பிறகு, அழகிரியும் அவருடைய குடும்பத்தினரும் மெல்ல மெல்ல மீண்டும் சகோதர பாசத்தில் நெருக்கம் காட்டத் தொடங்கினர்.

இந்த நிலையில்தான், உதயநிதி கடந்த மாதம் 14-ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். அதன் பின்னர், இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் மதுரைக்கு சென்றபோது முதல் முறையாக தனது பெரியப்பா அழகிரியை அவருடைய வீட்டுக்கே போய் சந்தித்து பேசவும் செய்தார்.

அப்போது அழகிரி வீட்டு வாசலில் காத்திருந்து உதயநிதியை வரவேற்று அழைத்துச் சென்றது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதனால் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்படுவாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை தொகுதியில் திமுகதான் போட்டியிட வேண்டுமென்ற குரல்களும் பலமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

இதன் அர்த்தம், கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சிக்கும் மதுரை தொகுதியை திமுக தலைமை ஒதுக்கி விடக்கூடாது என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.

மதுரை

இதற்கு முக்கிய காரணம், தென் மாவட்டங்களில் மதுரை எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகவே இருந்து வருவதுதான். அதனால் மதுரை அரசியல் நகர்வுகள் தொடர்ந்து கூர்ந்து கவனிக்கப்பட்டும் வருகிறது. தவிர மதுரையை கைப்பற்ற கடும் போட்டியும் நிலவும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன என்பதும் கண்கூடு.

மதுரையை பொறுத்தவரை அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே கைப்பற்றியிருந்தாலும், 2009ல் அழகிரி வெற்றி பெற்றபோது, அமைச்சர் தொகுதி என்ற பெருமையையும் மதுரை பெற்றது.

அப்போதைய மத்திய அமைச்சர் அழகிரி தேசிய அரசியலில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் கூட மதுரைக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று திமுகவினர் கூறுகின்றனர். 2014 தேர்தலில், தனித்தே போட்டியிட்ட அதிமுக மதுரை நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்றியது.

2019-ல் மதுரையை பலர் குறி வைத்தாலும், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்டுக்கு ஸ்டாலின் ஒதுக்கினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் தியாகராஜன் என மதுரை திமுகவுக்குள் ஏராளமான கோஷ்டி மோதல் நிலவுகிறது. இந்த பூசலை தகுந்த சமயத்தில் பயன்படுத்திக் கொண்டு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ஆதரவாளர் நாகராஜனுக்கு துணை மேயர் பதவியை வாங்கிக் கொடுத்து விட்டார் என திமுகவினர் புலம்பி வருகின்றனர்.

அழுத்தம்

எனவே, இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு மதுரையை தாரை வார்த்து விடக்கூடாது என திமுக தலைமைக்கு அவர்கள் இப்போதே கடும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அறிவாலயமும் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

இது போன்ற சூழ்நிலையில்தான் உதயநிதி, தனது பெரியப்பா அழகிரியை சந்தித்துள்ளார். அவரது மகன் தயா அழகிரிக்கும், உதயநிதிக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இருவருமே, திரை உலகைச் சார்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தவிர ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றபோதும், உதயநிதி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டபோதும் தயா அழகிரி அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவர்களது வாரிசுகளுக்கெல்லாம் பதவி கொடுக்கப்படுகிறது. இருந்தபோதும் கூட மு.க.அழகிரி மிகுந்த அமைதி காத்து வருகிறார்.

எனவேதான் அவரை திமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும். தென் மாவட்டங்களை வலுப்படுத்தும் விதமாக, கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும். அவரது மகன் தயா அழகிரியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் அல்லது மாநில அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற பேச்சுகள் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவின் திட்டம்

இதனால் மதுரை தொகுதியில் தயா அழகிரிக்கு எம்.பி., சீட் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக திமுகவினர் தரப்பில் பேசப்படுகிறது. அதேநேரம் மாநில அரசியலுக்கு அவரை கொண்டு வந்தால் பின்நாட்களில் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பிரச்சினை போல, உதயநிதிக்கும், தயா அழகிரிக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என கருதி, தயாவை டெல்லிக்கு அனுப்பவும், அழகிரியை கட்சிக்குள் கொண்டு வந்து மதுரையில் நிலவும் திமுக கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஸ்டாலின் வீட்டில் பேசப்பட்டு வருவதாகவும், இதன் பின்னணியில்தான் உதயநிதி தனது பெரியப்பாவை அவருடைய வீட்டுக்கே சென்று சந்தித்து பேசி இருக்கிறார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த செய்திதான் தற்போதைய மதுரை எம்பி வெங்கடேசனுக்கும், அவர் சார்ந்த கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில், மதுரை தொகுதிக்கு என்று எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளையும் வெங்கடேசன் எம்பி கொண்டு வரவில்லை. அதில் பெரிதாக எந்த ஆர்வமும் காட்டவில்லை. மாறாக தன்னை சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்திக் கொள்வதில்தான் அக்கறை கொண்டு இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர் மீது திமுகவினர் வைக்கின்றனர்.

இதுதான் சு வெங்கடேசன் எம்பிக்கு, மதுரை தொகுதியை மீண்டும் ஒதுக்குவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்கிறார்கள்.

அதேநேரம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமைக்கோ வேறொரு சந்தேகமும் எழுந்துள்ளது. மதுரை தொகுதிக்கு பதிலாக வேறு ஒரு தொகுதியை திமுக கொடுக்குமா? அல்லது 2024 தேர்தலில் ஒரு தொகுதியோடு நிறுத்திக் கொள்வார்களா?… என்பதுதான் அது. திமுக கூட்டணிக்கு வேறு சில கட்சிகள் வருவது உறுதி என்று கூறப்படும் நிலையில் தமிழகத்தில் காங்கிரசுக்கு 5, விசிக, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என்று ஒரு பேச்சும் உள்ளது.

2024 தேர்தலில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிட ஒரேயொரு தொகுதி தான் கிடைக்கும் என்பது அக்கட்சியின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது. முன்பு போல தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தவும் முடியாது என்ற பாதக சூழலையே ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.

என்னடா, இது மதுரைக்கு வந்த சோதனையால் இவ்வளவு வேதனைகளா? என்று மார்க்சிஸ்ட் தோழர்களில் சிலர் முணுமுணுப்பதும் காதுகளில் விழுகிறது!

  • Vimal shares Kalavani movie experienceநடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
  • Views: - 512

    0

    0